கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலே மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் அவர் இதுவரை காவேரி மருத்துவமனைக்கு வரவில்லை.
இதையடுத்து, இன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கருணாநிதிக்கு கல்லீரல் செயல்பாடு குறைந்து வருவதாகவும், இதனால் மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானதையடுத்து பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து திமுக தலைவரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் முதல் முறையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு தயாளு அம்மாள் இன்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கருணாநிதி பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளை ஏற்றும் வசதி கொண்ட வேனிலேயே, தயாளு அம்மாளும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் பத்துநாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று திடீர் என தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதா என பலரும் குழம்பி வருகின்றனர்.