மறுபிறப்பு பற்றி உலகில் பலரும் பல்வேறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சிலர் நம்புவார்கள், சிலரோ நம்பமாட்டார்கள். இவற்றுக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டுமானால் கருடபுராணத்தைப் பற்றி அனைவரும் தெரியவேண்டியது அவசியம்.
இந்த கருடபுராணத்தில் உயிர்களின் மறுபிறவி பற்றி அனைத்து விடயங்களும் கூறப்பட்டுள்ளது. முதலில் “கருட புராணம்” என்றால் என்ன என்பதை நோக்குவோம்.
பரம்பொருளான விஷ்ணு பகவான் தனது வாகனமான கருடாழ்வார் மீது அமர்ந்து உலகை சுற்றிப்பார்த்தார்.
அப்பொழுது கருடன் விஷ்ணுவை நோக்கி “சுவாமி மனிதர்களின் இறப்பின் பின் என்ன நடக்கும்? இவர்களது உயிர் எங்கு செல்லும், இறப்பின் பின்னர் நடப்பது என்ன?” என்ற கேள்விகளை கேட்டது.
இதற்கு விஷ்ணுபகவான் வழங்கிய பதில்களே கருட புராணம் ஆகும். இந்த கருட புராணத்தில் இறப்பின் பின்னர் உயிர்கள் எங்கு செல்கின்றது, என்ன செய்கின்றது, சுவர்க்கம், நரகம், போன்ற அனைத்து விடயங்களும் மற்றும் மறுபிறவி பற்றிய விடயங்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அடிப்படையில் மாறாதது விஞ்ஞானம், ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் மாறுபட்ட வெளிப்பாட்டின் தோற்றம். இதை அனைவரும் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால் மறுபிறவி உண்டு என்பதையும், உடல் அழியக் கூடிய ஒன்று, ஆன்மா அழிவற்ற ஒன்று என்பதை மனிதன் உணர்ந்து விடுவான். இதை உணர்ந்தால் மரண பயத்திலிருந்தும் விடுபட முடியும்.
அழியாத ஆன்மா அழியக் கூடிய உடலில் ஏன் வாசம் செய்கின்றது?
உயிருக்கு அழிவில்லை என்றால் மரணம் என்ற ஒன்று ஏன் ஏற்பட வேண்டும்?
இதற்கு பரமாத்மா மகாபாரதத்தில் அர்ஜூனருக்கு மிகத் தெளிவாக விபரித்துள்ளார். அதாவது “நீர் H2O” இல் ஹைட்ரஜன் வாயு ஒரு பங்கும், ஒட்சிசன் இரண்டு பங்கும் உண்டு. இரண்டும் வேறு வேறாக இருந்துதான் ஒன்று சேர்ந்தது. ஒன்று இன்றி ஒன்று இல்லை. அதே போல்தான் உலகில் உயிர்கள் தோற்றம் பெற்றன.
மனிதன் எவ்வாறு குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்குச் சென்று, மீண்டும் இளமைப் பருவத்திலிருந்து முதுமைப்பருவத்தை அடைகின்றானோ, அதே போல் ஆன்மாவும் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாறுகின்றது.
உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா வேறு உலகத்திற்குச் செல்கின்றது. அவ்வாறு செல்ல முடியாத ஆன்மாக்களே சாந்தியடைய முடியாமலும், இறைவனை அடைய முடியாமலும் சபிக்கப்பட்டதைப் போன்று ஆவியாகின்றன.
இந்த ஆன்மாக்கள் இறைவனை அடைவதற்கு எத்தனை துன்பங்களை எதிர்நோக்குகின்றன, மனிதனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அவனது மறு பிறப்பு அமைகின்றது. இவை பற்றிய கருட புராணம் விரிவாக கூறுகின்றது.
உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா அடுத்த பிறப்பில் எந்த பிறவி எடுக்கின்றான், எங்கு பிறக்கின்றான் என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் மறுபிறப்பை நிர்ணயிப்பவன் எமதர்மன். ஆகவே மறு பிறப்பு என்பது உண்மையான ஒன்று. கருட புராணத்தை படித்தோர் இதை அறிவர்.