கன்னி – விகாரி வருட பலன்கள் 2019-2020 !

0

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் குஷியான மனநிலையுடனும், தெம்புடனும் செயல்படுபவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே! உங்களுக்கு என் இதயத் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

சனி 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதும் சர்பகிரகங்களான ராகு, கேதுவும், குரு பகவானும் சாதகமின்றி சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவதே நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத பண வரவுகள் உண்டாவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் பல தடை தாமதங்களை சந்தித்தே அனுகூலப்பலனைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களால் பல நற்பலன்களை அடைய முடியும்.

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் சாதமான அமைப்பு என்று கூற முடியாது. கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் என்றாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கை, கால் அசதி சோர்வு போன்றவை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
இந்த ஆண்டில் குடும்பத்தில் சற்று சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது, கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்
பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சினைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.

அரசியல்
பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிகம் பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த லாபங்களையும் தடைகளுக்குப் பின் பெற்று முன்னேற்றங்களை அடைய முடியும். கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத தனவரவு உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெற சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

மாதப்பலன்
சித்திரை
உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளும் காரியங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் உதவியால் அனுகூலங்களை அடைவார்கள். வண்டி வாகனங்கள் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். சிவ பெருமானை வழிபடவும்.

வைகாசி
மாத கோளான சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ள கூடிய நற்பலன் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரேக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்லதொரு ஏற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் லாபங்கள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் திருப்திகரமான நிலையில் இருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்வது சிறப்பு.

ஆனி
சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும், 7-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் உதவியால் நல்லது நடக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாகப் பணியாற்ற முடியும். ஊதிய உயர்வுகள் தடையின்றி கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆடி
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி
விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டவாதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களால் நிம்மதிக் குறைவு ஏற்படக்கூடும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 11-ல் புதன் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படக்கூடும் என்பதால் பெரிய முதலீடுகள் ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

புரட்டாசி
ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 10-ல் ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்-. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளும் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சந்தித்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிவ வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

ஐப்பசி
புதன், சுக்கிரன் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. 19-ஆம் தேதி முதல் குரு 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

கார்த்திகை
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்பு இம்மாதத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கடன்களும் குறையும். கொடுக்கல்- வாங்கல் சிறப்படையும். 4-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறுவர். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

மார்கழி
சுக ஸ்தானமான 4-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வரும் 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

தை
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 5-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கூட்டாளிகள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகளைப் பெற முடியும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். விநாயகரை வழிபடுவது நல்லது.

மாசி
மாத கோளான சூரியன், ராசியாதிபதி புதன் சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றவதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.

பங்குனி
ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்– மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிவ வழிபாடு தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,7,8
நிறம் – பச்சை, நீலம்
கிழமை – புதன், சனி
கல் – மரகத பச்சை
திசை – வடக்கு
தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை தமிழ் சிறுமியின் கதறல்! நடந்த கொடுமை என்ன தெரியுமா!
Next articleகுழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்!