கட்டில் பேசுகிறது புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kattil pesugirathu!

0

கட்டில் பேசுகிறது புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kattil pesugirathu!

கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து, என்னைக் கொண்டுபோய்க் கிடத்தினார்கள்.

எனது இரண்டு பக்கங்களிலும் என்னைப் போல் பல நோயாளிகள். முக்கலும் முனங்கலும் நரகத்தின் உதாரணம் மாதிரி.

ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம்.

ஹாலின் மத்தியில் ஒரு மின்சார விளக்கு; தூங்கும்பொழுது கண்களை உறுத்தாதபடி அதற்கு மங்கலான ஒரு ‘டோம்’.

அதன்கீழ் வெள்ளை வர்ணம் பூசிய ஒரு மேஜை, நாற்காலி.

அதில் வெள்ளுடை தரித்து, ‘ஆஸ்பத்திரி முக்கா’டிட்ட ஒரு நர்ஸ் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறாள்.

ஒன்றையும் பற்றாமல் சலித்துக்கொண்டிருக்கும் மனம்.

ஐயோ! மறுபடியும் அந்த வயிற்றுவலி. குடலையே பிய்த்துக் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! ஒரு கையால் வயிற்றை அமுக்கிக் கொண்டு ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தேன். சீ! ‘ஸ்பிரிங்’ கட்டிலாம்! என்னமாக உறுத்துகிறது!

சற்று அயர்வு

என்ன வேடிக்கை! கட்டில் என்னுடன் பேசுகிறது!

“என்ன வோய்! என் ‘ஸ்பிரிங்’கிற்கு என்ன குறைச்சல்? நீர் நாளைக்கு ரொம்ப… என்னிடம் வருகிறவர்களை, மரியாதையாக நாலு பேரோடு, சங்கு சப்தம் அல்லது வேத மந்திரம் சகிதமாகத்தான் நீண்ட பிரயாணமாக அனுப்புவது! என்ன, அர்த்தமாச்சா? உமக்கும் அந்த வழிதான்!

“ஹி! ஹி! ஹி!”

என்ன கோரமான பிசாசுச் சிரிப்பு!

மறுபடியும்

“இன்னும் சந்தேகமா? நம்ம ‘டயரி’யை வாசிக்கிறேன், கேளும்!”

“உம்”

“ஒரு ரஸமான காதற் கதை சொல்லட்டுமா?

“ஒரு வாலிபன். நல்ல அழகன். விஷம் உள்ளே போனதால் குடல் வெந்து புண். என் மடியில்தான் கிடத்தினார்கள். எங்கள் டாக்டர் பெரிய அசகாய சூரர்; இரண்டாவது பிரம்மா.

புண் குணப்பட்டுத் தான் வருகிறது. ஆள்தான் கீழே போய்க் கொண்டிருக்கிறான். டாக்டர் முழிக்கிறார். எனக்குத் தெரியும் அவன் கதை; அவருக்குத் தெரியுமா?

இரண்டு வாலிபர்கள், ஆனால் பெண் ஒருத்தி, இருவருக்கும் அவள் பேரில் ஆசை. அதிர்ஷ்டச் சீட்டு இவனுக்கு விழுந்தது. ஆனால் பெண் அவனைக் காதலிக்கிறாள்.

“பிறகு என்ன! அவனுக்குக் காதல், பெண், பஞ்சணை; இவனுக்குச் சோகம், விஷம், நான்! இவன் காதல் தெய்வீகமானது. காரியம் கைகடந்த பின் தெரிந்திருந்தாலும்,

திருமணம் என்று சொல்லுகிறார்களே அந்த மாற்றமுடியாத உரிமை, அதையுங்கூட விட்டுக் கொடுத்திருப்பான் – அவள் வாழ்க்கையின் இன்பத்தைப் பூர்த்தியாக்க, ‘அவள் கை விஷத்தால் சாகிறோம்’ என்ற குதூகலம் இருந்தால்,

பாரேன்! பிறகு அன்று ராத்திரி மூடிய கண் சிறிது திறந்தது. ஒரு புன்சிரிப்பு. உதட்டின் மேல் அவள் பெயர். காற்றிற்கு ஒரு முத்தம். அவ்வளவு தான்!

“நன்றாயிருக்கிறதா?

“பிறகு அவன் சிறு பையன். சத்தியாக்கிரகி வயிற்றில் தடிக் கம்புக் குத்து. அவனுக்கும் வைத்தியம் நடந்தது. பாவி எமனும் அவனைப் பாத்துத்தான் அன்ன நடை நடக்கிறான்!

பையனுக்குச் சாவின் மேல் எவ்வளவு ஆசை! நெஞ்சில் குண்டுபடவில்லையே என்ற பெரிய ஏக்கம். அதே புலம்பல்தான். என் கையில் ஒரு துப்பாக்கி இருந்தால் சாவைக் கண்டதும் என்ன உற்சாகம்!

காதலியைக் கண்டது போலத்தான். என்னமோ, ‘ஸுஜலாம், ஸுபலாம்’ என்று ஆரம்பித்தான். குரல்வளையில் கொர்ர் என்றது பிறகு என்ன? அவன் தாயாராம், ஒரு விதவை; என்ன அழுகை அழுதாள்! – கருமஞ் செய்யத் தனக்கு ஆள் இல்லை என்றோ!

“ஹி! ஹி!! ஹி!!!

“இன்னும் ஒன்று சொல்லுகிறேன், கேள்…

“ரத்த பேதி கேஸ். அவன் ஒரு மில் கூலி. அப்பொழுது ‘ஸீஸன் டல்’ என் மேல்தான் கொண்டு வந்து கிடத்தினர். கூட நஞ்சானும் குஞ்சானுமாக எத்தனி உருப்படி! இத்தனைக்குமேல் இவனுடைய ஆயா ஒரு கிழவி.

டாக்டர் வந்தார். வந்துவிட்டதையா கோபம்! ‘கழுதையை இழுத்துக் கீழே போடு!’ என்று கத்தினார். நானா விடுகிறவன்? ஒரே அமுக்கு ஆளை ‘குளோஸ்’ பண்ணித்தான் விட்டேன்!

“வேறு என்ன?

“நான் யார் தெரியுமா? சூ! கோழை, பயப்படாதே!

“நான் ஒரு போல்ஷிவிக்கி (அபேதவாதி)!

“ஹி! ஹி! ஹி!…”

மறுபடியும் அந்தக் கோரமான கம்பிப்பல் சிரிப்பு! யாரோ என்னை எழுப்பினார்கள்.

“ஏன் முனங்குகிறாய்? தூக்கம் வரும்படி மருந்து தரவா?” என்றாள், என் மேல் குனிந்து கொண்டிருந்த நர்ஸ்.

எங்கோ டக், டக், டக் என்ற பூட்ஸ் சப்தம். டாக்டரோ?

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநிர்விகற்ப சமாதி புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – nirvikatpa samaathi!
Next articleகொ-லை(காரன்) கை புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – kolaikaran kai!