என்னை போல எந்தவொரு தாயும் இனி அழக்கூடாது என புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலேகநாதன் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த வித்தியா தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘என் மகள் வித்தியாவுக்காக கஷ்டப்பட்டவர்கள், அடிவாங்கியவர்கள் அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகிறேன்.
நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி. சட்டத்தரணிகளுக்கு நன்றிகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக வித்தியாவுக்காக குரல் கொடுத்த ஊடகங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எங்களுக்காக குரல் கொடுத்த அனைவரும் இரு கரம் கூப்பி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னை போல ஒரு தாய் இனி யாரும் அழக்கூடாது.வித்தியாவுக்கு நடந்த கொடுமை போன்றும் இனி யாருக்கும் நடக்க கூடாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இன்று 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.