இறைவன் படைத்த இந்த பிரம்மாண்ட உலகத்தில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் அவர் வகுத்த இன்பத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் உயிர்கள் பிறக்கும்போது தனக்கான பலன்களை தானே நிர்ணயம் செய்து கொள்கின்றன. இன்பத் துன்பங்கள் என்பது உயிர்களால் விளைந்த நன்மை தீமைகளால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாகும்.
அனைத்து உயிர்களிலும் மேம்பட்டது மனித உயிரினம் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் மற்ற உயிர்களை காட்டிலும், மனிதர்கள் செய்யும் செயலின் தன்மையை அறிந்து செயல்படக்கூடியவர்கள். ஒரு செயலினால் தீமை விளையுமாயின் அதை நம்மால் மாற்றிக்கொள்ள இயலும். ஆகவேதான் பிறப்பினும் உயர்ந்த பிறப்பு மனிதப்பிறப்பு என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர். அதுவே நிதர்சன உண்மையும்கூட.
மனிதப்பிறப்புகளில் திருமணம் என்பது முக்கிய அத்தியாயத்தில் ஒன்றாகும். திருமணத்தினால் சந்ததி விருத்தி மட்டுமல்லாமல் அந்த மனிதப்பிறப்பிற்கு ஒரு புதுவிதமான இன்பம் அவ்விடத்தில் உருவாகின்றது. அந்த இன்பம் அவருடைய வாழ்க்கையில் மாற்றமான சூழ்நிலைகளையும், தகுந்த பாதுகாப்பையும், ஆதரவையும் உருவாக்கக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு திருமண உறவு அமைவது என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், அதிலும் சிலர் அதை தக்க வைக்க இயலாமலும் அல்லது பெற முடியாமல் தவிப்பவர்களும் இருக்கின்றனர். ஒருவருக்கு நடைபெறும் இன்பம் துன்பம் என்பது அவர் செய்த கர்மவினையின் அடிப்படையில் நிகழ்வதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இன்று தவறு செய்தால் இப்பிறவியில் தண்டனை கிடையாது என்பதை உணர்ந்து செய்கின்றோம். அதற்கான தண்டனை என்பது அடுத்த பிறவியில் இறைவன் அருள்வான் என்பதை நாம் உணர வேண்டும். இதை உணர்த்தவே நம் முன்னோர்கள் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் ஒருவரின் ஜாதகத்தில் அவருக்கு திருமணம் நடைபெறுமா அல்லது தாமதப்படுமா? அல்லது அவர் என்றுமே தனிமையில் இருக்கக்கூடியவர் என்பதை அறிந்து கொள்ள இயலுமா? எனில் முற்றிலுமாக அறிந்து கொள்ள இயலும்.
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர பாவகம், சுகஸ்தானம் மற்றும் குடும்ப பாவகமும் பாவ கிரகங்களின் சேர்க்கையாலும், பார்வையாலும் பாதிக்கப்பட்டு இருக்குமாயின் அவருக்கு திருமணம் காலம் கடந்தே நடைபெறும் அல்லது நடைபெறாமலும் போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.