இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்று வந்தவர்களின் விவரங்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கியூ பிரிவு பொலிசார் நடத்திய சோதனையில் பலர் போலி முகவரியில் போலி பாஸ்போர்ட் உதவியுடன் இலங்கைக்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் பூந்தமல்லியில் பிடிபட்ட இலங்கையை சேர்ந்த 2 நபர்களும் போலி பாஸ்போர்ட் உதவியுடன் சென்னை வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.5 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை போலி பாஸ்போர்ட்டுகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை, திருச்சி கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த கலையரசி, ராதாகிருஷ்ணன், கிருபா உட்பட 13 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையை சேர்ந்த சுரேந்திரன்(39), அரிகரன்(33), நிஷாத்தன்(35) ஆகிய 3 பேரை கியூ பிரிவு பொலிசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.




