நான்கு வயதுக் குழந்தை ஒன்றை மலைப் பாம்பு ஒன்று உண்பதற்காக பற்றிப் பிடித்த போது, அதனுடன் போராடி குழந்தையை மீட்டெடுத்துள்ளனர் குழந்தையும் தாயும், வளர்ப்பு நாயும்.
இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம் புத்தல பிரதேசத்துக்கு அண்மித்த கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கணவன் கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் மனைவியும் நான்கு வயதுக் குழந்தையும் இருந்துள்ளனர். முற்றத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கம் போது சம்பவம் நடந்துள்ளது.
”திடீரென்று வீட்டின் பின்புறம் குழந்தை வீரிட்டு அழும் ஓசை கேட்டது. நாயும் குரைத்துக் கொண்டிருந்தது. நாய் தான் பிள்ளையைக் கடிக்கின்றதோ என்ற பதற்றத்தில் ஓடிய போது அங்கு கண்ட காட்சி என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஒரு பெரிய மலைப்பாம்பு எனது பிள்ளையைச் சுற்றிக்கொண்டிருந்தது. செய்வதறியாது உதவிக்கு யாராவது வருவார்களா என்று அலறினேன். யாரும் வரவில்லை. உடனடியாக அந்த மலைப் பாம்புடன் நானும் எமது நாயும் போராடி குழந்தையை மீட்டுவிட்டோம்” என்று தாய் தெரிவித்துள்ளார்.




