காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து ஆறு மில்லியன் ரூபா கப்பம் பெற முயற்சித்த நிலையில் பாடசாலை மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபாவையும், அதே பகுதியை சேர்ந்த மற்றுமொருவரிடம் 10 இலட்சம் ரூபாவையும் கப்பமாக பெற முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களான, மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை சிறுவர் தடுப்புக்காவலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் உத்தரவிட்டார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தின் பல்லெகம, மொரகெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கப்பம் கேட்டு அச்சுறுத்திய தொலைபேசி இலக்கங்களை, தொழிநுட்ப உதவியின் மூலம் இனங்கண்டு மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, மறைந்திருந்த இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் பல இளம் யுவதிகளுடன் காதலில் ஈடுபட்டுள்ளதுடன், அது தொடர்பான புகைப்படங்களை காண்பித்து அவர்களையும் அச்சுறுத்தி கப்பம் கோர முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.