திருத்தணி அருகே தாயும், மகனும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி அருகே பி.டி.புதூரைச் சேர்ந்தவர் வனப்பெருமாள் தனியார் டயர் தயாரிக்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி (40), மகன் போத்திராஜ் (10) அருகில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ம் தேதி காலை வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் மனைவி வீரலட்சுமி, மகன் போத்திராஜ் ஆகியோர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் பீரோவில் இருந்த 21 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக 6 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து வெங்கடேசன் என்ற பால் வியாபாரி தான் கடைசியாக அந்த வழியாகச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து வெங்கடேசனை பிடித்து பொலிசார் விசாரித்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால், கடன் தொல்லை அதிகரிக்கவே கொள்ளையடிக்க திட்டமிட்டேன் வெங்கடேசன் கூறினார். அதன்படி நன்கு பழகிய பக்கத்து வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்த வெங்கடேசன், திங்கள் கிழமை அதிகாலை வாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக பின்புறக் கதவை திறந்து வீரலட்சுமி தண்ணீர் எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். முகமூடி அணிந்து கொண்டு பின் புறக் கதவு வழியாக உள்ளே நுழைந்த போது சத்தம் கேட்டு வீரலட்சுமி அங்கு வரவே, நகைகளை கொடுக்குமாறு வெங்கடேசன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
தனது குரலை அறிந்து கொண்டு வீரலட்சுமி கூச்சலிட்டதாகவும் அப்போது போத்திராஜ் எழுந்து அவரது தந்தைக்கு செல்போனில் அழைப்பு விடுக்க முயற்சித்ததால் தான் கொலை செய்ய நேரிட்டதாகவும் வெங்கடேசன் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரும்புக் கம்பியால் தாக்கி வீரலட்சுமியையும், அயர்ன் பாக்ஸ் வயறை வைத்து கழுத்தை இறுக்கி போத்திராஜையும் கொலை செய்ததாக வெங்கடேசன் பொலிசாரிடம் கூறியுள்ளார்.