யாழ். செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிசாந்தி குமாரசுவாமியின் 22ஆவது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு செம்மணி படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் ஞா.கிஸோரின் ஏற்பாட்டில், வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர் வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொது ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், கே.சயந்தன், ஆர்.ஜெய்சேகரம் உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கிரிசாந்தியின் உடலை புதைத்த இடத்தினை கண்டுபிடிக்க உதவிய ஆசிரியர், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில், கிரிசாந்தியை தேடிச் சென்ற போது படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் தாய் மற்றும் சகோதரனுக்கும், உறவினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதியாக கிரிசாந்தியின் நினைவாக 40 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
1996ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி, இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது