குரு பகவான் தற்போது சஞ்சரிக்கும் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இம்மாத இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகிறார்.
நவக்கிரகங்களிலே நூறு சதவிகிதம் சுபக்கிரகம் குரு. தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு காரணகர்த்தா.
தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் பல யோகங்கள் தங்குதடையின்றி அமையும்.
திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். இந்த குரு பெயர்ச்சியால் நன்மை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் என்பது பற்றி பார்க்கலாம்.
குரு பயோடேட்டா
சொந்த வீடு: தனுசு – மீனம்
உச்ச வீடு : கடகம்
நீச்ச வீடு : மகரம்
கிழமை : வியாழன்
தேதி : 3, 12, 21, 30
நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம் : தூய மஞ்சள்
ரத்தினம் : கனக புஷ்பராகம்
உலோகம் : தங்கம்
தானியம் : கொண்டைக்கடலை
ஆடை : மஞ்சள்
தசாபுத்தி காலம்: 16 ஆண்டு
அதிதேவதை : தட்சிணாமூர்த்தி
குரு பார்வை
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும்.
குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர்.
குரு பகவான் கோச்சாரத்தில் சுற்றி வரும் போது அவர் ஒரு ராசியை 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பார்க்க கோடி நன்மை.
மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை.
அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம்.
இந்த குரு பெயர்ச்சி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நிகழப்போகிறது.
குரு அமருவதைப் பொறுத்தும் பார்வையைப் பொறுத்தும் மேஷம், மிதுனம், சிம்மம் விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அடையப்போகிறார்கள்.
கிரக தோஷங்கள் நீங்கும்
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது.
வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும்.
செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும்.
மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருவிற்கு பரிகாரம்
குருவுக்கு உரிய திகதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும்.
மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும்.
குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும்.
அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம்.
அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.