ஆவா குழுவின் உறுப்பினர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து கடந்த மே மாதம் 7ம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் குறித்த இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்திருந்த நிலையில், அவர்களின் மோட்டார் வண்டியும் கிணறு ஒன்றில் தூக்கி வீசப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஆவா குழுவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் இன்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.




