சில தினங்களுக்கு முன்பு தன் காலில் ஆப்ரேசன் செய்து கடத்திய பெண்ணை பார்த்திருப்போம். அவர் பிடிபட்டது, பேசுபொருளானது. இப்போது அதை மிஞ்சுவது போல் ஒரு சம்பவம் கேரளத்தின் கொச்சின் விமானநிலையத்தில் நடந்துள்ளது .
நடிகர் சூர்யா நடித்த அயன் படத்தில் நூதன முறையில் சூர்யா விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பொருள்களை கடத்துவார். அதேபோல் தான் இங்கும் நடந்தது. ஆனால் இளைஞர் மாட்டிக்கொண்டார். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை கொச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அலார்ட் செய்யப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்து வெளியேறி சென்ற ஒரு இளைஞரின் தலை கொஞ்சம் வினோதமாக இருந்தது.
உடனே அதிகாரிகள் அவரை சந்தேகப்பட்டு நிறுத்தினர். அப்போதுதான் அது நிஜ முடியல்ல…விக் எனத் தெரிய வந்தது. அந்த விக்கை கழற்றிய போது அதில் ஒரு கிலோ தங்கக்கட்டி இருந்தது. தங்கக்கட்டியை மறைத்து வைக்க வசதியாக அந்த இளைஞர் தலையின் நடுப்பகுதியில் மொட்டை போட்டிருந்தார். தொடர் விசாரணையில் அவர் கேரளத்தின் மலப்புரத்தை சேர்ந்த நவ்சாத் எனத் தெரிய வந்தது. போலீஸார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து ஒருகிலோ தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர்.