சுக்கிரநாடி, ஜாதகலங்காரம், நந்தி வாக்கியம் ஆகிய பண்டைய ஜோதிட நூல்களில் 8ஆம் பாவம் என்று தனிப்பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானத்தை குறிக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும்.
ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது.
அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும்.
செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம்.




