ஓடும் காரில் இருந்து மனைவியைத் தள்ளிவிட்டு கணவர் கொல்ல முயன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த துடியலூரை சேர்ந்தவர் ஆர்த்தி. இவருடைய கணவர் அருண்ஜோ அமல்ராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அருணும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அருண்ஜோ அமல்ராஜ், மனைவியைச் சமாதானம் செய்து அழைத்து வந்ததோடு, கடந்த 9ஆம் தேதி ஊட்டிக்குக் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். வழியில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த அருண் ஆர்த்தியை காரில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். இந்தக்காட்சியானது அங்கிருந்த ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலின் போது, தலை, கால், மூட்டு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து ஆர்த்தி துடியலூர் போலீசில் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், மாமனார், மாமியார் ஆகியோர் இந்த கொலை முயற்சிக்கு உடந்தை என்றும் குற்றச்சாட்டி புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் அருண்ஜோ அமல்ராஜ், மற்றும் மாமனார், மாமியார் ஆகிய 3 பேரையும் விசாரித்து வருகின்றனர்.