தனது கொள்கையுடன் ஒத்துப்போனால் தமிழ் அரசுக் கட்சியும் கூடத் தனது கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தான் தனியாகக் கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்து 24 மணி நேரத்திற்குள் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்
காரைநகர் பிரதேச சபையின் கசூரினா சுற்றுலா மையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டட திறப்புவிழா நேற்றுமாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கஜதீபன் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தரப்புகளுக்குள் பிளவுகள் ஏற்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் முரண்படுவதால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை.ஆனால் தமிழ் இனம் தான் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ளப் போகின்றது.
நாம் இவ்வாறு பிரிந்து செல்வோமாயின் கிழக்கு மாகாணத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே வடக்கு மாகாணத்துக்கு ஏற்படும். முதல்வர் இதனை உணர்ந்து ஒற்றுமையை சிதைக்காது ஒருமித்து செயற்பட வேண்டும் எனக் கோரினார்.
இதற்கு பதிலளித்து பேசும் வகையில் தனது உரையின் போது, “தமது கொள்கையுடன் ஒத்துப்போனால் தனது கூட்டணியில் இணைந்துகொள்ளலாம்” என்றார்.