அரசமைப்பின் பிரகாரமே பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெற வேண்டும், தற்போது நடந்துள்ளது அரசியல் சூழ்ச்சியாகும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். பிரதமர் பதவியில் மாற்றம் என்பது அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும். ஜே.வி.பி. எம்.பிக்கள் 6 பேரினதும் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது.
ரணில் விக்ரமசிங்கவே தற்போது சட்டபூர்வமான பிரதமராக இருக்கின்றார். அவரையே எமது கட்சி பிரதமராக ஏற்றுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி. இருக்கின்றது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.