யாழ் போதனா வைத்தியசாலையில் 2 ஆண் குழந்தைகளை பிரசவித்துவிட்டு உயிரிழந்த தாய் !

0
199

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரணைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வைத்தியசாலையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுக பிரசவம் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சடுதியாக மூர்ச்சையாகியுள்ளார்.

உடனடியாக உயிர் காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தீவகம் வேலணையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயாரான விஜயகுமார் நிரோஜனி (வயது-32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண் குழந்தை வேண்டும் என்ற தவிப்பில் இருந்த கணவன் 4 ஆண் குழந்தைகளுடன் தனி மரமாய் மனைவியை பறி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கர்ப்பிணித் தாய் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் பிற்பகல் 3 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகள் பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் தாயார் மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.

தாயாரின் அமினி ஓடிக் திரவம் குருதியில் கலந்துகொண்டதால் இறப்பு ஏற்பட்டது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

குடும்பப் பெண்ணின் உயிரிழப்புத் தொடர்பான தகவல் இரகசியமாகப் பேணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிரிழந்த தாயாரின் இரணைக் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: