கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில்வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருதரப்பினரான கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்த நாமல் இந்தத் தகவலைத்தெரியப்படுத்தியிருக்கின்றார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஸ்ரீலங்காவின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச நேரடியாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன், மஹிந்த ஆதரவாளர் ஒருவரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்கின்றார். ஸ்ரீலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச நேற்று காலை பிரதமர்அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற நிலையில் தமிழ்அதரசியல் கைதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார்.
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து அவர்களது குடும்பங்களுடன் இணைக்குமாறு நாமல் ராஜபக்சவுடனான சந்திப்பில் கலந்துகொண்ட கைதிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதை நினைவுபடுத்திய தமிழ் அரசியல் கைதிகள், மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் தாம் பல முறை போராட்டங்களை முன்னெடுத்தும் விடுவிக்கப்படவில்லைஎன கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்த மஹிந்த ராஜபக்ச 106 தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமது குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த உதவியை செய்யுமாறும் நாமல் ராஜபக்சவிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் சிறைச்சாலையில் 10 பேரும் உள்ளடங்கலாக 106 தமிழ் அரசியல் கைதிகள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.