மூல வியாதியைப் போக்கும் அற்புத மூலிகை தான்றிக்காய்! சாப்பிடும் முறையை தெரிஞ்சுகோங்க!!

0
737

தமிழ்நாட்டின் மலைத்தொடர்களில் பரவலாக காணப்படும் ஒரு உயரமான மரம்தான், அம்பலத்தி மரம். நமது தேசத்தைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் பின்னர், மற்ற ஆசிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் பரவின. அம்பலத்தி மரங்களின் இலைகள் நீண்ட காம்புகளுடன் பெரிதான மடல்கள் போலக் காணப்படும்.

இதன் பசுமை வண்ண மலர்கள் பின்னர் இள மஞ்சள் வண்ணத்திற்கு மாறி, நீண்ட மாலைகள் போல பூத்துக் குலுங்கும். நல்ல சதைப்பற்றுடன் சிறிய வாதாம் காய்களைப் போன்ற தோற்றம் கொண்ட இதன் காய்களும் பசுமை வண்ணத்தில் தோன்றி, முற்றியபின் பழுப்பு வண்ணத்தை அடையும். காய்களின் விதைகள் கடினமானத் தன்மைகள் உடையவை ஆதலால், விதைகள் மூலம், இந்த மரம் வளர்வது என்பது மிகவும் அபூர்வமாகி விடுகிறது.

மலையடிவாரங்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் பரவலாக வளரும் தன்மையுடைய தான்றிக்காய் மரங்கள், வறண்ட மணற்பாங்கான இடங்களில் வளர்வதில்லை. இதன் இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாக்கி விடுகின்றன. தண்ணீரில் கிடந்தாலும் வலுவிழக்காத தன்மைகள் கொண்ட தான்றிக்காய் மரத்தின் கட்டைகள், பாய்மரக்கப்பல்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் செய்யப்பயன்படுகின்றன.

தான்றிக்காய் மரப்பட்டைகள் பருத்தித் துணிகளுக்கு சாயமேற்றவும், தோல்ப்பொருட்கள் தயாரிப்பிலும், அவற்றைப் பதப்படுத்துவதிலும், அவற்றுக்கு வண்ணமேற்றவும் பயன் தருகின்றன.

தாபமாரி, திரிலிங்கம் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் அம்பலத்தி மரங்கள் பொதுவாக, தான்றிக்காய் மரங்கள் என்றே, நம் தேசத்தில் அழைக்கப்படுகின்றன.

தான்றிக்காயின் நன்மைகள் :
தான்றிக்காய் மரங்கள் உடலில் செரிமானமின்மை பாதிப்புகளை சரிசெய்யும், மலச்சிக்கலை விலக்கி, ஜுரத்தை போக்கி, கடும் சளியை அகற்றும், வயிற்றுக் கோளாறுகளை விலக்கி, சரும பாதிப்புகளை குணமாக்கும். கண் பாதிப்புகளை சரிசெய்து, உடலை ஆரோக்கியமாக்கும்.

திரிபலா :
அனைத்திலும் மேலான பயனாக, உடலை இளமையாக்கி, உடல் நலம் காக்கும் காயகற்பமான திரிபலா சூரணத்தில், கடுக்காய், நெல்லிக்காய் எனும் இரு தேவ மூலிகைகளுடன் மூன்றாவது மூலிகையாக விளங்குவது, தான்றிக்காய் என்பதே, தான்றிக்காயின் உயர் சிறப்பாகும்.

கடுக்காயைப் போலவே, தான்றிக்காயையும், அதன் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு, மேல் தோலை மட்டுமே, மருந்துகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

தான்றிக்காய் இலை:
தான்றிக்காய் இலைக்கொழுந்தை சாறெடுத்து, அதை தினமும் பருகிவர, மூச்சு வாங்குதல் மற்றும் தொண்டைக்கட்டிக் கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் விலகிவிடும்.

இரத்த மூலம்
வறுத்துத் தூளாக்கிய தான்றிக்காய் சூரணத்தை, சிறிது எடுத்து, ஒரு தம்ளர் நீரில் இட்டு, அத்துடன் சிறிது தேனை ஊற்றிக் கலக்கி, தினமும் இருவேளை பருகி வர, இரத்த மூலம் மற்றும் இதர மூல பாதிப்புகள் எல்லாம், விலகிவிடும்.

மூலம் குணமாக :
தான்றிக்காய் சூரணம் மற்றும் தேற்றான்கொட்டை சூரணம் இரண்டையும் ஒரே அளவில் எடுத்துக்கொண்டு, இந்தக் கலவையில் சிறிது எடுத்து தினமும் இருவேளை தேனில் குழைத்து சாப்பிட்டு வர, உள் மூலம் , வெளி மூலம் என்று சொல்லப்படும் அனைத்து மூலங்களும் விரைவில் குணமாகி விடும்.

சாப்பிடும் முறை :
தான்றிக்காய் கலந்த திரிபலா சூரணத்துடன், பிரண்டைத் தண்டு, நாயுருவி இலைகள், பொடுதலை, துத்தி, அம்மான் பச்சரிசி மற்றும் அத்தி மர இலைகள் அத்துடன் ஆவாரம் பூக்கள் சேர்த்து உலர்த்தி, நன்கு தூளாக்கிக் கொண்டு, இவற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தூளை எடுத்து, தினமும் இரண்டு வேளை தேனில் கலந்தோ அல்லது, சாதாரணமாகவோ சாப்பிட்டு வர வேண்டும்.

இதுபோல, தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, அனைத்து வகை மூலங்கள் மற்றும் ஆசனவாய் அரிப்பு, வீக்கம் போன்ற மூல வியாதிகளின் பாதிப்புகள் நீங்கி, உடல் நலமாகும்.

உடல் எடையைக் குறைக்கும்:
தான்றிக்காய் கலந்த திரிபலா சூரணத்தை தினமும் காலையில் நீரில் கலந்து பருகி வர, உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறைந்துவிடும்.

இரத்த சோகை பாதிப்பை சரி செய்யும் தான்றிக்காய்.
ரத்த சோகைக்கு :
சிலருக்கு உடலில் இரத்தம் வலுவிழந்து, உடல் வெளுத்து சோர்ந்து காணப்படுவார்கள். ஆண்களைவிட, பெண்களையே அதிகம் பாதிக்கும் இந்தக் குறைபாடு விலக,

தான்றிக்காய், நெல்லிக்காய் சூரணம், திரிகடுகம் சூரணம், இவற்றுடன் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி இலைகளை உலர்த்தி தூளாக்கிக் கொண்டு அத்துடன் சிறிது, சீரகம், அயன செந்தூரம் இவற்றை ஒன்றாகக் கலக்கி, ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, இரத்த சோகை விலகி, உடலில் புதிய இரத்தம் ஊறி, உடல் வனப்பாகும்.

மூச்சுத் திணறல்:
உடலில் சுவாச பாதிப்புகளால் ஏற்படும், மூச்சுத் திணறல், படபடப்பு, ஆஸ்துமா இரைப்பு போன்ற பாதிப்புகள் குணமாக, தான்றிக்காய், திப்பிலி, அதிமதுரம், போன்றவற்றை உலர்த்தி தூளாக்கி வைத்துக்கொண்டு, அதில் சிறிது எடுத்து, இரண்டு தம்ளர் தண்ணீரில் இட்டு நன்கு சுடவைத்து, சுண்டக்காய்ச்சி, அரை தம்ளர் அளவில் வந்ததும், அந்த நீரை தினமும் இரு வேளை பருகி வர, ஆஸ்துமா மூச்சிறைப்பு பாதிப்புகள் சரியாகி விடும்.

தலைவலி, மலச்சிக்கல் போக்க :
தான்றிக்காய் சூரணத்தை, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி, வயிற்று பாதிப்பு, ஜுரம் மற்றும் பேதி போன்ற வியாதிகள் விலகி, உடல் நலம் பெரும்.

திடமான உடல் பெற:
சிலருக்கு உடற்பயிற்சி செய்தாலும், உடல் இறுகாமல் சதைகள் வலுவிழந்து காணப்படும். இதுபோன்ற பாதிப்புகள் விலகி, உடல் இரும்பு போல இருக, தான்றிக்காய், நிலப்பனை கிழங்கு, பூனைக்காலி விதைகள் இவற்றை சேர்த்து, அரைத்து வைத்துக்கொண்டு, அந்தத் தூளை, சிறிதளவு எடுத்து, தினமும் இரண்டு வேளை, பாலில் கலந்து பருகி வர, உடல் வலுவாகும்.

பல் வலி பாதிப்புகள் அகல :
தான்றிக்காயை வறுத்து தூளாக்கி, அதில் பல் துலக்கி வர, பற்களின் பாதிப்புகள் படிப்படியாக குணமாகிவிடும்.

தான்றிக்காய், கிராம்பு, இலவங்கப் பட்டை இவற்றை உலர்த்தி, நன்கு தூளாக்கி, அதைக்கொண்டு பற்களை துலக்கி வர, பல் வலி, கூச்சம் மற்றும் பல் ஆடும் பிரச்னைகள் விலகும்.

கண் பார்வைத்திறன் மேம்பட :
தான்றிக்காய் சூரணத்தை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் கலந்து தினமும் தொடர்ந்து ஒரு மாத காலம் தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்துப் பருகி வர, கண்கள் புத்துணர்ச்சி பெற்று, கண் பார்வை தெளிவாகும். கண் பாதிப்புகள் விலகி விடும்.

காயங்கள் ஆற :
தான்றிக்காய் தோலை, நன்கு தூளாக அரைத்து, நீரில் குழைத்து, அதை காயங்களின் மீது தடவி வர, காயங்கள் ஆறி விடும். உடலில் உள்ள புண்களும் ஆறும்.

உடல் சூட்டினால் ஏற்படும் அக்கி போன்ற கட்டிகளின் மேல் தடவி வர, கட்டிகளினால் ஏற்பட்ட உபாதைகள் விலகி, கட்டிகள் குணமாகும்.

அம்மை பாதிப்பை குணமாக்கும் தான்றிக்காய்.
தான்றிக்காய் சூரணத்தை, தினமும் காலை வேளையில் தேனில் கலந்து பருகி வர, அம்மை பாதிப்புகள் படிப்படியாக விலகி விடும்.

மருந்து தயாரிப்பிற்கு :
துவர்ப்பு சுவைக்காக உணவில் அதிகம் பயனாகும் தான்றிக்காய்கள், மூல வியாதிகளை குணமாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தான்றிக்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணைகள், மருந்து தயாரிப்பில் பயனாகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: