கொஞ்சமா தானே முடி கொட்டுதுனு அலட்சியமா விட்டறாதீங்க! சீக்கிரம் இதை டிரை பண்ணுங்க.

0
12887

முடி உதிர்வு பிரச்சனை இன்று பலருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். முடி உதிர்வு வெயிலினால் கூந்தல் வறட்சியடைவதாலும், பொடுகு தொல்லை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் உண்டாகிறது.

இந்த முடி உதிர்வு பிரச்சனையை ஆரம்ப காலத்திலேயே கவனித்து விடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். சுத்தமாக முடிகள் உதிர்ந்த உடன் தீர்வை தேட கூடாது. ஆரம்ப காலத்திலேயே ஒரு பிரச்சனையை சரி செய்வது ஒரு சரியான முறையும் கூட..

இந்த பகுதியில் முடி உதிர்வு பிரச்சனையை போக்க சில எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை கடைப்பிடித்து நல்ல பலன்களை பெறுங்கள்.

1. கற்றாழை

தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும். பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

2. பொடுகுத் தொல்லை

முடி அதிகமாக உதிர்வதற்கு ஒரு முக்கிய காரணம் பொடுகுத் தொல்லை தான். இதற்கு தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து விடும்.

3. பொன்னாங்கன்னி கீரை

பொன்னாங்கன்னி கீரை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது சரும அழகிற்கும் சிறந்தது. ஆரோக்கியத்தை கொடுக்கவும் நல்லது. இது ஏழைகளின் தங்க பஸ்பம் ஆகும். முடிக்கு கெமிக்கல்களை பயன்படுத்தி அழகு பெறுவதை விட இதன் மூலம் பெறலாம்.

தேவையானவை

பொன்னாங்கண்ணிக் கீரை – அரை கிலோ (இரண்டு கட்டு)

நல்லெண்ணெய் – கால் லிட்டர்

தேங்காய் நெய் – கால் லிட்டர்

விளக்கெண்ணெய் – 100 கிராம்

செய்முறை:

முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, உரலில் சுத்தமாக இடித்து சாறு பிழிந்து கொள்ளவும். சாறு ஒரு டம்ளர் வரை தாராளமாக வரும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்

பிறகு சாற்றை ஒரு தட்டிலிட்டு வெயிலில் காய வைக்க வேண்டும். இது உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை காய வேண்டும். பின்னர் இதனை மெல்லிய வடைபோல தட்டிக்கொள்ளவும். தட்டுவதற்கு வரவில்லை என்றால் கெட்டிக் குழம்பாய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு மூன்று எண்ணெய்களையும் ஒன்று சேர்த்து, இக்கீரை வடையை அல்லது குழம்பைச் சேர்த்து நிதானமாக தணலில் காய்ச்சவும் (தாமிர பாத்திரம் மிக நல்லது அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரம் நல்லது). அந்த எண்ணெய் பொங்கும் போது இறக்கி விடவும்.

நுரை அடங்கி கீரைச்சாறு கசடாக அடியில் படியத்தொடங்கியவுடன், எண்ணெய் தெளியத் தொடங்கும்.

எண்ணெய் தெளிந்து ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி காலையில் சூரியன் உதிக்க முன்னரும், மாலையில் சூரியன் அஸ்தமித்த பின்னரும் உபயோகிக்கவும். வியர்வையில் இதனை உபயோகிக்க வேண்டாம்.

இத்தைலம் முடிகொட்டுவதைத் தவிர்த்து, கூந்தலை நல்ல கருமையாக்குவதோடு, கண்ணுக்கும் மூளைக்கு குளிர்ச்சி தருகின்றது. இதனை தடிமன், காய்ச்சல் நேரங்களில் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.

4. கறிவேப்பிலை

கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.

5. செம்பருத்தி

முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

6. அஸ்வகந்தா

ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.

7. ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம். கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுபவை.

8. எலுமிச்சை விதை

முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பழத்தின் விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வந்தால் முடி வளரும்.

9. பூசணி கொழுந்து

பூசணி கொடியின் கொழுந்தை எடுத்து நன்றாக பிளிந்து அதனை தலையில் தடவி வந்தால், முடி வளரும்.

10. கீழாநெல்லி

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் நன்றாக வளரும்.

11. வேப்பிலை

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்றாக வேக வைத்து மறுநாள் குளிக்கும் போது அந்த நீரை கொண்டு அலசினால் முடி கொட்டுவது விரைவில் நின்று விடும்.

12. எண்ணெய்

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக கலக்கி தலையில் தேய்த்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தாலும் முடி நன்றாக செழித்து வளரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: