மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! யாழில் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ள விசேட மோட்டார் சைக்கிள் படையணி!

0
361

யாழில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று தெரிவித்தார்.

யாழ் .குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் யாழப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட பொலிஸ் அணி ஒன்று யாழில் களமிறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 100ற்கும் அதிகமான சிவில் பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் குறித்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொலிஸாரின் செயற்பாட்டுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும், வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றுமுன்தினம் கிராம அலுவலர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் குறித்த கிராம சேவையாளர் அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டில் முன்னர் வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடைய ஒருவர் வசித்து வந்ததாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தவே வந்த குழுவினர் கிராம சேவையாளரின் அலுவலகத்தை சேதப்படுத்தியதுடன், அவரையும் அச்சுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் விரைவில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: