பெண்களின் வளர்ச்சி நிலை! ஆரோக்கியமான சமுதாயம் அமைய!

0
291

பெண்ணைப் போற்றி வளர்க்க வேண்டும் என்பார்கள். அவள்தான் இந்த சமுதாயத்தின் அங்கமான குழந்தையைச் சுமப்பவள். ஆரோக்கியமான சமுதாயம் அமைய, பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பது பிரபல சொலவடை. ஊரான் பிள்ளை என்பது தன் மகனை மணந்து இல்லத்திற்கு வரும் பெண். அவள் ஆரோக்கிய உணவு உண்டு வளர்ந்தால் அவள் வயிற்ரில் வளரும் தன் குல பிள்ளை தானே ஆரோக்கியமாக வளரும் என்பதே இதன் பொருள்.

இப்பெண் திருமணமாகிச் சென்று ஊரான் பிள்ளையாக மாறுவதற்கு முன்னரே, பிறந்த இல்லத்தில் பேணி காக்கப்பட வேண்டும். அதிலும் அவளது பெண்மைக்குரிய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் காலத்தின் கட்டாயம்.

பெண் பிறந்தவுடனேயே அவளது திருமணத்திற்காகத் தங்க நகைகள் வாங்கிச் சேர்ப்பது பெற்றோர்களின் சமுதாயக் கடமையாக மாறிவிட்டது. அதைவிட முக்கியம் பொன் போன்ற அவளது ஆரோக்கியம். ஒரு ஆண் படித்தால் அவன் மட்டுமே மேன்மையுறுகிறான். ஆனால், ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால் தன் குடும்பத்தையே அறிவு பெற வைக்கிறாள் என்பது உலகறிந்த உண்மை.

பெண் குழந்தை பிறப்பு
பெண் குழந்தை கருப்பையுடனேயே பிறப்பதுபோல, அவள் பூப்பெய்துவதற்குத் தேவையான ஹார்மோன்களும் உடலில் பொதிந்து இருக்கும். உரிய காலத்தில் இது சுரக்கத் தொடங்கும். குறிப்பிட்ட வயது வந்தவுடன் தூண்டப்பட்டு, மெதுவாக வெளிப்படத் தொடங்கும். கருமுட்டைபை இயக்கி, மேலும் சில இயக்கங்களுக்குப் பிறகு மாதவிடாய் தோற்றுவிக்கப்படுகிறது.

மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுவதே சரியான சுழற்சி. இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளியில் தோன்றாமல் மாதம் ஒரு முறை தோன்றுவதற்கு முக்கியமான காரணம் உண்டு. பெண் பல ஆண்டுகள் கழித்து கருக்கொள்ள, பூப்பெய்தியதில் இருந்தே மாதம் ஒரு கரு முட்டை வெளியீடு நடக்க வேண்டும் என்பது இயற்கை. இத்தகைய பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சினை இருக்காது.

முதல் முறை மாதவிடாய் ஏற்பட்ட பின், இரண்டாவது சுழற்சி தள்ளிப் போகலாம். இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 21 நாளில் இருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.

சத்தான உணவு
சத்தான உணவில் புரதச் சத்து, இரும்புச் சத்து மற்றும் கால்சியம் ஆகியவை இருக்க வேண்டும். புரதச் சத்து என்றால் முளைவிட்ட பயிறு, மாமிசத்தில் ஈரல், மீன், முட்டை, உலர் கொட்டைகள் முக்கியமாக வேர்க்கடலை. இரும்பு சத்து என்றால் முருங்கை கீரை, வெல்லம், பேரீச்சம் பழம், ஈரல், முட்டையின் கரு, பிஸ்தா, காய்ந்த திராட்சை. கால்சியத்திற்கு பால், சீதாப்பழம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: