புற்றுநோயைப் புரிந்துகொள்வோம்! புற்று நோய் எப்படி ஏற்படுகின்றது தெரியுமா? கட்டிகளில் இரு வகைகள் உள்ளன !

0
2836

கட்டி என்பது எது?

மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் சுய இயல்பு, சுய கட்டுப்பாடு, தனித்தனி அளவு, தனித்தனி உருவம், செயல்பாடு, வளர்ச்சி உண்டு. இந்த வளர்ச்சியையும் சுய கட்டுப்பாட்டையும் கண்காணிப்பது ‘ஜீன்கள்’ என்று அழைக்கப்படுகிற மரபணுக்கள். ஒரு கட்டிடத்தை இப்படித்தான் கட்ட வேண்டும் என்று ஓர் இன்ஜினியர் கொத்தனாருக்குக் கட்டளையிடுவதைப் போல் இந்த மரபணுக்கள் ஒரு செய்திக் குறிப்பில் ஒவ்வொரு செல்லுக்கும் இந்த மாதிரி வளர்ச்சியடைய வேண்டும், இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதன் படி செல்கள் செயல்பட்டு இயல்பான வளர்ச்சியை அடைகின்றன.

இதற்கு மாறாக, சில காரணங்களால் மரபணுக்களின் செய்திக் குறிப்பு செல்களுக்கு போய் சேர்வதில்லை. அப்போது செல்கள் தங்கள் சுய இயல்பை இழந்துவிடுகின்றன. சுய கட்டுப்பாடு கலைந்து போகிறது. இன்ஜினியர் பேச்சைக் கேட்காமல் கொத்தனார் தன்னிச்சையாக கட்டிடம் கட்டுகிற மாதிரி, இந்த செல்கள் வரம்பின்றி வளர ஆரம்பிக்கின்றன. அப்போது இவற்றின் உருவம், பருமன், வளர்ச்சி, செயல் பாடு எல்லாமே மாறிப்போகின்றன. இப்படித் தப்புத்தப்பாக வளர்கின்ற இந்த செல்கள் ஒன்று திரள்கின்றன. இதைத்தான் கட்டி அல்லது கழலை (Tumor) என்கிறோம்.

இரு வகைக் கட்டிகள்

கட்டிகளில் இரு வகைகள் உள்ளன.

 1. தீங்கற்ற கட்டி, 2. தீங்கு செய்யும் கட்டி. தீங்கு செய்யாத கட்டிகளை ‘சாதாரண கட்டிகள்’ (Benign Tumor) என்றும் தீங்கு செய்யும் கட்டி களைப் ‘புற்றுநோய்க் கட்டிகள்’ (Malignant Tumor) என்றும் வகைப்படுத்துகிறோம். தீங்கற்ற கட்டிகள் பெரும்பாலும் தோலிலும் தோலடித் திசுவிலும் வளரும். சட்டைப்பைக்குள் முட்டையை ஒளித்துவைக்கிற மாதிரி இவை வளர்ந்து வருவது வெளிப்படையாகத் தெரியும். இவை மிக நிதானமாகவே வளரும்; பார்ப்பதற்கு வேண்டுமானால் விகாரமாகத் தெரியலாமே தவிர இவை உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில்லை; உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. கொழுப்புக் கட்டி (Lipoma), தோல் கட்டி (Dermoidcyst), நரம்புக் கட்டி (Neurofibroma), சுரப்பிக்கட்டி( Adenoma), தோல் மருக் கட்டி (Papilloma), நார்த்திசுக் கட்டி (Myoma) போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.

எது புற்றுநோய்?

உடலில் உள்ள செல்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இயல்புநிலைக்கு மாறாக வளரும் நிலைமையைப் ‘புற்றுநோய்’ (சிணீஸீநீமீக்ஷீ) என்கிறோம். இது ஆரம்பத்தில் கண்ணுக்குத்தெரியாத அளவில் உருவாகி, நாளடைவில் விபரீத வளர்ச்சி அடைந்து, உயிருக்கே ஆபத்து தருகிற அளவுக்குக் கொடூரமான நோயாக உருமாறுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புதிதாக ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. ரத்தப்புற்றுநோய் தவிர மற்ற எல்லாப் புற்றுநோய்களும் கட்டிகளாகத் திரள்வதுதான் வழக்கம் என்பதால் அவற்றைப் ‘புற்றுநோய் கட்டிகள்’ என்கிறோம்.

புற்றுநோய் கட்டிகள்

புற்றுநோய் கட்டிகள் தோன்றுகின்ற இடமும் வளர்கின்ற விதமும் வித்தியாசமானவை. இவை பெரும்பாலும் உடலின் உள் உறுப்புகளில்தான் வளர்கின்றன. தோல் புற்றுநோய் ஒன்றுதான் இதற்கு விதிவிலக்கு. வாய், மூக்கு, தொண்டை, இரைப்பை, குடல், கல்லீரல், நுரையீரல், கருப்பை, கருப்பை வாய், சினைப்பை, மூளை, ரத்தம் என்று பலவற்றில் இவை வளர்கின்றன. இந்தக் கட்டிகளில் வளர்கின்ற செல்களின் அமைப்பும் உருவமும் இயல்புக்கு மாறாக இருக்கின்றன. செயல்பாடு என்பதே இவற்றுக்கு இல்லை.

மாறாக இவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. அருகில் உள்ள உறுப்பு களையும் பாதிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பயணம் செய்து வழியில் தென்படுகிற பல ஆரோக்கியமான உறுப்புகளையும் பாதிக்கின்றன. இதனால் அந்த உறுப்புகளும் தங்கள் வேலையைச் செய்யமுடிவதில்லை. இப்படித் தான் பாதித்த உறுப்பை மட்டுமில்லாமல் மற்ற உறுப்புகளையும் கெடுத்து நாளடைவில் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் கெடுத்து உயிருக்கு ஆபத்தைத் தருகின்ற நோய் இது. புற்றுநோய் என்பது வருடக்கணக்கில் வளர்ந்து, பல அறிகுறிகளை வெளிப்படுத்தி, நம்மை எச்சரித்து, அதன்பிறகுதான் ஆபத்து களை ஏற்படுத்தும். அதற்குள் நாம் விழித்துக்கொண்டால் புற்றுநோயின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம்.

காரணங்கள்

டைபாய்டு காய்ச்சலுக்கு ஒரு பாக்டீரியாவை காரணம் காட்டுவதைப் போலவோ, மலேரி யாவுக்கு ஓர் ஒட்டுண்ணியைக் காரணம் காண்பிப்பது போலவோ புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுக் கூறமுடியாது. புற்றுநோய் உருவாவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல காரணிகள் உதவுகின்றன. அவற்றைப் ‘புற்றுநோய்க் காரணிகள்’ என்கிறோம். இவை இருந்தால் உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. அவை..

 1. புகைப் பிடிப்பது. சிகரெட், பீடி, சுருட்டு புகைப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். காரணம், புகையிலையில் பாலிசைக்ளின் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன், தார், நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு, அமோனியா, ஃபீனால் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுகள் உள்ளன. இவை உடல் செல்களை தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருப்பதால் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது செல்கள் தங்கள் இயல்பான வளர்ச்சிப் படிகளைக் கடந்து, பாதை மாறி, வரம்பு மீறிய வளர்ச்சிக்கு உள்ளாகின்றன. அப்போது புற்றுநோய் வருகிறது. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு வாய், கன்னம், தொண்டை, குரல் வளை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது வழக்கம்.
 2. புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போடுதல்:

எந்த ஓர் அயல்பொருளும் உடலில் தொடர்ந்து வருடக்கணக்கில் நிலைத்து, நீடித்து இருக்குமானால் அது இருக்கின்ற உடல் பகுதியைப் பாதிக்கும். இது வெற்றிலை, பாக்கு, பான்மசாலா, குட்கா, புகையிலை போடுபவர் களுக்கும் பொருந்தும். புகையி லையில் உள்ள நச்சுகள் வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக்குழாய் ஆகிய இடங்களில் புற்றுநோயை உண்டாக்குகின்றன.

 1. இன்றைய தினம் நம்மில் பலருக்கும் கள், சாராயம், விஸ்கி, பிராந்தி என்று பல வகை மதுக்களை அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவில் உள்ள நச்சுப்பொருட்கள் கல்லீரல், இரைப்பை, குடல், மலவாய் போன்றவற்றில் புற்றுநோயை உருவாக்குகின்றன.
 2. புகையில் வாட்டித் தயாரிக்கப்படும் உணவுகளையும் கொழுப்பு மிகுந்த உணவு களையும் அடிக்கடி அதிக அளவில் சாப்பிடுவோருக்கு இரைப்பை, குடல், மார்பு ஆகியவற்றில் புற்றுநோய் வருகிறது. நார்ச்சத்துள்ள உணவுகளைக் குறைந்த அளவில் சாப்பிடுபவர்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது
 3. நம் கண்களைக் கவருவதற்காகவும் ருசியை மேம்படுத்துவதற்காகவும் இன்றைய உணவுகளில் பலதரப்பட்ட செயற்கை ரசாயன நிறமூட்டிகளையும் மணமூட்டிகளையும் இனிப்பூட்டிகளையும் சேர்க்கிறார்கள். இவற்றில் கலந்துள்ள அனிலின், ஆக்சைம், அமைட் போன்ற ரசாயனப் பொருட்கள் நம் மரபணுக்களின் பண்புகளைப் பாதித்துப் புற்றுநோய் உருவாவதை ஊக்குவிக்கின்றன.
 4. திருமணமாகாத பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இருந்தும் சரியாகத் தாய்ப்பால் தராத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. காரணம், இவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் தாக்கம் புற்றுநோயைத் தூண்டுகிறது.
 5. ஹெபடைட்டிஸ் பி வைரஸ் கல்லீரல் புற்றுநோயையும், எப்ஸ்டின் பார் வைரஸ் ‘பர்க்கிட்ஸ் லிம்போமா’ எனும் புற்றுநோயையும் ஏற்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 6. பசிபிலிஸ், சேங்கிராய்டு, கிரானுலோமா வெனீரியம், எய்ட்ஸ், பிறப்புறுப்பு மருக்கள் போன்ற பால்வினை நோய்கள் வாய், ஆசனவாய், பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்குகின்றன.
 7. சிறு வயதிலேயே திருமணம் செய்வது, 35 வயதுக்கு மேல் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது, அடிக்கடி குழந்தையைப் பெற்றுக்கொள்வது போன்ற காரணங்களாலும் கருப்பை, கருப்பை வாய் ஆகியவற்றில் புற்றுநோய் வருகிறது.
 8. சூரிய ஒளியில் வரும் புற ஊதாக் கதிர்கள் உடலில் அதிக அளவில் படுமானால் தோலில் புற்றுநோய் வருவதுண்டு.
 9. கதிர்வீச்சு பாதிப்பு: எக்ஸ் கதிர்வீச்சு மற்றும் அணுக்கதிர் வீச்சு காரணமாக ரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய் வருவது உறுதியாகியுள்ளது.
 10. காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்காக இன்றைக்குப் பலவித பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோய் ஊக்குவிப்பான்களாகச் செயல்பட்டுப் பலவித புற்றுநோய்களை உருவாக்குகின்றன.
 11. நிக்கல், ஈயம், பித்தளை, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களை தயாரிக்கும் தொழிலாளிகளுக்கும் அமிலம், பெயின்ட் தயாரிக்கும் தொழிலாளிகளுக்கும், சாயப்பட்டறை, ரப்பர் தயாரிப்பு, பென்சீன், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் போன்ற ரசாயனங்களைத் தயாரிக்கும் தொழிலாளிகளுக்கும் தோல், நுரையீரல், குரல்வளை, ரத்தம் ஆகியவற்றில் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது.
 12. பெற்றோருக்குப் புற்றுநோய் இருந்திருந்தால் அவர்களின் மரபணுக்கள் வழியாக அவர்கள் வாரிசுகளுக்குப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. மார்பகப் புற்றுநோய் மற்றும் கண் விழித்திரை புற்றுநோயை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
 13. வயதுக்கு மீறிய உடல் எடை வயிற்று உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்குப் பாதை அமைக்கிறது

பொதுவான அறிகுறிகள்

ஒவ்வொரு புற்றுநோய்க்கும் தனித்தனி அறிகுறிகள் உள்ளன. முக்கியமான அறிகுறிகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். இவற்றை எச்சரிக்கை மணிகளாக ஏற்றுக்கொண்டு உடனே கவனித்தால் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம்.

 1. உடலில் ஏற்படும் கட்டி 2. உடல் எடை குறைதல் 3. தொடர் ரத்தசோகை. 4. தொடர்ந்த வயிற்றுப்போக்கு. 5. சிறுநீரில் அல்லது மலம் வெளியேறுவதில் மாற்றம் அல்லது இவற்றில் ரத்தம் வெளியேறுதல். 6. நீண்ட நாட்களுக்குக் காயம் ஆறாமல் இருத்தல். 7. மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுதல். 8. மார்பகத்தில் கட்டி 9. நீண்ட கால அஜீரணம் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம்.10. ஏற்கனவே உடலில் இருந்த கட்டி அல்லது மரு அளவிலும் நிறத்திலும் மாற்றம் அடைதல். 11. பல வாரங்களுக்குத் தொடர்ந்த இருமல், இருமலில் ரத்தம் வருதல் 12. குரலில் மாற்றம்.

எந்த வயதில் புற்றுநோய் வரும்?

கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை 50 வயதுக்கு மேல்தான் புற்றுநோய் வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைக்குள்ள மேற்கத்திய உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றங்கள், உடற்பருமன், உடற்பயிற்சி குறைவு போன்ற பல காரணங்களால் குழந்தை, இளைய வயதினர், முதியோர் என்று எல்லா வயதினருக்கும் புற்றுநோய் வருவது உறுதியாகி உள்ளது.

என்னென்ன பரிசோதனைகள்?

ரத்தப் பரிசோதனைகள், திசுப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன், பிராங்கோஸ்கோப்பி, எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி, பாப் ஸ்மியர் மற்றும் மேமோகிராம் பரிசோதனை என்று பலதரப்பட்ட பரிசோதனைகள் புற்றுநோயைக் கணிக்க உதவுகின்றன. நோயாளிக்குப் புற்றுநோய் வந்துள்ள/பரவியுள்ள இடத்தைப் பொறுத்து இந்தப் பரிசோதனைகளில் சிலவற்றைத் தேர்வு செய்கிறார்கள் மருத்துவர்கள்.

பரவும் தன்மை

புற்றுநோய்க்குப் பரவும் தன்மை உள்ள காரணத்தால் ஒரு நோயாளிக்குப் புற்றுநோய் உள்ளது என்று முதல்முறையாக கணிக்கும்போது அது எந்த அளவில் பரவியுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது நடைமுறை.

முதல் நிலை: முதலில் தொடங்கிய இடத்திலேயே புற்றுநோய் காணப்படுவது.

இரண்டாம் நிலை: அருகில் உள்ள நிணநீர்ச் சுரப்பிக்குப் பரவியிருப்பது.

மூன்றாம் நிலை: அருகில் உள்ள உறுப்புக்கும் நிணநீர்ச் சுரப்பிக்கும் பரவியிருப்பது.

நான்காம் நிலை: உடலில் வேறு இடத்தில் இருக்கும் உறுப்பிலும் பரவியிருப்பது.

என்னென்ன சிகிச்சைகள்?

இன்றைக்குப் பல விதங்களில் மேம்பட்டிருக்கும் மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவற்றால் புற்றுநோய்க்கு முடிவு கட்ட முடியும். நோயாளிக்கு வந்துள்ள புற்றுநோய் வகை, இடம், நிலை ஆகியவற்றைப் பொருத்து இந்தச் சிகிச்சைகளைத் தருகிறார்கள் மருத்துவர்கள். சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புற்றுநோய்க்கு இலவசமாக சிகிச்சை தரப்படுகிறது. எனவே, புற்றுநோய்க்குப் பயப்படத் தேவையில்லை. இன்றைய நவீன மருத்துவ முறைகளால் புற்று நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைப்பது உறுதியாகிறது.

தடுக்க வழி உண்டா?

புற்றுநோயை வரவிடாமல் தடுக்க வேண்டுமானால் கீழ்க்காணும் வாழ்க்கைமுறை மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்:

1.புகைப் பிடிக்கக் கூடாது. 2. மது அருந்தக் கூடாது. 3. புகையிலை, பான்மசாலா பயன்படுத்தக் கூடாது. 4. காய்கறி, கீரை, பழம் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தி தினமும் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். 5. கொழுப்பு உணவுகளையும் விரைவு உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 6. தினமும் உடற்பயிற்சி செய்து பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 1. 35 வயதுக்கு மேல் ஆண், பெண் இரு பாலரும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 8, 40 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பாப் ஸ்மியர் மற்றும் மேமோகிராம் பரிசோதனை அவசியம். 9. வைட்டமின் ஏ உள்ள கேரட், மீன், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.
 2. வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, நெல்லிக்கனி ஆகிய பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 3. பெண்கள் 10 வயது முடிந்ததும் ஹெச்பிவி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
 4. நெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
 5. கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும்.
 6. பாலியல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 7. நாம் ஏற்கனவே பார்த்த புற்றுநோய்க் காரணிகளைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅவர் மட்டும் தான் நாட்டுப்புற பாடகரா! குப்புசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த செந்தில் கணேஷ்!
Next articleவிமானத்தில் உறங்கிக்கொண்டிருந்த இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தியரால் நடந்த கொடுமை!