புதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் இளைஞர், இளைஞிகள், அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தமது தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாதித்தும் மாதக் கடைசியில் பர்ஸ் வறண்டு தவிப்போர் அதிகம்.
பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போதே, அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வது வாழ்க்கை முழுவதும் உதவும்.
பணத்தைச் சரியாக செலவழிப்பது என்பது, பணம் சம்பாதிப்பதற்கு ஈடான கடினமான விஷயம்.
சேமிப்பு, முதலீடுகள், சிறப்பான நிதி நிர்வாகம் மூலம் நம் சம்பாத்தியத்தின் வாயிலாக நமது எதிர்கால நிதிநிலையைப் பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.
புதிதாக சம்பாதிக்கத் தொடங்கியுள்ளவர்கள், தமது சம்பாத்தியத்தை செம்மையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் குறித்துப் பார்ப்போம்…
* பெரிய நிறுவனங்கள் எளிமையான பட்ஜெட்களை வகுத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மார்க்கெட்டிங் துறை, விளம்பர பட்ஜெட்டையும், உற்பத்தித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் வகுத்துக் கொள்வது போல, தனி மனிதரான நீங்களும் ஒரு பட்ஜெட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வருவாயில் 60 சதவீதத்துக்கு மிகாமல் செலவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் வரவு- செலவு திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாமல், உங்கள் வரவு செலவுகளுக்கு ஏற்ப பட்ஜெட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த பட்ஜெட் கடைப்பிடிப்பதற்குக் கஷ்டமானதாக இருக்கக் கூடாது.
* உங்கள் வரவு- செலவுத் திட்டம், சோதனை முறையில் பல்வேறு தவறுகளையும், சோதனைகளையும் கடந்த பின்னர்தான், நேர்த்தி ஆகும். உங்களைத் தேவையற்ற செலவுகளை நோக்கி இழுக்கும் விளம்பரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். காலப்போக்கில் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, மிஞ்சும் தொகை உயரும். செலவு பிடிக்கும் சில பழக்கங்களைக் கைவிடுவது கடினம்தான். உதாரணமாக, அடிக்கடி ஓட்டல், சினிமா செல்வது போன்றவை. ஆனால் தேவையற்ற செலவுகளுக்கு கடிவாளம் போட்டால்தான் சேமிப்பு உயரும்.
* நிதி விஷயத்தில் நாம் எட்ட வேண்டிய குறுகிய கால, நீண்ட கால இலக்குகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்போது, அதைத் தொடர்வதற்கான ஆர்வம் கூடும்.
* கிரெடிட் கார்டுகள் என்பது அத்தியாவசியமான விஷயம் என்று கூற முடியாது. நீங்கள் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்குக்கு வந்துவிட்டீர்கள் என்றால், அது குறித்து ஆலோசிக்கலாம்.
* உங்கள் பணியிடமும், நகரமும் அடிக்கடி மாறக்கூடியதாக இருந்தால், அதற்கேற்ப ஒரு நெகிழ்வான திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி இடம் மாறுவோருக்கு வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் திட்டங்கள் தேவையில்லை.
* உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, 3 வருடத்தில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தால், 3 வருட முதலீட்டுத் திட்டத்தில் இணையலாம்.
* சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன் நிச்சயமற்ற சூழல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓர் அவசர நிதியை ஒதுக்கி வையுங்கள். ஒரு வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறும்போதோ அல்லது வருவாயில் துண்டு விழும்போதோ இந்த அவசரகால நிதி உங்களுக்கு உதவும்.
* பங்குச்சந்தைகள் உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் ஈக்விட்டி தொடர்பான சேமிப்புத் திட்டங்கள், புராவிடன்ட் பண்ட், டிவிடன்ட் பண்டில் முதலீடு செய்யுங்கள். ஓய்வு காலம் குறித்து யோசித்து அதற்குத் திட்டமிடுங்கள்.
* உங்களின் முதலீடுகள், நிதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை சில நேரம் மோசமான சரிவை சந்திப்பதால், அது குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளும் வரை அதில் இறங்கும் ‘ரிஸ்க்’கை தவிர்க்கலாம்.
* ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.
* இன்றைய சூழலில், வங்கிக் கடனை தவிர்க்க முடியாது. ஆனால் எதற்காக கடன் பெறுகிறோம், அதை எவ்வாறு முறையாக திருப்பிச் செலுத்துகிறோம் என்பது முக்கியம். நீங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் தவறிழைத்தால், அது உங்கள் கடன் மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் பெரிய கடன்கள் பெறுவது சிக்கலாகும். எனவே இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
ஆண்டுகள் நகர நகர, உங்கள் சம்பளம் உயரும் அதேநேரத்தில், செலவுகளும் கூடும். எனவே நமது சேமிப்புகள், முதலீடுகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.