பிறந்த குழந்தை சுவாச நோய்க்குறி ஓர் ஆபத்தான மருத்துவ பிரச்சினை அவதானம்!

0
723

அறிமுகம்
பிறந்த குழந்தை சுவாச நோய்க்குறி (NRDS) ஓர் ஆபத்தான மருத்துவ பிரச்சினையாகும். பிறந்த குழந்தையின் நுரையீரலால் போதுமான உயிர்வளியை உடலுக்குத் தர முடியாமல் போகும். இது தெள்ளிய சவ்வுநோய், சிசு சுவாசச் சிக்கல் அறிகுறி, பிறந்த குழந்தை சுவாசச் சிக்கல் அறிகுறி என பலவகையாக அழைக்கப்படும்.

குழந்தை பிறந்தவுடன், விரை சுவாசம், இதய மிகைத் துடிப்பு, நெஞ்சுச் சுவர் பின்வலித்தல், உறுமல் மூச்சு, மூக்கு எரிச்சல், நீலம்பாய்தல் போன்ற அறிகுறிகளுடன் இது வெளிப்படும்.

மருத்துவச் செல்நிலை

நோய் அதிகரிக்கும் போது, குழந்தைக்கு மூச்சுக் சுற்றோட்டச் செயலிழப்பு உண்டாகும் (இரத்தத்தில் கரியமிலவாயுவின் அடர்த்தி கூடுதல்). நீடித்த மூச்சுத் திணறல் ஏற்படும். சிகிச்சை அளித்தாலும் அளிக்காவிட்டாலும் நோய்க்கடுமையின் மருத்துவச் செல்நிலை 2-3 நாட்கள் தொடரும். நோய் தொடங்கிய முதல்நாள் நிலைமை மோசமாவாதால் மருத்துவ உதவி அதிகமாகத் தேவைப்படும். இரண்டாவது நாள் மருத்துவ உதவியுடன் நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து சிறுநீர் நன்றாகச் சென்று மூன்றாம் நாள் நிலை சீராகும்.

உடல்நலத் துறை மிகுந்த முன்னேற்றம் அடைந்திருந்தாலும், முன்னேறிய நாடுகளில் கூட, குழந்தைப் பிறப்பின் முதல் மாதத்தில் அதிகமான மரணத்துக்குக் காரணமான தனி நோய் இதுவேயாகும்.

நோயறிகுறிகள்
விரைசுவாசம், இதயமிகைத் துடிப்பு ஆகியவற்றுடன் கீழ் வருவனவும் காணப்படும்:

தோல் மற்றும் சளி சவ்வுகளில் நீலம் பாய்தல்
மூச்சுத்திணறல்
சிறுநீர்ப் போக்குக் குறைதல்
உறுமலோடு மூச்சு
நாசி எரிச்சல்
வேகமான மூச்சு
மேலோட்டமான சுவாசம்
மூச்சு விடும்போது நெஞ்சுத் தசை உள்ளிழுத்தல் போன்ற அசாதாரண சுவாச நிலைகள்
காரணங்கள்
(வழுகும் தன்மையுள்ள காப்புப் பொருட்களான) பரப்பியங்கிகளின் (surfactant) உற்பத்திக் குறைவு மற்றும் நுரையீரல் அமைப்பு வளர்ச்சிக் குறைவு ஆகியவற்றால் இது உண்டாகிறது. பரப்பியங்களின் உற்பத்தியில் தொடர்புடைய மரபியல் கோளாறினாலும் இது ஏற்படலாம்.

நோய்கண்டறிதல்
சோதனைகளில் அடங்குவன:

உடல் பரிசோதனை – பிறந்த குழந்தை சுவாச நோயின் தனிப்பட்ட அறிகுறிகளைப் பரிசோதித்தல்
இரத்தப் பரிசோதனை – இரத்தத்தில் இருக்கும் உயிர் வளி அளவையும் தொற்றுக்களையும் அறிய.
துடிப்பு உயிர்வளிமானி சோதனை – கை விரல் நுனி, காது அல்லது கால் விரல் நுனியில் பொருத்தப்பட்ட உணர்பொறியின் மூலம் இரத்தத்தில் கரைந்துள்ள உயிர்வளியை அளத்தல்.
நெஞ்சு எக்ஸ்-கதிர் – பனியோட்டம் போல் படர்ந்திருக்கும் பிரத்தியேகமான நிலையைக் கண்டறிய.
எதிரொலி இதயமானி – இதயத்தின் உட்பகுதியைப் படம்பிடிக்கும் ஒரு வகை கேளா ஒலி ஊடுகதிர்ப் படம்.
சிக்கல்கள்
சுவாச நோய் அறிகுறி ஏற்பட்ட பிறந்த குழந்தைகளுக்கு மேலும் சிக்கல்கள் உண்டாகும் அபாயம் அதிகம்.

காற்றுக்கசிவு

சில குழந்தைகளுக்குக் காற்று நுரையீரலில் இருந்து கசிந்து நெஞ்சுக் கூட்டில் சிறைபட்டுக் கொள்ளலாம். இது நெஞ்சுறை காற்று எனப்படும். நெஞ்சுக்குள் ஒரு குழாய் செலுத்தப்பட்டு சிறைப்பட்ட காற்று வெளியேற்றப்படுகிறது.

இரத்த உட் கசிவு

சுவாசநோய் உள்ள குழந்தைகளுக்கு நுரையீரலுக்கு உள்ளும், மூளையிலும் இரத்தக் கசிவு ஏற்படலாம். நுரையீரலுக்குள் உண்டாகும் இரத்தக்கசிவுக்கு சிகிச்சை அளிப்பது கடினம். உயிர்வளிப் பொறியில் இருந்து செலுத்தப்படும் அழுத்தத்தாலும் இரத்தப் பொருட்களை செலுத்துவதன் மூலமும் இரத்தக் கசிவைத் தடுக்கலாம்.

மூச்சுக்குழல் நுரையீரல் கோளாறு

இந்த நீடித்த கோளாறால் சில குழந்தைகளுக்கு சுவாச நோய் உண்டாகும். சுவாச நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உயிர்வளிப்பொறி நுரையீரலில் வடுக்களை உண்டாக்குவதால் அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. விரைவான, மேலோட்டமான சுவாசமும் மூச்சடைப்பும் இதன் அறிகுறிகள் ஆகும்.

வளர்ச்சிக் குறைபாடுகள்

பிறந்த குழந்தை சுவாச நோயால் இரத்தக் கசிவோ உயிர்வளிக் குறைபாடோ ஏற்பட்டு மூளைச் சிதைவு உண்டானால், கற்பதில் சிரமம், உடலியக்கப் பிரச்சினைகள், காதுகோளாறு, பார்வைக்கோளாறு ஆகிய வளர்ச்சிக் குறைபாடுகள் தோன்றலாம்.

சிகிச்சை
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம். பிறந்த சிசுக்களின் சுவாசப் பிரச்சினைகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவக் குழுவினரால் சிசிச்சை அளிக்கப்பட வேண்டும்.

செயற்கைப் பரப்பியங்கிகள் அளிப்பது பிறந்த குழந்தைகளுக்கு உதவிபுரியும்.

வெதுவெதுப்பான ஈரப்பதமுள்ள உயிர்வளி அளிக்கப்பட வேண்டும். ஆயினும் அதிக உயிர்வளியால் ஏற்படும் பக்க விளைவைத் தவிர்க்க இச்சிகிச்சையைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

சில வேளைகளில் குழந்தைகட்கு சுவாச இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நுரையீரல் திசுக்கள் சிதைவடையும் அபாயம் இருப்பதால், தவிர்க்க முடியாத தேவை இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். சுவாச இயந்திரம் பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகள்:

தமனிகளில் அதிக அளவு கரியமில வாயு
தமனிகளில் குறைந்த உயிர்வளி
குறைந்த இரத்த pH (அமிலத்தன்மை)
மீண்டும் மீண்டும் மூச்சுத் தடை
தொடர் நேரிய காற்றுப்பாதை அழுத்தம் (CPAP) என்ற சிகிச்சையின் மூலம் சுவாச இயந்திரத்தின் பயன்பாட்டைப் பல குழந்தைகளுக்குத் தவிர்க்கலாம். இதன் மூலம் காற்று மூக்கிற்குள் செலுத்தப்பட்டு காற்றுப்பாதை திறந்திருக்குமாறு வைக்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: