பரபரப்பாகும் நாடாளுமன்றம்! தீவிர பாதுகாப்பில் அதிரடி படையினர்! பல மாற்றங்களுடன் இன்றைய அமர்வு!

0
280

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு 11 மணித்தியாலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமரக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன்படி, இன்று முற்பகல் 10.00 மணிக்கு பிரதமருக்கு எதிரான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாக உள்ளதுடன், மதிய போசன இடைவேளைக்கு அமர்வுகளை நிறுத்தாது தொடர்ச்சியாக இரவு 9.00 மணி வரையில் விவாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ளனர். இதன்படி இரகசியமாக வாக்கெடுப்பு நடத்தப்படாது.

ஏதேனும் ஓர் காரணத்திற்காக அமர்வுகள் இரவு 9.00 மணிக்கு முன்னதாக இடைநிறுத்தப்பட்டால், இரவு 9.00 மணிக்கு சபையை கூட்டி வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நடத்தப்படும் இன்றைய தினம் முழுவதும் நாடாளுமன்றத்தையும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றின் பொதுமக்கள் பார்வையிடும் கூடத்தில் இன்று பாடசாலை மாணவ மாணவியருக்கு அனுமதி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று முழுவதும் கூட்டு எதிர்க்கட்சியும் சுதந்திரக் கட்சியும் பல இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அந்தப் பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: