இலங்கையில் இருந்து மதுரைக்கு கடத்திவரப்பட்ட 45 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை இந்திய மத்திய சுங்க இலாகா வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேற்று சென்ற விமானத்திலேயே குறித்த தங்கம் கைப்பப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய சுங்க இலாகா வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தங்கம் எதையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை.
எனினும் விமானத்தில் ஏறி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது பயணிகள் இருக்கை ஒன்றின் அடியில் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த தங்கத்தை சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொழும்பில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர், மதுரை விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமாக இருந்ததால் பயந்து தங்கத்தை விமானத்தை விட்டு வெளியே கொண்டு வரவில்லை.
இருக்கைக்கு அடியிலேயே வைத்துவிட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பயணிகளின் விபரங்கள் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்ட இருக்கையில் பயணித்தவரின் விபரம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.