இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையால் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த நன்றிக் கடன் இதுவா? என மைத்திரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சம்பந்தன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து காரசாரமாக விவாதித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
நாடாளுமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்துச் செயற்படுமாறும், நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் மைத்திரிக்கு சம்பந்தன் இடித்துரைத்தும் உள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே தான் மேற்கண்டவாறு தெரிவித்ததாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக நேற்று விடுத்த அழைப்புக்கிணங்க நேற்று முற்பகல் 11.30 மணியளவில் அலரிமாளிகைக்கு நேரில் சென்று ரணிலையும் சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவு வழங்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை ரணிலிடம் சம்பந்தன் முன்வைத்துள்ளார்.
புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று தொலைபேசியில் தன்னுடன் ஆதரவு கேட்டு உரையாடிய சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளையும் அவரிடம் தான் முன்வைத்ததாகவும் சம்பந்தன் கூறினார்.
எம்மைப் பொறுத்த வரையில் தனிநபருக்காகத் தீர்மானங்களை எடுத்து ஆதரவு வழங்க முடியாது.
கொள்கை அடிப்படையிலேயே முடிவு செய்ய முடியும். புதிய அரசமைப்பை உருவாக்குவது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரு நிபந்தனைகளை ரணிலிடமும் மஹிந்தவிடமும் முன்வைத்துள்ளேன்.
அதேவேளை, நாட்டின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும் என்று மைத்திரி, மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளேன் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
அரசமைப்புக்கு முரணாக எந்தவொரு நகர்வுகளும் முன்னெடுக்கப்படக் கூடாது என்று அவர்களிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.