அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த நாவல் விதை, பட்டை, வேர், இலை!

0
2113

அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த நாவல் விதை, பட்டை, வேர், இலை!

நாவல் மரம்

நமது கிராமங்களில் குளக்கரை ஆற்றங்கரையில் மற்றும் சாலை ஓரங்களில் மட்டும் வளர்ந்து உள்ள நாவல் மரம் நிச்சயமாக எல்லா வகை மண்ணிலும் வளர்க்கலாம். நிழல் தரும் நாவல் நமக்கு பழம் மற்றும் மரப்பட்டை மருந்துக்கும், இலைகள் கால்நடைக்கும் உணவாகவும் பயன்படுவது கண்கூடு.

நாவல் மரமானது நாகமரம், நாகப்பழ மரம், சரிதலம், ஆருகதம் எனவும் ஆங்கிலத்தில் ஜாமன், பிளாக் ப்ளம், ஜம்பலம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் நாவல் மரம் மார்ச் & மே மாதம் பூப்பதும் அதன் பின் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருவதும் வாழக்கை.

பெரும்பாலும் விதை மூலம் வளரும் அல்லது ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் நாவல் மரம் நட்ட 8 முதல் 10 ஆண்டுகளில் விளைச்சல் தரும். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 மீடடர் இடைவெளிவிட்டு நடப்படும் நாவல் மரம் ஆண்டுக்கு 50 முதல் 80 கிலோ வரை பழங்கள் தருகிறது.

அரிதாக கிடைக்கும் பழங்கள் வரிசையில் உள்ள நாவலை அபரிமிதமாக கிடைத்திட செய்ய பல இடங்களில் இவற்றை நட்டாலே போதும். பலராலும் இதன் பயன்பாடு முழுமையாக மேற்கொள்ளப்பட இதுவே வழி.

நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக் கட்டு உண்டாவது குறையலாம். ஜம்பு நாவல் பழத்தினால் நீர்வேட்கை நீங்கும். பழுக்காத காய்களை நன்கு உலர்த்திப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து அருந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

சர்க்கரை வியாதிக்கு விதை

நாவல் பழத்தைச் சப்பித்தின்ற பின்பு கிடைக்கும் கொட்டையை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்துக் கொண்டு தினந்தோறும் அதனை 2 & 4 கிராம் வீதம் மூன்று வேளை எனத் தண்ணீரில் கலந்து அருந்திவர, சர்க்கரை நோய் (Diabetes) குறையும் என நம்பப்படுகிறது. விதையைப் பொடித்து மாம்பருப்புத் தூளுடன் சேர்த்துத்தர சிறுநீரைப் பெருக்கும். இக்கொட்டையை மிகுந்த அளவில் உண்ண நஞ்சாக அமையும். இது பித்தத்தையும் போக்கும்.

இலை

நாவல்கொழுந்துச் சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காள் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கித்தர, சீதக்கழிச்சல் போகும். நாவல் மரத்தின் இலைக்கொழுத்து, மாவிலைக்கொழுத்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மைபோல் அரைத்து தயிரிலோ, மோரிலோ கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு, குருதிச் சீதபேதி குணமாகும். இதற்கு மாவிதை, நாவல் விதை ஆகிய இரண்டையும் உலர்த்திப் பொடித்து சம அளவில் மோரில் கலந்தும் அருந்தலாம். நாவற்கொழுந்தை ஏலத்துடன் சேர்த்து வைத்து ஆட்டுப்பாலில் கலந்துதர சரியாக் கழிச்சல் போகும்.

பட்டை

நாவல் மரப்பட்டை குரல் இனிமையை அதிகரிக்கும். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு குருதி சீதபேதி, பெரும்பாடு, ஈளை இருமல் ஆகிய நோய்களுக்கும் நல்லது. குழகுழத்த பல்ஈறு நோய்க்கும், நாக்கு, வாய், தொண்டைப் புண்களுக்கும் இதன் சாற்றைப் பயன்பத்தி வாய் கொப்புளிக்கலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத் தயிரில் சாப்பிட பெண்களின் உதிரப்போக்கு குணமாகும். குழந்தைகளுக்கு உண்டாகும், கண மாந்தம், வயிற்றுப்போக்கு, குருதி சீதபேதி ஆகியவற்றுக்கு நாவல் மரப்பட்டையை வெள்ளாட்டுப்பாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி வேளைக்கு சங்களவு என மூன்று முறை தரலாம். மரப்பட்டைத் தூளை இரத்தம் வழிகின்ற புண்ணில் தூவ குணமாகும். பட்டைக் கஷாயத்தைக் கொண்டு புண்களையும் கழுவலாம்.

வேர்

மரவேர், வாதம், கரப்பான், நீரிழிவு, குருதி, சீதபேதி, வாதகரம், மேகம், செரியாமை ஆகியவற்றைப் போக்கும் பட்டையை அரைத்து அடிபட்ட வீக்கம், கட்டி முதலியவற்றின் மீது போட அவை அமுங்கும். வேர் வளிநோய்கள், கரப்பான், புண், நீரிழிவு, குருதிக்கழிச்சலுக்கு உதவும். நாவல் வேர் ஊறிய நீர் கழிச்சல், நீரிழிவுக்கு நல்லது. உடலுக்குக் குளிர்ச்சியையும் ஆண்மையையும் தரும். சுரம், மாந்தம் ஆகியவற்றைப் போக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: