உங்கள் உடல் ஜொலிக்க வேண்டுமா? எளிமையான அழகு குறிப்புகள் இதோ!

0
1800

உங்கள் உடல் ஜொலிக்க வேண்டுமா? எளிமையான அழகு குறிப்புகள் இதோ!
தலைமுடி உதிர்வதில் தொடங்கி பாதப் பராமரிப்பு வரையிலும் நம்முடைய சருமத்தைப் பராமரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதற்கு நமக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை.

இந்த நம்முடைய மனநிலையைப் பயன்படுத்தி தான் பியூட்டி பார்லர்கள் ஹேர் கேர் தெரப்பி முதல் பெடிக்யூர் என மாத சம்பளத்தில் பல ஆயிரங்களை விழுங்கிவிடுகின்றன.

நம்முடைய சருமத்தை நாமே பராமரித்துக் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையெல்லாம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொண்டாலே போதும். மாதம் பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.

தலைமுதல் பாதம் வரை அழகாக ஜொலிக்க சில அடிப்படையான அழகுப் பராமரிப்புக் குறிப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டாலே போதும்.

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும்.

இரவில் தூங்கச் செல்லும்முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.

பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

கை முட்டிகளில் உள்ள கருமை நீங்க, எலுமிச்சைப்பழத்தின் சாறைத் தேய்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.

கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட்டுத் தூங்கினால், கண் இமை கருப்பாக நீண்டு வளரும்.

குளித்தபின் கைகளில், கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் மென்மையாக மாறும்.

களைப்படைந்த கால்களை மிதமான உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை, காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றைக் கலந்து, கொதிக்கவைத்து, பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கருமையாக, பளபளப்பாக மாறும்

பொதுவாக குளிர்காலத்தில் சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்படும். ஆனால் சிலருக்கோ அதிக குளிராக இருந்தாலும் சரி, அதிக வெயிலாக இருந்தாலும் சரி உதடுகள் வெடித்துவிடும். எரிச்சல் உண்டாகும்.

அதுபோல் உள்ளவர்களுக்கும் தங்களுடைய உதடு மென்மையாக பட்டுப்போல் மாற வேண்டுமென்று ஆசை தான். ஆனால் என்ன செய்ய என்று கவலையுடன் இருப்பார்கள். அவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.

தினமும் காலை அல்லது இரவில் சிறிது வெண்ணெயுடன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்த கலந்து உதடுகளில் தடவ வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.

பாலாடையுடன் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவ, உதடுகளின் கருமைநிறம் மாறி உதடு சிவப்பாகும்.

பீட்ரூட்டை துருவி சாறெடுத்து அதில் சில துளிகள் தேங்காய் எண்ணெயும் கால் ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்சூல் சேர்த்து நன்கு கலந்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அதை தினமும் உதடுகளில் தடவி வந்தால் உங்கள் உதடு பஞ்சு போல் மெத்தென்று மாறிவிடும்.

எல்லா பருவ சூழலுக்கும் ஏதாவது சருமப் பிரச்னைகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அவற்றை சமாளிக்க எக்கச்சக்க க்ரீம்களைப் போட்டு முகத்தில் தடவி, பருக்கள் அப்படியே கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன. அதற்கு தனியே வேறு க்ரீமை மார்க்கெட்டில் தேடி அலைய வேண்டியிருக்கிறது.

அப்படி இல்லாமல் நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கி, முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்கும்.

அப்படி முகத்தில் எந்தமாதிரியான மாசுக்களும் கரும்புள்ளிகளும் வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

முகம் சிவப்பாக, பளபளவென இருப்பது தான் அழகு என்ற எண்ணம் நம் எல்லோருடைய மனதுக்குள்ளும் பதிந்துவிட்டது. இதற்கு ஊடகங்களில் வரும் விளம்பரங்களும் அதில் காட்டப்படும் க்ரீம்களும் முக்கியக் காரணிகளாகின்றன. சரி. அப்படிப்பட்ட சிகப்பழகை எந்த வித பெற என்னதான் செய்யலாம்?…

முகத்தை சிகப்பழகாக மாற்றும் கிரீம்கள் மார்க்கெட்டில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எல்லா சருமத்துக்கும் ஒத்துப்போவதில்லை. அலர்ஜியை உண்டாக்கிவிகின்றன. ஆனால் நம்முடைய வீட்டில் உள்ள பொருட்கள் சிலவற்றைப் பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லாத, பளபள சருமத்தை மிக விரைவாகப் பெற்றுவிட முடியும்.

எலுமிச்சை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் சிறந்த பலனைக் காண முடியும். எலுமிச்சை ஜீரண சக்தியை அதிகரிக்கும். பற்களை வலிமையாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயங்களை மட்டுமல்லாது, சருமத்தைப் பொலிவானதாக்கவும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எலுமிச்சை சாறினை அப்படியே பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்.

மாசு மற்றும் முகப்பரு உள்ள சருமத்தில் எலுமிச்சையை அப்படியே பயன்படுத்தினால் எரிச்சலை உண்டாக்கும் என்பதால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, காட்டனில் நனைத்து முகத்துக்குப் பயன்படுத்தலாம். முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு 2 முதல் 3 முறை இப்படி செய்தாலே போதும். மிக விரைவில் உங்கள் சருமத்தில் உண்டாகும் மாற்றத்தைக் காண முடியும்.

முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், வெப்ப சலனத்தால் உண்டான தீக்காயம் ஆகியவற்றை இருந்த இடமே தெரியாமல் போக்கிவிடும் தன்மை கொண்டது தக்காளி. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கும்.

ஒரு தக்காளி, 2 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், சிறிதளவு கடலைமாவு ஆகியவற்றைச் சேர்த்து பேஸ்ட்டாக்கி, முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைந்து பொலிவு உண்டாகும். இந்த பேக்கை தினமும் பயன்படுத்தலாம்.

பால் மிகச்சிறந்த கிளன்சராகப் பயன்படுவதோடு முகத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். தினமும் குளிக்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரை உங்கள் குளிக்கும் பாத் டப்பில் நிரப்புங்கள். அதில் 2 எலுமிச்சையின் சாறினைச் சேர்த்து, அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து குளிக்கப் பயன்படுத்தலாம்.

முகம் மற்றும் சருமத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். நம்முடைய வீட்டின் சமையலறையில் உள்ள மிக அத்தியாவசியமான இரண்டு பொருட்கள் பாலும் சர்க்கரையும் தான். இரண்டையும் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொண்டு, சிறிது நீர் அல்லது பால் சேர்த்து முகத்தில் நன்கு தேய்க்க, முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

நீங்கள் சருமத்தை எவ்வளவு தான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தாலும் சூரியஒளி முகத்தில் நேரடியாகப் படும்போது, முகத்தில் கருமை படியத் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்ட சருமத்தை இரண்டே நாட்களில் எப்படி சரிசெய்யலாம்?

இப்போதெல்லாம் பெண்களை விடவும் ஆண்கள் சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதுபோன்ற சருமத்தை இரண்டே நாட்களில் சரிசெய்ய இயற்கைப் பொருட்களால் மட்டுமே முடியும்.

பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்குவதோடு, கருந்திட்டுகள் குறைய ஆரம்பிக்கும்.

கற்றாழை ஜெல்லைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சென மாறும்.

வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவுங்கள்.

மாம்பழத்தோலை சில துளிகள் பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவ, சூரிய வெப்பத்தால் கருமையாக மாறிய சருமம் பளிச்சென மாறும்.

சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் நிறைய பேருக்கு வெளியில் செல்லவே எரிச்சலாப இருக்கும்.

நாம் உண்ணும் பப்பாளி பழத்தால் உடலின் உட்புற செயல்பாடுகள் மட்டுமின்றி வெளித்தோற்றமும் பொலிவு பெறுகிறது.

பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிரச் செய்ய முடியும்.

பப்பாளியை நன்கு மசித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.

பப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும். நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.

சில பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் தோல் சுருக்கமும், வரைவரையாக கோடுகளும் தென்படும். அதனை போக்க முட்டை, பப்பாளி கலந்த கலவை கைகொடுக்கும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் பப்பாளி பழத்தை பிசைந்து கழுத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன் படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.

பப்பாளி பழத்தை அழகிற்கு மட்டும் பயன்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டும் வர வேண்டும். அது இளமையை பாதுகாக்க உதவும்.

சிலர் கருப்பாக இருப்பதை அசௌகரியமாக நினைப்பார்கள். நம்மில் பலருக்கும் தூசி, சுற்றுப்புறச் சூழல், எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளால் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தோன்றும். நிறம் மங்கும்.

அதற்காக விலையுயர்ந்த கிரீம்களை வாங்கி, அதுவும் பயனில்லாமல் புலம்புவதுண்டு. ஆனால் நம்முடைய கிச்சனில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்களே நம்முடைய சருமத்தின் நிறத்தை மேம்படுத்த போதுமானவையாக இருக்கிறதாம்…

அதிலும் குறிப்பாக, கீழ்வரும் ஐந்து மசாலாக்கள் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன.

மஞ்சள்

மஞ்சள் கிருமி நாசினியாகச் செயல்படும். மஞ்சளை தேனுடன் குழைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை முகத்தில் அப்ளை செய்து, உலறிய பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய் வயது முதிர்ந்த தோற்றத்தைத் தடுக்கும். உலர்ந்த ஜாதிக்காயை நன்கு பொடி செய்துகொண்டு, அதனுடன் சிறிது தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.

கடுகு

கடுகில் குறிப்பான, வெண்கடுகு சருமத்தில் உள்ள மாசுக்களை சுத்தம் செய்கிறது. சருமத்தின் துளைகளுக்குள் சென்று, உள்ளே இருக்கும் அழுக்குகளை நீக்குகிறது. இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களைத் தோற்றுவிக்கிறது. பொடி செய்த கடுகை ரோஸ் வாட்டரில் குழைத்து முகத்துக்கு அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவவும்.

இஞ்சி

இஞ்சி சருமத்தில் உண்டாகும் தொற்றுக்களையும் மாசுக்களையும் நீக்குகிறது. அதனால் இஞ்சியை மை போல அரைத்து அப்படியே நேரடியாகவோ அல்லது பாலில் கலந்தோ முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது கொஞ்சம் சருமத்துக்கு எரிச்சலைத் தரும். ஆனாலும் உடனடியாக முகம் நிறமும் பொலிவும் பெற்றிருப்பதை உங்களால் உணர முடியும்.

வெந்தயம்

மாசுக்களை நீக்க வெந்தயம் மிகச் சிறந்த தேர்வாகும். ஒரு நாள் இரவு முழுக்க வெந்தயத்தை ஊறவைத்து, அடுத்த நாள் பாலும் தண்ணீரும் சமஅளவு கலந்து அதில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு வேகவைக்க வேண்டும். அது கூழ் போன்று கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும். பின்பு அந்த கலவையைக் குளிர வைத்து, முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அரைமணி நேரம் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: