தமிழ் சிறுகதைகளின்’பிதாமகன்’ என்ற பெருமை மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கு உண்டு. தன் குடும்பம் சார்ந்த உறவுகளை விட, எழுத்து மற்றும் சமூகத்தை அதிகமாக நேசித்தவர். தமிழ் எழுத்தை உலகத்தரம் என்ற புகழேணியில் அமர்த்தி தமிழுக்கு தனி மரியாதையையும், அந்தஸ்தையும் உருவாக்கி தர தன்னையே அர்ப்பணித்தவர்.
திருவள்ளுவர், பாரதியார், ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற உலகளவில் தமிழ் மொழி இலக்கியத்திற்கு நல்லதோர் அடையாளத்தை உருவாக்கி தந்த விரல் விட்டு எண்ணி விடக்கூடிய மிகச்சிலரில் புதுமைப்பித்தன்முக்கியமானவர். தமிழ் சிறுகதை களின் பெரிய ஆளுமையாக இருந்தும், தன்னை வணிக நோக்கத்திற்கு உட்படுத்திகொள்ளாமல் இறுதி வரை வறுமையில் வாடி தன் இன்னுயிரை மாய்த்த மகத்தான எழுத்தாளர்.கடலுார் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் புதுமைப்பித்தன் 1906 ஏப்.,25ம் தேதி பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர்விருத்தாச்சலம். தந்தை தாசில்தார். அவர் பல்வேறு ஊர்களில் பணிபுரியும் நிலை ஏற்பட்டது. இதனால் புதுமைப்பித்தனும் பல ஊர்களில் கல்வியை தொடர்ந்தார். செஞ்சி, திண்டிவனத்தில் தொடக்க கல்வி பயின்றார். தந்தை 1918 ல் ஓய்வு பெற்றதும், சொந்த ஊரான திருநெல்வேலியில் பள்ளிப் படிப்பை முடித்தார். இந்து கல்லுாரியில் பி.ஏ., முடித்தார். 1932ல் கமலாவைதிருமணம் செய்தார்.1933ல் இவரது எழுத்து பயணம் துவங்கியது. 108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தீவிரமாக எழுதியது 15 ஆண்டுகள்மட்டுமே. வாழ்ந்த காலங்களில் வெளிவந்தவை 48 கதைகள் மட்டுமே. மற்ற கதைகள் அவரது மறைவுக்கு பிறகு வெளியானவை. மேலும் சாகா வரம் பெற்ற 15 கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கவிதையான ‘தொண்டரடிப் பொடியாழ்வார்’ என்ற தலைப்பை கொண்டது, 1934ல் வெளியானது. அவரது கவிதைகள் நண்பரான ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாகஇருந்தன.
படைப்புகளின் மீது நம்பிக்கை
புதுமைப்பித்தனை பொறுத்தவரையில் தன் மீதும், படைப்புகளின் மீதும் அபார நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இதன் காரணமாக அப்போதைய சக எழுத்தாளராகிய அழகிரிசாமியும் இவரும் சந்திக்க நேர்ந்தது என்றால், இலக்கியம் பற்றி பகிர்ந்து கொள்ள துவங்கிவிட்டால், ‘தமிழகத்தில்எப்போதும் நான் தான் சிறுகதை மன்னன். என்னை வெல்ல எவராலும் முடியாது,’ என சிரித்து கொண்டே கூறுவார். இதனால் இருவருக்கு இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்படுமாம்.
முதல் கதை
இவரது முதல் சிறுகதை ‘குலோப்ஜான் காதல்’ என்ற தலைப்பில் ‘காந்தி’ பத்திரிகை யில் 1933ல் வெளியானது. இக்கதையிலுள்ள புதுமை அக்காலகட்டத்தில் எழுத்துலக ஜாம்பவன்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு அக்காலத்தில் பிரசித்தி பெற்ற இலக்கியஇதழான ‘மணிக்கொடி’ இதழில் சிறுகதை கள் எழுத துவங்கினார். இந்த இதழில் முதன் முதலில் ‘குளத்தங்கரை பிள்ளையார்’ என்ற தலைப்பில் சிறுகதை எழுதினார். இவரது கதைகள் தொடர்ந்து ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், கலைமகள், தமிழ்மணி என பல பத்திரிகைகளில் வெளியாகி, சிறுகதை உலகில் இவருக்கென அசைக்க முடியாத சிம்மாசனத்தை உருவாக்கின. இவரது கதையில் சாமானியமக்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களும், போராட்டங்களும், அப்பட்டமாக வெளியானதால் இவர் ஒரு புரட்சி எழுத்தாளர் என விமர்சனங்கள் எழுந்தன. இது அவருக்கு எரிச்சலுாட்டக்கூடும் என பலரும் எதிர்பார்க்க அவரோ ‘மக்களுக்கான புரட்சி எழுத்தாளன்’ என்ற என்னை பற்றிய கணிப்புக்கு இணையாக எனக்கு எத்தனை விருதுகள் வழங்கினாலும் அவையெல்லாம் இக்கணிப்புக்குஈடாகாது என பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் புதுமைப்பித்தன்.
பேச்சு வழக்கில் கதைகள்
தஞ்சை உட்பட பிற வட்டார பேச்சு வழக்குத் தமிழில் கதைகள் எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமை புதுமைப்பித்தனுக்கு உண்டு. இவரது கதைமாந்தர்கள், பெரும்பாலும் நெல்லை தமிழில் பேசுபவர்களாக இருந்தனர். கதைக்களங்கள் என பார்த்தால் பெரும்பாலும் அவர் வாழ்ந்த திருநெல்வேலி, சென்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. கதைகளின் நடையில் இயல்பான பேச்சுத் தமிழுடன், செந்தமிழும் கலந்திருப்பது, மற்றவர்களின் கதை நடையிலிருந்து இவரது கதைகளை வேறுபடுத்தி காட்டுவதாக இருந்தது.
விவாதங்களில் அனல் பறக்கும்
சிக்கலான விஷயமுள்ள கதைக்கருவில் கூட நையாண்டித் தனமாக நகைச்சுவையை கையாண்டு படிக்க சுவையாகவும், அதேசமயம் சொல்ல வந்த விஷயத்தை அறைந்தது போலவும் சொல்வதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. தன் சிந்தனைக்கு எதிரான கருத்து கொண்ட இலக்கியவாதி களுடன் கடுஞ்சொற்களை தாராளமாக பயன்படுத்துவார். பிறரது நுால்களுக்கு எழுதும் விமர்சனத்திலும், வசைபாடல்களுக்கு குறைவிருக்காது. குறிப்பாக கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் விவாதத்தில் ஈடுபடும் தருணங்களில் அனல்பறக்கும்.
புனைப்பெயர்கள்
சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுகராச்சாரி, இரவல் விசிறி மடிப்பு என புனைப்பெயர்களில் கட்டுரைகள், விமர்சனங்களை எழுதியுள்ளார். கவிதைகளை வேலுார் குந்தசாமிப்பிள்ளை என்றபெயரில் எழுதினார். நாட்டில் நிலவுகிற அரசியல் சூழலை உன்னிப்பாக கவனிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருப்பார். இதன் விளைவே இவரை பாசிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும், அதிகாரம் யாருக்கு என அரசியல் நுால்களையும் எழுத வைத்தது.
புதுமைப்பித்தனின் பன்முக திறமைகளில் மொழி பெயர்ப்பும் ஒன்று. சர்வதேச எழுத்தாளர்களின் உலக தரமிக்க பிறமொழி சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாசிக்க தந்திருக்கிறார்.எழுத்து உலகில் வெளுத்து கட்டி கொண்டிருந்தாலும் வறுமை யும், பொருளாதார இயலாமையும் வாட்டிய கொடுமையான சூழலில், வாராது வந்த மாமணி போல, இவருக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்தது. இனி வறுமை என்ற தரித்திரம் தன்னிடமிருந்து தலை தெறிக்க ஓடிவிடும் என்ற நம்பிக்கை புது தெம்பை தந்திருக்க, அப்போது கொடி கட்டி பறந்த ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அவ்வை, காமவல்லி சினிமாக்களில் பணிபுரிந்தார். பிறகு பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி, வசந்தவல்லி என்ற பெயரில் சினிமா தயாரிக்க திட்டமிட்டு, இம்முயற்சியில் தோல்வியடைந்தார்.
அடையாளமும்,படைப்புகளும்
எம்.கே.தியாகராஜபாகவதரின் ராஜமுக்கதி சினிமாவிற்கு வசனம் எழுத புனேயில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அவருக்கு கடுமையான காசநோய் தொற்றி கொண்டது. அந்த நோய் தீவிரமாகி 1948 மே 5 ம்தேதி இறந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இரண்டே வயதான மகள் தினகரியை இடுப்பில் சுமந்த படி மனைவி கமலா, ‘எழுத்து எழுத்துன்னு வாழ்ந்து தமிழுக்கு புகழ் சேர்த்தீங்க, ஆனா எங்களுக்குன்னு எதுவும் சேர்க்கலையே,” என அழுதிருக்கிறார். அதற்கு புதுமைப்பித்தன், ”உன்னையும், குழந்தையையும் வெறுங்கையுடன் விட்டுட்டு போகலை, நான் எழுதின நுாற்றுக்கணக்கான சிறுகதைகள் என்ற சொத்தையும், புதுமைப்பித்தன் மனைவி குழந்தை என்ற அடையாளத்தையும் விட்டுட்டு போறேன். என் அடையாளமும், படைப்புகளும் உங்களை காப்பாற்றும்,” என்றிருக்கிறார். அவரின் சத்திய வாக்கு வீணாகவில்லை. அவர் இறந்த பின்னால் தமிழன்னை அவரது குடும்பத்தாரை தமிழறிஞர்கள் வாயிலாக தாங்கி பிடிக்க வைத்தாள்.
வாழும் கலைஞன்
புதுமைப்பித்தன் என்ற கலைஞனின் மூச்சு அடங்கி 70 ஆண்டுகளானாலும், அவரது கதை புத்தகங்கள் அதிகளவில் விற்று தீர்ந்து கொண்டிருப்பதும், அவரை தன் வழிகாட்டியாக இளம் எழுத்தாளர் பட்டாளம் பெருமைகூறுவதும், இவரது சமூக அக்கறையுள்ள எழுத்துக்கும், போலித்தனமற்ற அசலான வாழ்வுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். காலம் 42 வயதில் அவரை காவு வாங்கியிருக்கலாம். ஆனால் தன் படைப்புகள் வாயிலாக அவர் உலகம் உள்ள வரையில் ஒவ்வொரு வாசக இதயத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
-தாமோதரன், எழுத்தாளர்,அல்லிநகரம், தேனி96268 50509