ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த அமெரிக்க இராணுவ நாயின் புகைப்படத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை பிடிப்பதற்கும், கொல்வதற்கும் காரணமாக இருந்த அற்புதமான இராணுவ நாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்” என்று புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
ஐஎஸ் தலைவரை பிடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்காவின் இராணுவ நாய்க்கும் காயம் ஏற்பட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஐஎஸ் தலைவரை பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நாயின் பெயரை அதிகாரபூர்வமாக அமெரிக்க இராணுவம் இதுவரை வெளியிடவில்லை.
முன்னதாக கடந்த 3 ஆண்டுகளாகத் தீவிரமான கண்காணிப்பிலும், தேடுதலிலும் இருந்த ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப்பிரிவு நடத்திய அதிரடி வேட்டையில் உயிரிழந்தார்.
இதில் அவரது 2 மனைவிகள், 3 பிள்ளைகள், பல கூட்டாளிகள் கொல்லப்பட்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிறுவனத் தலைவர், அபுபக்கர் அல்-பக்தாதி. சிரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும், புனிதப் போர் தொடுக்க வேண்டும் என்று பலரையும் பிடித்துச் சென்று மூளைச்சலவை செய்து பிரச்சாரம் செய்தார்.
இதனால் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு நாச வேலையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.