சிறுமியை கொன்றவருக்கு மக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை. ஈரான் அரசின் அதிரடி.
டெகரான்: ஈரானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவரை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஈரானின் அர்டிபில் மாகாணத்தில் நேற்று 7 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்துக்கு பொதுமக்களின் கரகோஷங்கள் மத்தியில் இஸ்மாயில் (42) என்ற நபர் தூக்கிலிடப்பட்டார்.
இஸ்மாயிலை தூக்கிலிட்ட காட்சியை ஈரான் அரசு இணையத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “பொதுமக்களை அவர்களின் துன்பமான நிலையிலிருந்து மீட்கவே அவர்களின் முன் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது” என்றார்.
ஏழு வயதான அடனா அஸ்லானி கடந்த ஜூன் மாதம் வீட்டிலிருந்து காணாமல் போகியுள்ளார். பின்னர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த சிறுமி தொடர்பான செய்திகள் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறுமி அடனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்ட இஸ்மாயில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர் தற்போது தூக்கிலிடப்பட்டுள்ளார்.
எனினும் ஈரானில் மரணதண்டனைக்கு கடும் எதிர்ப்புகள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர்கள் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.