சித்திரை மாத ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை!

0
1066

சித்திரை மாத ராசிபலன்கள் இதோ

மேஷம்
இளைய தலைமுறையினரை வழிநடத்திச் செல்வதில் வல்லவர்களே! இந்த மாதம் முழுக்க உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு அதிகம் பேசுவீர்கள்.

சிலர் உங்களை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பிள்ளைகளை நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்று கவலைப்படுவீர்கள். மகனுக்கு இன்னும் நல்ல வேலை கிடைத்தால் நலமாக இருக்குமென்று அவ்வப்போது யோசிப்பீர்கள்.

ஆனால், உங்களின் விரயாதிபதியாகிய குருபகவான் வலுவாக இருப்பதால் வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு.

போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். மகளை அவள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அரசால் அனுகூலம் உண்டு. உங்களின் தனாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

கருத்து மோதல்கள், சந்தேகத்தால் பிரிந்தவர்களெல்லாம் ஒன்று சேர்வீர்கள். குழந்தைபாக்யம் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் புதன் செல்வதால் நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும்.

பழைய கடனில் ஒரு சிறுபகுதியை பைசல் செய்வீர்கள். 30ம்தேதி முதல் செவ்வாயும், கேதுவும் சேர்ந்து வலுவாக அமர்வதால் பழைய காலிமனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்க பலமாக இருப்பார்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சனி 9ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.

பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். புதுவேலை கிடைக்கும். மாணவர்களே! பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். குரு 7ல் நீடிப்பதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்‌ஷன், அழகு சாதனப் பொருட்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது, விரிவு படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புதிய சலுகைகள் கிட்டும்.

சக ஊழியர்களுக்காக வாதாடி சில சலுகைகளை அவர்களுக்கு பெற்றுத் தருவீர்கள். கலைத்துறையினரே! பரிசு, பாராட்டுகள் குவியும். விவசாயிகளே! ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். உடல் ஆரோக்யத்தில் அக்கறை காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 19, 20, 21, 22, 27, 28, 29, 30 மற்றும் மே 7, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3 திகதிகள்

ரிஷபம்
தொடங்கியதை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு தன, பூர்வ புண்யாதிபதியான புதன் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் இங்கிதமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். உங்கள் சுகாதிபதியான சூரியன் 12ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் பயணங்கள் அதிகமாகும்.

தவிர்க்க முடியாத செலவினங்களும் இருக்கும். பெற்றோருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவதற்கு சில புதுமுயற்சிகள் மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குரு 6ல் முடங்கிக் கிடப்பதால் வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறியதைப்போல உங்கள் முயற்சிகள் யாவுமே தடைப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

பணப் பற்றாக்குறை, கடன் என கலங்கிப்போய் நிற்பீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 20ம்தேதி வரை 12ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் தொண்டைப் புகைச்சல், தூக்கமின்மை, முன்கோபம் வந்து நீங்கும். செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும். ஆனால், 21ம் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்று அமர்வதால் நிம்மதி கிட்டும்.

வற்றிப் போயிருந்த முகம் மலரும். தோல் நோய், அலர்ஜியிலிருந்து விடுபடுவீர்கள். அழகும் இளமையும் கூடும். வாகனப் பழுது நீங்கும். வீட்டு பராமரிப்புச் செலவும் குறையும். 30ம்தேதி முதல் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் உதவி செய்கிறேன் என்று சொன்னவர்கள் கூட கடைசி நேரத்தில் கை விரித்து விட்டார்கள் என்று வருந்தியவர்களுக்கெல்லாம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

உடன்பிறந்தவர்கள்கூட உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தினார்களே! அந்தநிலை மாறும். இனி உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். சகோதரருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சனி 8ல் மறைந்து அஷ்டமத்துச் சனியாகி நிற்பதால் உடனே முடிந்து விடும், நிச்சயம் நிறைவேறி விடும் என்று நினைத்த காரியங்கள்கூட இழுபறியாகி, கடும் போராட்டத்திற்குப் பிறகு முடிவடையும்.

அரசியல்வாதிகளே! பதவிகள் தேடிவரும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவர்களே! பொதுஅறிவுத்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகளே! வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதுஏஜென்சி எடுப்பீர்கள். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீங்கிவிட்டு தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

சம்பளபாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகளே! வயலில் எலித்தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். தண்ணீர்வரத்து அதிகரிக்கும். முற்பகுதி ஏமாற்றங்கள், ஆரோக்யகுறைவு, செலவினங்களைத் தந்தாலும் பிற்பகுதி எதிர்பாராத திடீர்திருப்பங்களையும், நன்மைகளையும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல்14, 15, 16, 21, 22, 23, 24, 25, 26, 30 மற்றும் மே 1, 2, 9, 10, 11,12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:
மே 3ம்தேதி இரவு 08.18 மணி முதல் 4, 5 ,6ம் தேதி காலை 07.51 மணி வரை.

மிதுனம்
உள்மனது சொல்லுவதை அஞ்சாமல் செயல்படுத்தி வெற்றி காண்பவர்களே! இந்தமாதம் முழுக்க உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பிரச்னைகள், சிக்கல்களெல்லாம் இந்த மாதம் தீரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவதுடன் அவர்களை சரியாகப் பயன்படுத்தி நெடுநாட்களாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அரசாங்கத்தால் ஆதாயம்உண்டு. திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் மூலமாகவும் பணம் வரும். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். மூத்த சகோதர வகையில் பண உதவிகள் உண்டு. 5ல்குரு உங்கள் புகழ், கௌரவத்தை உயர்த்தும். பணவரவும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழந்தை பாக்யம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். வழக்கில் இருந்த தேக்கநிலை மாறும். வெள்ளிப் பொருட்களை வாங்குவீர்கள்.

உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளிலும், நட்சத்திரங்களிலும் சென்று கொண்டிருப்பதால் உங்களின் புகழ், கெரளவம் ஒருபடி உயரும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். வீடு விற்பது, வாங்குவது சாதகமாக முடிவடையும். 30ம்தேதி முதல் செவ்வாயும், கேதுவும் சேர்ந்து 8ல் அமர்வதால் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

கைமாற்றாக கொஞ்சம் கடனும் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பயணங்களின்போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக் கூடும். 7ல்நிற்கும் சனிபகவான் அவ்வப்போது சோர்வு, களைப்பு, வேலைச்சுமை ஆழ்ந்த தூக்கமின்மை போன்றவற்றைத் தருவார். கணவன், மனைவிக்குள் சந்தேகம் வேண்டாம். மனைவிக்கு தைராய்டு டெஸ்ட் எடுப்பது நல்லது.

அரசியல்வாதிகளே, மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். மாணவர்களே! சூரியன் லாப வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள்.

உங்கள் ரசனைக்கேற்ப இடமும் கிடைக்கும். புதிய, பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது கிளைகள் தொடங்குவீர்கள். அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய லைசன்ஸ் வந்து சேரும். புரோக்கரேஜ், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு.

கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கலைத்திறன்வளரும். விவசாயிகளே! பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 15, 16, 17, 23, 24, 25, 26, 27, 28 மற்றும் மே 2, 3, 4, 5, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:
மே 6ம் தேதி காலை 07.52 மணிமுதல் 7, 8ம் தேதி மாலை 07.16 மணிவரை.

கடகம்
சுவாசிக்கும் காற்று முதல் குடிக்கும் தண்ணீர் வரை அனைத்தையும் ரசித்து ருசிப்பவர்களே! கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் நின்று கொண்டு உங்களுடைய சேமிப்புகளையெல்லாம் கரைத்துக் கொண்டிருந்த தனாதிபதியாகிய சூரியன் இப்போது ராசிக்கு 10ல் நுழைந்திருப்பதால் கஷ்ட, நஷ்டங்களெல்லாம் நீங்கும். தடுமாற்றங்கள் விலகும். முடிவெடுக்க முடியாமல் பல விஷயங்களில் தர்ம சங்கடத்துடன் இருந்தீர்களே!

அந்த நிலை மாறும். இந்த மாதம் முழுக்க தைரியமாக சில முக்கிய காரியங்களில் முடிவெடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புள்ள நிறுவனங்களில் வேலை கிடைக்கும். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வாகனப் பழுது நீங்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சிலர் வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை படித்துத் தெளிவீர்கள்.

30ம் தேதி முதல் கேதுவும், செவ்வாயும் சேர்ந்து 7ல் அமர்ந்து ராசியை பார்க்க இருப்பதால் முதுகு வலி வரக்கூடும். மூட்டு, முதுகுத் தண்டில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. 6ல் சனி வலுவாக நிற்பதால் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும்.

கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மாணவர்களே! உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பற்று வரவு உயரும். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலர் சொந்த கட்டிடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.

சுக்கிரன் ஆட்சி பெற இருப்பதால் உத்யோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் உழைப்பை உணர்ந்து கொள்வார்கள். உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சிலருக்கு வேறு நல்ல வேலைவாய்ப்பு வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலர் பணியாற்றும் நிறுவனத்தை புதியவர்கள் வாங்க வாய்ப்பிருக்கிறது.

புதிய உரிமையாளர்கள் மூலமாக உங்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரங்களை மீட்க உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 16, 17, 18,19, 25, 26, 27, 28,30 மற்றும் மே 4, 5, 6, 7, 14.

சந்திராஷ்டம தினங்கள்:
மே 8ம் தேதி மாலை 07.17 மணி முதல் 9,10ம் தேதி வரை.

சிம்மம்
எந்தச் சூழ்நிலையிலும் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவர்களே! குருபகவான் 3ம் வீட்டில் நிற்பதால் புது முயற்சிகள், புதிய காரியங்களையெல்லாம் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். ஆனாலும் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அவர்களை நீங்கள் உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு.

உங்களின் தைரியஸ்தானாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் விலை உயர்ந்த வாகனம், ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்களின் தன லாபாதிபதியுமான புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சிலே அனுபவ அறிவு வெளிப்படும்.

யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் பலிதமாகும். உங்களின் புது வியாபார முயற்சிகளுக்கு பண உதவிகள் கிடைக்கும். 30ம் தேதி முதல் செவ்வாயும், கேதுவும் சேர்ந்து 6ல் அமர்வதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். என்றாலும் வேலைச்சுமை, அலைச்சல் இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவருவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உங்கள் ராசிக்கு 5ல் சனி நிற்பதால் பிள்ளைகளால் டென்ஷன், அலைச்சல் அவர்களின் உயர்கல்வி சேர்க்கை குறித்து சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த மனயிறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள்.

மாணவர்களே! முன்னேற்றம் உண்டு. பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக ஏற்பட்ட இழப்புகள், நட்டங்கள், ஏமாற்றங்கள் இவற்றையெல்லாம் இந்த மாதத்தில் சரி செய்வீர்கள். ஓரளவு லாபம் வரும். வேலையை விட்டுச் சென்ற பழைய வேலையாள் மீண்டும் வந்து சேர்வார்.

பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள்.

உத்யோகத்தில் அலைச்சல் நீங்கும். உங்களை உதாசீனப்படுத்திய சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிகாரிகளுடன் சிறு சிறு மோதல்கள் இருக்கத்தான் செய்யும். 3ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும்.

மூத்த அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு ஆறுதலாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பயம் நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! நீர் வரத்து அதிகரிக்கும். நெல், காய் கறி, பழ வகைகளால் லாபம் பெருகும். 10ம் வீட்டில் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 19, 20, 21, 22, 28, 29, 30 மற்றும் மே 6, 7, 9.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 14, 15 மற்றும் மே 11, 12, 13ம் தேதி நண்பகல் 12.17 மணி வரை.

கன்னி
வீடு வாசல் என்று அடங்கிவிடாமல் நாடு நகரம் என யோசிப்பவர்களே! கடந்த ஒருமாத காலமாக 7ல் அமர்ந்திருந்த சூரியன் இப்போது 8ல் நுழைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். நெடுநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களையெல்லாம் சந்தித்து மகிழ்வீர்கள்.

குலதெய்வப் பிரார்த்தனையை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகளும் பலிதமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். குரு வலுவாக இருப்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகளை பயன்படுத்தி காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு தேவை என்பதை உணர்வீர்கள். நடைப்பயிற்சியும் தேவைப்படுகிறது.

பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். 20ம் தேதி வரை சுக்கிரன் 8ல் மறைந்திருப்பதால் வீட்டிலும் குடிநீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்து செல்லும். எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோ ஓவன், ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களும் பழுதாகும்.

ஆனால், 21ம் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. 30ம் தேதி முதல் செவ்வாயும், கேதுவும் 5ம் வீட்டில் சேர்ந்து நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டுமென்ற கவலைகள் வந்து போகும். மகனுக்கு முன்கோபம் அதிகரிக்கும். மகளுக்கும் பிடிவாத குணம் அதிகரிக்கும்.

குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். 4ல் சனி நிற்பதால் வேலைச்சுமை அதிகமாகும். தாயாருடன் மனத்தாங்கல் வந்து போகும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து போகும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். மாணவர்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். விளையாடும் போது காயங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் வரும். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள்.

அவர்களை திருப்திப்படுத்த முடியாமலும் போகும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும். பங்குதாரருடன் சின்ன சின்ன மோதல்கள் இருக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் எதையும் செய்ய வேண்டாம். அரசாங்க பகை வந்து நீங்கும். உத்யோகத்தில் பொறுமையாக இருங்கள்.

அதிகாரிகள் ஏதேனும் குறை கூறினாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். எதிர்ப்புகள், இடமாற்றங்கள் இருக்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். கலைத்துறையினரே! புது நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம். விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பக்கத்து நிலக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். முற்பகுதி இடையூறுகளை தந்தாலும் பிற்பகுதியில் இனிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 15, 21, 22, 23, 24, 30 மற்றும் மே 2, 3 , 4 , 5, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 16, 17,18 ம் தேதி காலை 09.05 மணி வரை மற்றும் மே 13ம் தேதி நண்பகல் 12.18 மணி முதல் 14ம் தேதி வரை.

துலாம்
பணத்திற்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே! கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 6ல் அமர்ந்து ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்து வந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்கு 7ல் அமர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

அநாவசியப் பேச்சை குறைக்கப் பாருங்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகத்தால் இருவருக்கிடையே பிரிவுகள் ஏற்படக் கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். குறிப்பாக வழக்கால் மன உளைச்சல் ஏற்படும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. என்றாலும் உங்களின் ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் எல்லாப் பிரச்னைகளிலிருந்து நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். 2ம் தேதி வரை 6ல் புதன் மறைந்து கொண்டிருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் பிரச்னைகள் வந்து கொண்டிருக்கும். ஆனால், மே 3ம் தேதி முதல் 7ல் அமர்வதால் கோபம் குறையும். உங்களின் அணுகுமுறையை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்.

மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். 30ம் தேதி முதல் செவ்வாயும், கேதுவும் சேர்ந்து 4ல் வலுவாக இருப்பதால் தாயாரின் ஆரோக்யம் பாதிக்கும். தாய்வழிச் சொத்து கைக்கு வருவதில் சிக்கல் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு தாமதமாகும். என்றாலும் உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். எதிர்பார்த்த விலைக்கு காலி கிரவுண்டை விற்பீர்கள். ஜென்ம குரு உங்களுக்கு தொடர்வதால் எவ்வளவு உழைத்தாலும் எதுவும் ஒட்டவில்லையே, எதுவும் சேமிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உங்களுக்குள்ளே இருந்து கொண்டேயிருக்கும்.

இனந்தெரியாத மனக்கவலைகளும் இருக்கும். சனிபகவான் 3ல் நிற்பதால் தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சொந்த பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையால் அலைகழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு

களில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர கடுமையாக போராடுவீர்கள்.

மாணவர்களே! விளையாடும் போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

பங்குதாரர்கள் மாறுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. முற்பகுதியில் புதன் 6ல் நிற்பதால் உத்யோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! நவீன ரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப் பாருங்கள். யதார்த்தமான முடிவுகளும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 15, 16, 17, 23, 24, 25, 26, 27 மற்றும் மே 2, 3, 4, 5, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 18ம் தேதி காலை 09.05 மணி முதல் 19, 20ம் தேதி நண்பகல் 12.14 மணி வரை.

விருச்சிகம்
கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்திற்கு அடிக்கடி நன்றி கூறுபவர்களே! கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு பிள்ளைகளை பாடாய்ப்படுத்திய சூரியன் இப்போது 6ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். அவர்களுடைய பிடிவாதப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகனுடைய உயர்கல்வி தொடர்பான பள்ளிக் கல்லூரிச் சேர்க்கை நல்ல விதத்தில் முடிவடையும்.

அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். 20ம் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

உங்கள் குடும்பத்தினரையோ, உறவினரையோ யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் உடனே நம்பிவிடாதீர்கள். 21ம் தேதி முதல் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் கணவன், மனைவிக்குள் பனிப்போர் வந்து நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும்.

30ம் தேதி முதல் 3ம் வீட்டில் ராசிநாதன் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. தடுமாற்றம், குழப்பம் நீங்கும். சனி 2ல் நிற்பதால் கால் வலி, சளித் தொந்தரவு வந்து போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சிறுசிறு விபத்துகள் வந்து போகும். கண்களைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உங்களுடைய ராசிக்கு 12ல் குரு மறைந்திருப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசக்கும். 21 தேதிக்கு பிறகு தெளிவாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்களே! ஏழரைச் சனி நடைபெறுவதால் நுழைவுத் தேர்விற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். நல்லவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உணவு, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வேலை வாய்ப்பு கூடி வரும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிட்டும்.

கலைத்துறையினரே! இந்த மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு அலைச்சல், செலவுகளைத் தரும். பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 16, 17, 18, 19, 25, 26, 27, 28 மற்றும் மே 4, 5, 6, 7, 14.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 20ம் தேதி நண்பகல் 12.15 மணி முதல் 21, 22ம் தேதி பிற்பகல் 2.38 மணி வரை.

தனுசு
மஞ்சளும், மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும், நெஞ்சில் நினைப்பதே போதும் என்றெண்ணுபவர்களே! குரு சாதகமாக லாப வீட்டில் நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மூத்த சகோதரங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் பாக்யாதிபதியான சூரியன் 5ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கப்பாருங்கள்.

தொலைதூரப் பயணங்களை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். 20ம் தேதி வரை 5ம் வீட்டிலேயே சுக்கிரன் நிற்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு சில வி.ஐ.பிகளின் உதவியை நாடுவீர்கள்.

விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ஆனால், 21ம் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் வாகனத்தை சீராக இயக்கப்பாருங்கள். வீட்டிலும் குடி நீர்க் குழாய், கழிவு நீர்க் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் இருக்கும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். 30ம் தேதி முதல் செவ்வாயும், கேதுவும் 2ல் சேர்ந்து நிற்பதால் எதிர்பார்த்திருந்த பணம் வரும். ஏமாற்றங்கள் குறையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள்.

உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்ளாமல் இருந்த சகோதரங்கள் முழுமையாகப் புரிந்து கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் கவனமாக இருங்கள். சனிபகவான் ராசிக்குள்ளேயே நிற்பதால் வாயு பதார்த்தங்கள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! வேலை கிடைக்கும். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். மாணவர்களே! நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். லாபம் கூடும். உணவு, ரியல் எஸ்டேட், கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

எதிர் கடைக்காரருடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் நீங்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 19, 20, 21, 28, 29, 30 மற்றும் மே 1, 7, 8, 9, 10, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 22ம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 23, 24 ம் தேதி மாலை 05.12 மணி வரை.

மகரம்
வாழ்க்கை எனும் சதுரங்கத்தில் சாதுர்யமாக காய் நகர்த்தும் ராஜதந்திரிகளே! உங்கள் ராசிக்கு 8க்குரிய சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கும். அவருடன் மனக்கசப்புகள் வரக்கூடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவினங்கள் வந்து போகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். 30ம் தேதி முதல் ராசிக்குள்ளேயே செவ்வாயும், கேதுவும் நிற்பதால் உடல் நலம் பாதிக்கும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, தொண்டை புகைச்சல் வந்து போகும்.

உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி 12ல் நிற்பதால் தூக்கமின்மை, சளிப் பிரச்னை வந்து போகும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் நிலைமையை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தக்க நேரத்தில் பிரபலங்கள் உதவுவார்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள்.10ம் வீட்டிலேயே குரு நீடிப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். சிலர் உங்களைப் பற்றி தவறாக எல்லோரிடமும் சொல்வார்கள். கவனமாக செயல்படுங்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்பவர் வாழ்க்கைத் துணையாக அமைவார்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். மாணவர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். வருமானம் உயரும். கடையை அழகுபடுத்துவீர்கள்.

சிலருக்கு சொந்த இடத்திற்கே மாற்றம் உண்டாகும். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று பார்த்து அதை சரி செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உயரதிகாரிகள் வியக்கும்படி சில முக்கிய காரியங்களையெல்லாம் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். சங்கத்தில் புது பதவிகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி இடமாற்றம் அமையும். சம்பளம் உயரும். சிலருக்கு அயல்நாட்டிலும் வேலை அமையும். கன்னடம், தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் நிம்மதி கிடைக்கும்.

கலைத்துறையினரே! உங்கள் வருமானம் உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். பதக்கம், பரிசு பெறுவீர்கள். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 15, 17, 21, 22, 23,30 மற்றும் மே 1, 2, 3, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 26ம் தேதி இரவு 08.50 மணி முதல் 27, 28ம் தேதி வரை.

கும்பம்
போலியாக வாழாமல், ஆடம்பரத்திற்கும் ஆசைப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படுபவர்களே! கடந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசிக்கு 2ல் அமர்ந்து கொண்டு உங்களை உணர்ச்சிவசப்பட்டு பேச வைத்த, உங்களுக்கு பணப்பற்றாக்குறையையும் தந்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு உதவப் போகிறார்.

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்களையும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அடங்குவார்கள். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளெல்லாம் குறையத் தொடங்கும். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இழந்த சொத்தை மீண்டும் பெற வாய்ப்பிருக்கிறது.

குரு 9ல் தொடர்வதால் புது வேலை கிடைக்கும். தந்தை வழியில் உதவிகள் உண்டு. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வி.ஐ.பிகளும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வீர்கள்.

30ம் தேதி முதல் செவ்வாயும், கேதுவும் 12ல் அமர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சனி 11ல் நிற்பதால் ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

தாய்வழியில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் வரும்.

கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உங்களின் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களே! மனதில் ஒரு தெளிவு பிறக்கும். பழைய நண்பர்களை தேடிப் பிடித்து பேசுவீர்கள் அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். இடைத்தரகர்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். முக்கிய வியாபார விஷயங்களை நீங்களே நேரில் சென்று பேசி முடிப்பது நல்லது. கடந்த ஒரு மாதகாலமாக இருந்து வந்த மந்த நிலை மாறி இந்த மாதத்தில் இரட்டிப்பு லாபம் வரும். உத்யாகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் நிர்வாகத்திறமையை மதிப்பார்கள்.

திகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்விற்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் நீங்கி வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 14, 15, 16, 17, 23, 24, 25 மற்றும் மே 2, 3, 4, 12, 13,14.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 26ம் தேதி இரவு 8.51 மணி முதல் 27, 28ம் தேதி வரை.

மீனம்
சுற்றியிருக்கும் அழுக்குகளைத் தின்று சுத்தம் செய்யும் மீனைப்போல மற்றவர்களின் துன்பங்களை, துயரங்களை ஏற்றுக் கொள்ளும் சுமை தாங்கிகளே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு.

கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்திருந்த சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகி 2ல் நுழைந்திருப்பதால் பல் வலி, தொண்டைப் புகைச்சல் வந்து போகும். உணர்ச்சி வசப்பட்டுப் பேசி நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். குரு 8ல் அமர்ந்திருப்பதால் முன்கோபம், காரியத் தாமதம், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலைவலி வந்து போகும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்துங்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சனி 10ல் நிற்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் மதிக்கப்படுவீர்கள். வேலை கிடைக்கும்.

சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 30ம் தேதி முதல் செவ்வாயும், கேதுவும் லாப வீட்டில் சேர்ந்து அமர்வதால் சகோதரங்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். அவர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். மாணவர்களே! அலட்சியமாக இருக்காதீர்கள். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழு நேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு, தோலில் இருந்து வந்த நமைச்சல், தலைவலி யாவும் நீங்கும். ஆரோக்யம், அழகு, இளமை கூடும். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். வியாபாரத்தில் கடந்த மாதத்தைவிட இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! அந்த மந்த நிலை மாறும். புதிய சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். விளம்பர யுக்திகளையும் கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

சங்கத்திலும் இடம் பிடிப்பீர்கள். பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் இந்த மாதம் வேலைச்சுமை குறையும். மன இறுக்கம் நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களைத் தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். கலைத்துறையினரே! உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். வங்கிக் கடனை பைசல் செய்வது பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மன இறுக்கம் நீங்கி மகிழ்ச்சி தங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஏப்ரல் 16, 17 ,19, 20, 21, 25, 26, 27, 28 மற்றும் மே 4, 5, 6, 7, 9.

சந்திராஷ்டம தினங்கள்:
ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1ம் தேதி காலை 10.08 மணி வரை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: