சகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணத்துக்கு விலைபோக வில்லையெனவும், தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தியே பேரம் பேசியதாகவும் யுதுகம அமைப்பின் உறுப்பினர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டை ஏலத்தில் விட்டு முடிந்ததன் பின்னர், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏலத்தில் போட்டனர். ஆனால், தமிழ், முஸ்லிம் சகோதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது சமூகத்தின் கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசினர்.
ஆனால், எமது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது, தமது இனம் தொடர்பிலோ, தமது நாடு தொடர்பிலோ, நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்தோ எந்தவொரு கருத்தையும் கட்சி மாறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது தெரிவிக்கவில்லை.
நாம் சொல்கின்றோம். எம்மை எதிர்நோக்கியுள்ள தேர்தல்தான் இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கக் கூடியதாக முக்கிய சந்தர்ப்பம். இதனை நாட்டுமக்கள் தவறவிடக் கூடாது எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.