தமிழில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், திரைப்பட ரசிகர்களிடம் அவ்வளவு பெரிதாக அறிமுகம் கிடைக்காமலிருந்தும், தென்னிந்திய தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் பிரபல நிகழ்ச்சியான “BIG BOSS” என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கிலுமுள்ள தமிழ் நெஞ்சங்களிடம் அறிமுகம் பெற்றவர் நடிகை யாஷிகா.
BIG BOSS நிகழ்ச்சியின் பின்னர் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை யாஷிகா, அதிக கவர்ச்சி காட்டி நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் ஆபாசப் பட நடிகைகளுக்கு இணையாக ஒப்பிடப்பட்டு பலரதும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தார். தற்போது, இன்னொரு புதிய சிக்கலில் சிக்கி கேட்பவருக்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் யாஷிகாவின் சொகுசு கார் மோதி தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. விபத்து நடந்த போது காரில் யாஷிகாவின் நண்பர்கள் இருந்தனர் என்றும் யாஷிகா இருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் இணையத்தளங்களில் செய்திகள் பரவலாக வெளியாகியிருந்தன.
விபத்துத் தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து யாஷிகா கூறுகையில், ‘‘விபத்து நடந்த காரில் நான் இருந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை. அந்த காரில் நான் செல்லவில்லை. எனது நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்று கேள்விப்பட்டதும் நான் வேறு ஒரு காரில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றேன். இதனால் நானும் விபத்துக்குள்ளான காரில் இருந்ததாக பொய்யான தகவலை திட்டமிட்டு பரப்பிவருகின்றனர்’’ என்று தன்னிலை விளக்கமளித்துள்ளார்.