பூனை குறுக்கே செல்வது, கழுதையைப் பார்த்தால் யோகம், நரி முகத்தில் முழிப்பது, அமங்கலிப் பெண் எதிரே வருவது போன்றவை நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?
இதெல்லாம் தேவ லோகத்தில் நடப்பவை. கழுதை என்றால் கோவேரிக் கழுதை மட்டுமே யோகம். அதற்கு என்று தனி சக்தி உண்டு. மற்ற சாதாரண கழுதை எல்லாம் பார்த்தால் யோகம் இல்லை.
நரியிலேயே பெரு நரி, சிறு நரி என்று இரண்டு பிரிவு உண்டு. பெரு நரி சாதுவானது. மற்ற மிருகங்களை அடித்து சாப்பிடுவதில்லை. வழியில் ஏதாவது இருந்தால் அதனை மட்டும் சாப்பிடும். அதுபோல நரியிலேயே பல வகைகள் உண்டு.
பூனை, யானை போன்ற எல்லாமே தேவ லோகத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும். அவற்றை எல்லாம் பார்த்தாலே நல்லது. பூனையிலேயே செம்பூனை, கருப்பு பூனை என்றெல்லாம் இருக்கிறது.
இதில் வலம் போவது, இடம் போவது என்று இருக்கிறது. பொதுவாக பூனையைப் பொறுத்தவரை வலமிருந்து இடம் போனால் மிகுந்த நன்மை உண்டாகும். அது உண்மை. இடமிருந்து வலம் போனால் கொஞ்சம் சிக்கல் உண்டாகும்.
ஒரு வேலைக்குப் போகிறோம். பூனை வலமிருந்து இடம் போனால் கொஞ்சம் தெம்பாகப் போகலாம். அதுவே இடமிருந்து வலம் போனால் கொஞ்சம் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஆயத்தமாக வேண்டும். உடனே திரும்பிப் போய்விட்டு பின்னர் வரக் கூடாது. அதற்கு பதிலாக போக வேண்டிய காரியத்திற்கு எல்லாம் சரியாக எடுத்துக் கொண்டோமா என்று சரிபார்த்துக் கொண்டு செல்ல வேண்டும்.
அதாவது பூனை வந்ததால் காரியம் கெட்டுப் போனதாக எடுத்துக் கொள்ளாமல், காரியம் கெட்டுப் போவதை நமக்கு முன்னதாக உணர்த்தும் வகையில்தான் பூனை வருகிறது என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவைகள் இயற்கையோடு ஒன்றியிருப்பது. அவைகளுக்கு மட்டும் சில விஷயங்கள் தெரிந்திருக்கும். நாம் தான் இயற்கைக்கு எதிர்மறையாகப் போகிறோமே. அதனால் அவைகளுக்குத் தெரிந்ததை நமக்கு உணர்த்தவே அவ்வாறு நடக்கிறது.
அமங்கலி வந்தால் கெட்டது என்பதெல்லாம் தவறு. அமங்கலியாக இருந்தாலும், நல்ல மனது இருந்தால் அவர்கள் எதிரே வந்தால் நல்லதுதான். சுமங்கலியாக இருந்து அவர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் எதிரே வந்தால் கெடுதல்தான் நடக்கும்.
கெட்ட எண்ணம், கெட்ட நடவடிக்கைக் கொண்ட பெண்கள் சுமங்கலியாக இருந்தாலும் அவர்கள் எதிரே வந்தாலும் கெட்ட பலனையேக் கொடுக்கும். அதுதான் உண்மை.