கொ-லை(காரன்) கை புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – kolaikaran kai!

0

கொ-லை(காரன்) கை புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – kolaikaran kai!

அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது.

ஒரு நாள் சாயங்காலம் எங்கள் ரூமில் நாங்கள் உட்கார்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் நண்பன் பரமேஸ்வரன், “எங்கிருந்து வருகிறேன் என்று தெரியுமா?” என்று சத்தம் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“எங்கிருந்து வருகிறாய் என்று சொல்ல வேண்டுமாக்கும்?” என்று நாங்கள் அவனைப் பார்த்துச் சிரித்தோம்.

“போங்கடா முட்டாள்கள். ஊரிலிருந்து அதிசயம் ஒன்று கொண்டு வந்தால், முட்டாள்தனமாக என்னத்தையும் நினைத்துக் கொள்ளுகிறதா?” என்றான்.

“அதிசயத்தைச் சொல்லுமையா, கேட்போம்” என்றோம்.

பரமேஸ்வரன் வைத்திய கலாசாலை மாணவன். சஸ்திர வைத்தியத்தில் அபாரப் பிரேமை. கையில் ஏதோ ஒன்றைக் காகிதத்தில் சுருட்டி வைத்திருந்தான்.

“இதுதான் அதிசயம்” என்று அதைப் பிரித்துக் காண்பித்தான்.

அது ஒரு பிணத்தின் வெட்டுண்ட கை!

வெகு நாள் பட்டது. தோல்கள் சுருங்கி நகங்களுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.

“சீச்சீ! தூக்கி எறி,” என்று நாங்கள் கூவினோம்.

“இதன் கதை ரொம்ப சுவாரஸ்யமானது. கேளுங்கள்” என்று சாவதானமாக ஆரம்பித்தான்.

“நான் எங்களூருக்குப் போயிருந்தேன். அங்கே எங்கள் தெருவிற்கு மூன்றாவது தெருவில் ஒரு மந்திரவாதிச் சாமியார் இருந்தார். அவர் இப்பொழுதுதான் இறந்து போனார். தனி ஆசாமி. அனாதை.

பிரேத சமஸ்காரம் செய்ய அங்கிருந்ததை எல்லாம் ஏலம் போட்டார்கள். அப்பொழுது நான் இதை வாங்கினேன். இந்தக் கை இருக்கிறதே, அதன் கதை வெகு ஆச்சரியமானது. இந்தக் கையுள்ள மனுஷன் ஒரு வெள்ளைக்காரன்.

கையைப் பார்த்தால் அப்படித் தெரியாது அதில் எண்ணெயும் தூசியும் படிந்து நிறம் மாறி இருக்கிறது. அவன் நூறு வருஷத்திற்கு முன்பு இங்கே வந்தவனாம். பொல்லாத படுபாவி! இங்கு வரும்போது பட்டாளத்து ஸோல்ஜராக வந்தான்.

அதை விட்டுவிட்டு ஒரு ஜமீந்தாரின் கையாளாக இருந்தான். கையாள் என்றால் என்ன? ஆட்களை உயர அனுப்பும் வேலைதான். சீமையிலேயே அவன் செய்த அக்கிரமங்கள் கொஞ்சமல்ல. கலியாணமான மறுநாள் தன் மனைவியைக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டுக் கொன்றான்.

அதற்கு மறுநாள், தனக்குக் கலியாணச் சடங்கை நடத்தின அவன் இனத்து மதகுருக்களை மாதா கோவில் கோரியிலேயே கழுத்தில் சுருக்கு மாட்டி தொங்கவிட்டுக் கொன்றவன். பிறகு இங்கு வந்து இருந்தான்.

அப்பொழுது வெள்ளைக்காரர்களுக்கு அவன் செய்த அட்டூழியங்கள் பெருத்த அவமானமாக இருந்தது. ஒரு நாள் இரவு அவனைச் சித்திரவதை செய்து கொன்று புதைத்து விட்டார்கள். அப்பொழுது அவன் கையிருக்கிறதே, பல கொலைகள் செய்த அந்த வலது கை, அதைத்தான் முதலில் வெட்டினார்கள்.

பிறகு அந்தக் கையைப் பதனிட்டு எங்கோ தொங்க விட்டிருக்கிறார்கள். இந்த மந்திரவாதி இருந்தானே, அவன் காய சித்தி பெற்றவன் என்று சொல்லிக் கொள்ளுவான். அவனும் அந்தச் சமயத்தில் இருந்தானாம்.

எப்படியோ அந்தக் கையைத் திருடிக் கொண்டுவந்து ஒரு வெள்ளைக்காரப் பிசாசைத் தனக்கு அடிமையாக வைத்திருந்ததாகக் கதை. இந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு அதை வைத்திருக்க வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. உடனே வாங்கி வந்தேன்” என்று கதையை முடித்தான் எங்கள் நண்பன்.

“இதை என்ன செய்யப் போகிறாய்?” என்றேன்.

“இதை அறையில் கட்டித் தொங்கவிட்டிருப்பேன்,” என்றான் அவன்.

ராமராஜு என்ற நண்பன் பின்வருமாறு கூற ஆரம்பித்தான். “இம்மாதிரியாகக் கையை இழந்து மரணமடைந்தவனுடைய ஆத்மா, இழந்த கையைத் தேடும். அதை வைத்திருக்கிறவரைக் கொன்றுபோடும் என்று நான் கேட்டிருக்கிறேன்.”

உடனே எல்லோரும் சிரித்தோம். இருபதாம் நூற்றாண்டிலும் இம்மாதிரி பைத்தியக்காரப் பேர்வழியுண்டா என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் வைத்திய மாணவன்.

எம்.கே.நாயுடு என்ற பெரிய சரீரி, எல்லோரையும் கோட்டா பண்ணுகிறவர். ஒருவரையாவது விட்டுவைக்க மாட்டார். “ஆமாம்! இந்தப் புலி சொல்லுகிறதைக் கேட்டு முடிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்தப் பரமேஸ்வரனுக்கு மாமிசத்தில் கிறுக்கு விழுந்திருக்கிறது. அலைந்து போய் இதைக் கௌவிக்கொண்டு வந்திருக்கிறான்” என்று ஒரு போடு போட்டார்.

சிறிது நேரம் எல்லோரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தோம்.

நானும் பரமேஸ்வரனும் ஒன்றாக அவன் ரூமிற்குச் சென்றோம்.

அவன் அந்தக் கையைத் தன் கட்டிலுக்குமேல் தொங்கவிட்டு, ‘வாழ்வாவது மாயம்’ என்று சுவரில் எழுதினான்.

எனக்கும் பக்கத்து அறைதான். நேரமாகிவிட்டதென்று விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.

இரவு இரண்டு மணி இருக்கும்.

நான் திடுக்கிட்டு விழித்தேன். எங்கோ கூப்பாடு. இரைச்சல்.

கண்ணை விழித்ததும் பரமேஸ்வரனின் வேலைக்காரச் சிறுவன் என் பக்கத்தில் நடுநடுங்கிக்கொண்டு என்னை எழுப்ப முயல்வதை யறிந்தேன்.

முகத்தில் பயம் என்று எழுதியிருந்தது அவன் தோற்றம்.

“எஜமான், கொலை…” என்று என்னவோ அவன் உளறினான்.

நான் அவனைக் கவனியாது எனது நண்பன் அறைக்கு ஓடினேன்.

அறையின் நடுமத்தியில் என் நண்பன் தலைவிரி கோலமாகக் கிடந்தான்.

கண்கள் உள்ளே செருகி விட்டன. வெள்ளை விழி மட்டும் பயங்கரமாக விழித்தது. கைகால் தேகம் எல்லாம் முறுக்கிப் பின்னிக் கொண்டு கிடந்தன. அவன் கழுத்தில் சிவப்புத் தடம், வளையம் மாதிரி.

அதில் ஐந்து சிறு துவாரங்கள். அதன் வழியாகச் சிறிது இரத்தம் வடிந்து காய்ந்து கிடந்தது. வாயிலிருந்தும் கடைவாயிலிருந்தும் வழிந்த சிறிய இரத்த ஓடை.

பக்கத்தில் போலீஸ், – இரவு பீட் கான்ஸ்டேபிளும் அவன் கூப்பிட்டு வந்த ஒரு இன்ஸ்பெக்டரும், – என்னவோ எழுதிக் கொண்டிருந்தார்கள்.

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் எனது நண்பன் தொங்கவிட்டு வைத்திருந்த கையைக் காணவில்லை. பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறதென்று அதை எடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

போலீஸ் பின்வரும் ரிப்போர்ட்டை எழுதியிருந்தார்கள்:

“பரமேஸ்வரன் என்ற வைத்திய கலாசாலை மாணவன் தஞ்சையில் நல்ல பண்ணைக் குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பையன். அவன் இரவு வந்ததும், தனக்கு மிகவும் களைப்பா இருக்கிறது என்று வேலைக்காரப் பையனை வெளியே அனுப்பி விட்டுப் படுத்துக் கொண்டான்.

இரவு ஒன்று அல்லது இரண்டு மணி சுமாருக்கு அவன் அறையில், பெருத்த இரைச்சல் கேட்க, வேலைக்காரன் உள்ளே ஓடிச் சென்று பார்த்தான். தனது எஜமானர் தலைவிரி கோலமாகக் கிடப்பதைக் கண்டதும் வெளியே வந்து ஆட்களை உதவிக்குக் கூப்பிட்டான்.

உடன் போலீஸார் வந்து விசாரணை செய்யத் தொடங்கினார்கள். டாக்டர் வந்து பரிசோதித்து, கொலை செய்ய முயன்றவன், அமானுஷ்யமான பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கொலைஞனைப் பற்றி வேறு ஒரு புலனும் தெரியவில்லை.”

எனது நண்பன் இறக்கவில்லை. ஆனால் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.

அங்கிருந்தும் ஒரே புலம்பல்தான். “கிட்டவருகிறானே விடாதே, பிடித்துக் கொள்ளுங்கள்” இதுதான் ஓயாமல்.

ஒருநாள் நான் அவனைப் பார்க்கச் சென்றேன். துரும்பாக இளைத்துப் போனான். ஆளே அடையாளம் தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

அவன் எதிரில் உட்கார்ந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவன் என்னைக் கவனிக்கவே இல்லை.

திடீரென்று எழுந்தான் “கழுத்தை நெரிக்கிறானே! விடாதேயுங்கள். கழுத்தை நெரிக்கிறானே!” என்று சத்தமிட்டுக்கொண்டு அறையைச் சுற்றிச் சுற்றி ஓடிவந்து மத்தியில் விழுந்தான். பிராணன் போய்விட்டது.

பிறகு பிரேத சமஸ்காரத்திற்குக் கொண்டு போனோம். அவன் தகப்பனாரும் வந்திருந்தார். ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில்தான் மயானம்.

அவனுக்குச் சிதையடுக்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் சற்று தூரத்தில் இருவர் ஏதோ குழிவெட்டிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று இருவரும் ‘மனித எலும்பு’ என்று கூவினார்கள். நான் பக்கத்தில் சென்று கவனித்தேன்.

உள்ளே ஒரு இடிந்த சமாதி. அதனுள் ஒரு பெரிய எலும்புக் கூடு. கண்குழியில் ஒரு புழு. அதன் வலது முழங்கையிலிருந்த எலும்பைக் காணோம்!

என்ன?

அந்தச் சமாதிக் குழியில் ஒரு ஓரத்தில், எலும்புக் கூட்டின் இடது கையில் சுருங்கித் தோல் ஒட்டிக்கொண்டிருந்த முழங்கைத் துண்டு கிடந்தது. இடக்கை விட மாட்டேன் என்ற பாவனையாக அதன் மீது கிடந்தது.

அதே கை!

குழி வெட்டிக்கொண்டிருந்தவன், அதைக் கண்டுவிட்டான். “அடேயப்பா, கையை விடமாட்டாயோ?” என்று எடுத்தான். அந்த எலும்புக் கூட்டின் கண் குழியிலிருந்த புழு நெளிந்தது.

“தூ! அதை அங்கேயே போட்டு மூடிவிடு” என்றேன்.

“அப்படித்தான் செய்யவேண்டும் சாமி” என்றான்.

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகட்டில் பேசுகிறது புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kattil pesugirathu!
Next articleகுப்பனின் கனவு புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kuppanin kanavu!