சளி, இருமல், காய்ச்சல் வந்தால் இவற்றை செய்து பாருங்கள்! நோய் சொல்லாமல் ஓடிவிடும்! பாட்டியின் மந்திரம்!

0
11449

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில பாட்டி வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா?

பாட்டி வைத்தியங்களின் மூலம் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது, அது பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்தும். மேலும் பாட்டி வைத்தியங்கள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் அச்சமின்றி எவர் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிடிக்கிறதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நம் முன்னோர்கள் பின்பற்றிய சில எளிய கை வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் சளி, இருமல் பிரச்சனை போவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

* ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

* இந்த பானம் சளி, இருமலுக்கு நிவாரணம் அளிப்பதோடு, தொண்டைப் புண் மற்றும் காய்ச்சலுக்கும் நல்லது.

* சுக்கு பொடி, மிளகுத் தூள் ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் தேன் சேர்த்து கலந்து, தினமும் மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.

* வறட்டு இருமல் இருப்பவர்கள் இந்த வைத்தியத்தை மேற்கொள்வதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* துளசி மிகச்சிறந்த மூலிகை. இது சளி, இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கக்கூடியது.

* அதற்கு துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, தேன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் சளி, இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

மிகவும் காரமான மிளகுத் தூள் சளி, இருமலில் இருந்து விடுபட உதவும். அதற்கு இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை குடித்து வந்தால், விரைவில் சளி, இருமலில் இருந்து விடுபடலாம்.

* 1/4 டீஸ்பூன் சீரகப் பொடி, 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1 சிட்டிகை உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அவற்றை ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் வறட்டு இருமலுடல், தொண்டை கரகரப்பு போன்றவை சரியாகும்.

* இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இவற்றை அடிக்கடி குடித்து வந்தால், விரைவில் சளி, இருமலில் இருந்து விடுபடலாம். மேலும் இந்த சாறுகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.

பூண்டு மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக். சளி பிடித்திருக்கும் போது, தினமும் 2 பல் பச்சை பூண்டு சாப்பிட்டு வர, அதில் உள்ள மருத்துவ குணங்கள், உடலைத் தாக்கிய கிருமிகளை அழித்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளியில் இருந்து விரைவில் விடுபடச் செய்யும்.

* சளி, இருமலில் இருந்து எலுமிச்சை, பட்டை, தேன் கலவை நல்ல நிவாரணத்தை வழங்கும்.

* அதற்கு 1/2 டீஸ்பூன் தேனில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து கலந்து, தினமும் 2 முறை உட்கொள்ள, சளி, இருமலில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.

ஒரு முழு பூண்டு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் 5-10 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து, தினமும் இரண்டு வேளை எடுத்து வந்தால், சளியில் இருந்து விரைவில் விடுபட முடியும். இந்த பானம் குடிப்பதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். இருப்பினும் இது மிகச்சிறந்த பலனைத் தரும்.

இஞ்சியை விட மிகச்சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் எதுவும் இல்லை எனலாம். இஞ்சி எப்பேற்பட்ட பிரச்சனைக்கும் தீர்வளிக்கக்கூடியது. அத்தகைய இஞ்சியைக் கொண்டு ஒருவர் தினமும் டீ தயாரித்து குடித்து வந்தால், சளி, இருமல் பிரச்சனையே வராமல் தடுக்கலாம். வேண்டுமானால் குடிக்கும் டீயுடன் இஞ்சியை தட்டிப் போட்டும் குடிக்கலாம்.

* இஞ்சி மற்றும் தேனைக் கொண்டும் சளி, இருமலுக்கு தீர்வு காணலாம்.

* அதற்கு 10 மிலி இஞ்சி சாற்றுடன், 10 கிராம் தேன் சேர்த்து கலந்து உணவு உண்பதற்கு முன் தினமும் உட்கொண்டு வந்தால், வறட்டு இருமல், நாள்பட்ட சளியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

* மிளகு, பட்டை, கருஞ்சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த பொடியை வெதுவெதுப்பான பாலில் சிறிது சேர்த்து தேன் கலந்து குடித்து வருவதன் மூலம், சளி, இருமலில் இருந்து எளிதில் விடுதலை கிடைக்கும்.

* ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 5 மிளகு மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்ட வேண்டும்.

* இந்த பானத்தை ஒருவர் தினமும் 2 வேளை குடித்து வருவதன் மூலம், சளியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* மஞ்சளில் உள்ள மருத்துவ பண்புகள் சளி, இருமலில் இருந்து விடுவிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியை அதிகரிக்கும்.

* அதற்கு 1-2 கிராம் மஞ்சள் பொடியை வறுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து தினமும் 3 வேளை சாப்பிடுவதன் மூலம், சளி, இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

* மஞ்சள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும் பொருட்களுள் மிகச்சிறந்த ஒன்று.

* அத்தகைய மஞ்சள் பொடியை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து தேன் கலந்து, தினமும் 3 வேளை குடித்து வர வேண்டும்.

* இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தடுக்கப்படும்.

* 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளுடன், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 3 வேளை உட்கொள்ள வேண்டும்.

* இப்படி ஒருவர் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

* பிராந்தி உடலின் வெப்பநிலையை அதிகரித்து, நெஞ்சு பகுதியை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளும்.

* பிராந்தியுடன் தேன் கலந்து குடிப்பதன் மூலம், சளி, இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

* அதற்கு 1 டீஸ்பூன் பிராந்தியுடன், சில துளிகள் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

* வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

* மேலும் இந்த ஜூஸ் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும்.

* நெல்லிக்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல்வேறு நோய்களின் தாக்குதலை எதிர்த்துப் போராடும் வகையில் உடலைத் தயார் செய்யும்.

* அதற்கு தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கல்லீரலின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.

* சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்களுள் ஆளி விதையும் ஒன்று.

* ஆளி விதையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

* இந்த பானத்தை ஒருவர் சளி, இருமலால் அவஸ்தைப்படும் போது குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* இஞ்சியை சிறு துண்டுகளாக்கி, அதில் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இந்த உப்பு கலந்த இஞ்சியை நாள் முழுவதும் வாயில் போட்டு மென்று, சாற்றினை விழுங்க சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண்ணை எதிர்த்து விரைவில் விடுதலை அளிக்கும்.

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் சிறிது மிளகு, சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அத்துடன் வெல்லத்தை சேர்த்து கலந்து இறக்கி வடிகட்ட வேண்டும்.

* இந்த பானத்தை வெதுவெதுப்பான நிலையில் குடித்தால், நெஞ்சு சளி பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சொன்னா நம்பமாட்டீங்க… கேரட் ஜூஸ் சளி, இருமல் பிரச்சனையை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். கேட்பதற்கு வித்தியாசமாகத் தான் இருக்கும். ஆனால் இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: