களத்திற்கு விரையும் முப்படையினர்! முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள அபாய நிலை!

0

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளது.

அதில் சிக்குண்ட சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கின்றதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தகவல் வழங்கியும் அசட்டையீனமாக செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 1983ஆம் ஆண்டு குளத்தின் கட்டுமான பணியானது நடைபெற்றிருந்தவேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வேளை குளத்தின் அணைக்கட்டு பாரிய உடைப்பு ஏற்பட்டு அன்றிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை குளம் நீர் இன்றி காணப்பட்டது.

மேற்படி கால வேளையில் அதன் கீழான வேளாண்மையும் பாதிப்படைந்திருந்தது. 2018 ஆம் ஆண்டு வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.

இக்குளம் 7.11.2018 அதிகாலை 12.10 மணியளவில் உடைப்பெடுக்கும் போது நீரின் கொள்ளளவு 15 அடியாக காணப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்தனர். இவர்களை தேடி சென்ற உறவினர்கள் வெள்ளத்தின் மத்தியில் பகல் 11 மணியளவில் குளம் பெருக்கெடுத்த நிலையை அவதானித்தனர்.

இதன் பின்னர் மீட்கக்கூடிய உறவுகளை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்டெடுத்தனர். இருந்தும் அங்கிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவன், மனைவி, அவர்களது 12 வயது மகன் ஆகியோருடன் உறவுகளான மூவர் உட்பட ஆறு நபர்களை மீட்க முடியாத நிலையில் பிற்பகல் 2 மணியளவில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரான லிங்கேஸ்குமார் என்பவருக்கு தகவல் வழங்க அவர் தனக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் இரவு ஏழு முப்பது மணிக்கு பின்னரே குமுழமுனை பகுதிக்கு உரிய பணிப்பாளர் கொண்ட குழாமால் வருகை தர முடிந்தது.

பகல் வேளையிலேயே பயணிக்க முடியாத காட்டாற்று வெள்ளத்துடன் உடைப்பெடுத்த குள நீரும் சேர்ந்து ஓடும் வேளையில் இரவில் எவ்வாறு மீட்பு பணியை மேற்கொள்வது.

பகல்வேளையில் நிலவரத்தை பார்வையிட்டு முடிவெடுக்க வேண்டிய அதிகாரி அவரது அசமந்தப் போக்கினால் சிக்கியிருக்கும் ஆறு உயிர்களை பொருட்டாக மதிக்காது இரவில் வருகை தந்து இராணுவத்தினரிடமும், கடற்படையிடமும்,

விமானப்படையினரிடமும், பொலிசாரிடமும் உதவி கோரிய போது தர மறுத்து விட்டதாகவும், இப்போது மீட்பு பணியை மேற்கொள்ள முடியாதெனவும் பொறுப்பற்ற வகையில் கூறி தனக்கு தகவல் கிடைக்கவில்லை எனவும் மேற்படி பொறுப்புக்கூறும் நடவடிக்கையிலிருந்து நழுவ முற்பட்டார்.

அதன் பின்னர் வருகைதந்த இராணுவத்தினர் 10 மீட்டர் தூரம் வரை முன்னேறி திரும்பிச் சென்றுவிட்டனர். அதன்பின் மக்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தகவல் வழங்கியதன் பெயரில் இணைப்பு அழைப்பின் (Conference call) மூலம் முப் படையினரிடமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினருடனும் அழைப்பை ஏற்படுத்தி பேசியதன் பின் அனர்த்தத்தில் சிக்குண்டவர்களுடனும் பேசினர்.

பின் இரவு வேளையாகையாலும், காலநிலை சீரின்மையாலும் நாளை அதிகாலையிலே விமானப்படையினர் மீட்பு பணியை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததாக தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவம் என்பது ஏற்கனவே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டமாகும். வெள்ளமோ, சுனாமியோ ஓர் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் மீட்பு பணியாளர்களை தேடுவது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணியல்ல.

முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளருக்கு போதிய பயிற்சியோ, அறிவுறுத்தல்களோ இல்லாது பணி பொறுப்பினை வழங்கியமையால் அனர்த்தத்திற்குள்ளான மக்கள் உயிரிழக்கும் தறுவாயில் உள்ளனர்.

மேற்படி விடயத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையமும் சம்பந்தப்பட்ட அமைச்சும் கருத்திலெடுத்து எதிர்வரும் காலத்திலாவது உயிர்களுடன் விளையாடாது ஆக்கபூர்வமான பணியை செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபல அதிரடிகள் இன்னும் காத்திருப்பதாக மிரட்டுகிறார் மைத்திரி! பரபரப்பாகும் இலங்கை!
Next articleமீண்டும் சர்ச்சையில் முரளிதரன்! கிளிநொச்சி மாணவியின் தற்கொலையில் அரசியலா?