கன்னத்தை தடவிக் கொண்டே வலிக்கிதா எனக்கேட்டான். இப்போ வலிக்கல என்றேன்.

0
1217

அன்பு சூழ் இந்த உலகில் எத்தனை எத்தனை மனிதர்கள் காதலால் வாழ்ந்து காதலால் கசிந்துருகி காதலால் வாழ்ந்து காதலால் மடிந்தும் போகிறார்கள். உலகில் உயர்த்திப் பிடித்திருக்கும் ஓர் உணர்வு காதலென்றால் சிலரை அதள பாதாளத்திற்கு தள்ளுவதும் காதலாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதனை வாழ வைப்பதற்கு உயிர்ப்புடன் வைப்பதற்கு காதல் உதவுவது போலவே ஒரு மனிதனை வீழ்த்தவும் காதல் பயன்படுகிறது. இங்கே ஒரு கொலை ஒன்றல்ல மூன்று கொலைகள் நடந்திருக்கிறது . சத்தமின்றி உறங்கிக் கிடக்கும் அந்த ஊரில் இருக்கும் அத்தனை காதுகளுக்கும் அந்த அலறல் சத்தம் கேட்டிருக்கும் ஆனாலும் இழுத்து அடைத்துக் கொண்டு கள்ளத்தூக்கம் போட்டிருந்தார்கள்.

காதலன் தடம் தேடி :

உன்னை எப்படியாவது வந்து அழைத்துச் சென்று விடுவேன் என்று சுடலை செய்திருந்த சத்தியம் தான் உள்ளே அடித்துக் கொண்டிருந்தது. இந்த இரவில் எப்படியாவது வந்து விட வேண்டும். இன்னமும் அவன் வரவில்லை என்ற பதட்டத்தில் அடித்துக் கொண்டிருந்தது.

யாரிடம் தகவல் சொல்லியனுப்ப கூடைப்பூக்களை வந்து கொட்டி நாளை கோவில் விஷேசத்திற்கான பந்தலில் கட்டுவதற்காக கட்டிக் கொண்டிருந்த அக்காளிடம் சென்றாள். அவள் உறவுக்கார பெண்மணியல்ல என்பதால் தனக்கு உதவுவாள் என்று நினைத்து தனியாக அழைத்தாள்.

கொஞ்சம் பேசுக்கிறேன் :
ஏற்கனவே அரசல் புரசலாக விஷயம் கசிந்திருந்ததால் தான் உடனடியாக திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவில் திருவிழாவினை சாக்காக வைத்து இவர்கள் ஊரை விட்டே ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.

அக்கா…. ஒரு உதவி செய்யணும். போன் கொஞ்சம் தர முடியுமா? திருவிழாவுக்கு பக்கத்து ஊர்ல இருந்து என் கூட காலேஜ் படிக்கிற புள்ளைங்க எல்லாம் வரேன்னு சொன்னாங்க இன்னும் வர்ல என்றாள்.

கொஞ்சம் கூட சந்தேகமில்லாமல் போனை கொடுத்தாள் அந்த அக்கா…

சட்டென்று உள்ளே சென்று பரபரப்புடன் எண்களை அழுத்தி காதில் வைத்துக் கொண்டாள். ஹலோ….

திருவிழா :
ஊரில் இருந்து ஒரு சில காரை வீடுகளுக்கு வெள்ளை வெளேர் என்று சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் ஜரிகை நிறைந்து தாவணியும் சேலையும் அணிந்து கொண்டு வரிசையாக பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

திடிரென்று முளைத்திருந்த சந்தை நெருக்கமான திண்பண்டங்கள் விற்றுக் கொண்டிருந்து தெருக்கள் எல்லாமே ஜனக்கூட்டம் நிறைந்திருந்ததாக இருந்தது. கோவிலை நெருங்க நெருங்க கூட்டம் அலைமோதியது. ஒரு பக்கம் சந்தை கூட்டம் என்றால் இன்னொரு பக்கம் கோவிலைச் சுற்றி வலம் வருகிற தேரைப் பார்க்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் கூட்டம் அலைமோதியது.

சிக்கிக் கொண்ட பறவை :
தேர் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வலது புறமாக வந்து காத்திருக்கச் சொன்னான். நண்பர்களுடன் வந்து விடுவதாகவும், எதாவது சாக்கு சொல்லிவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அப்படியே தப்பித்து விடலாம் என்றான் சரி ஜாக்கிறதையா வந்துரு என்று சொல்லி போனை கட் செய்து கடைசியாக அழைத்த அவன் எண்ணை டெலிட் செய்து திரும்பினாள், பின்னால் அம்மா நின்று கொண்டிருக்கிறாள். அருகிலேயே எனக்கு போன் கொடுத்து உதவிய அக்கா.

புள்ளைங்க கிளம்பிட்டாங்களாம் அக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க இந்தாங்க போன் என்று அவரிடம் நீட்டினேன்.

கழுத்தைச் சேர்த்து ஓர் அடி விழுந்தது.

பாவி…. நாசமாபோறவளே :
யார ஏமாத்தப் பாக்குற நாயே…. வாயகட்டி வயித்த கட்டி படிக்க அனுப்பினா எவனையாவது கூட்டிட்டு ஓடுவ அத நாங்க பாத்துட்டு கையாட்டிட்டு நிக்கணுமா…. எந்த தைரியத்துல இப்டி பண்ணிட்டு இருக்க என்று அப்பா அடித்த ஒர் அடியில் சுருண்டு விழுந்தேன்.

திரும்ப திரும்ப அடி விழுந்து கொண்டிருந்தது. வீட்டிலிருந்தவர்கள் அப்பாவை தடுத்து பிடித்துக் கொள்ள என்னை எழுப்பினார்கள். வாயின் ஓரத்தில் ரத்தம் வழிந்தது. சனியன எங்காவது தலைமுழுகினா தான் என் ஆத்திரம் அடங்கும் என்று என் பிடரிமயிரை பிடித்து இழுத்து அறைக்குள் சென்றார்.

யாரும் கோவிலுக்கு போக வேணாம் :
நமக்கு திருவிழாவும் இல்ல ஒண்ணும் இல்ல….. இந்த நாயி எப்டி வீட்ட விட்டு வெளிய போறான்னு பாக்குறேன். எல்லாரும் உள்ள போங்க என்று அப்பா கத்த எல்லாரும் உள்ளே சென்றுவிட்டார்கள் .

சொல்லு எங்க வரேன்னு சொல்லியிருக்கான்…..போன்ல என்ன பேசின சொல்லு என்று கேட்டு கேட்டு எனக்கு கன்னத்தில் அறைகள் விழுந்தது.

இல்லப்பா…. அந்தப் பையன்கிட்ட பேசலப்பா என்று சொல்ல சொல்ல அடி விழுந்தது.

அம்மா கெஞ்சல் :

சிறிது நேரத்தில் அப்பா அறையிலிருந்து வெளியேற அம்மா வந்தார். இன்னும் சில பெண்களும் உடனிருந்தார்கள் அப்பா சொல்றத கேளு… அவன் என்ன ஆளு தெரியுமா? உனக்காக உங்க அம்மாவும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப்பட்டாங்க என்று வரிசையாக புராணம் பாட ஆரம்பித்திருந்தார்கள்.

அந்த கதைகளை உம்… கொட்டிக் கேட்க கூட என் உடலில் திராணியில்லை. அத்தை டம்ப்ளரில் சூடாக பால் ஆற்றிக் கொடுத்தாள். இந்த இதக் குடி.புள்ளைய எப்டி அடிச்சிருக்கான் பாரு முகமே சிவந்து போச்சு என்று தரையில் படுத்திருந்த என்னை எழுப்பி தன் தோலில் சாய்த்துக் கொண்டாள். பாலை மெல்ல குடிக்க வைத்தாள்.

அப்படியே…. அவ பொண்ணு இப்டி தான் போனா ரெண்டே மாசத்துல அந்த பையன் ஏமாத்திட்டான்னு வயித்துல புள்ளையோட வந்துட்டா…. இன்னொருத்தி கல்யாணம் பண்ணி இன்னக்கி நாய் படாத பாடு பட்டுட்டு இருக்கா என்று வெவ்வேறு ரூபங்களில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் பட்டியலும் அவர்களின் வாழ்க்கைச் சூழலும் விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது ரவுண்ட் :
என்னடி உன் புள்ள வாய தொறக்குறாளா இல்லையா…..

அம்மா பதிலேதும் சொல்லவில்லை…. மீண்டும் எங்கே அடி விழுந்து விடுமோ என்று நானே வாயைத்திறந்தேன். சத்தியமா நான் போகலம்மா யார்ட்டையும் பேசலம்மா என்று அழுது கொண்டே சொன்னேன் .

நீ சொல்றத எல்லாம் நம்புறதுக்கு என்னை என்ன கேணையன்னு நினச்சியா என்று மீண்டும் அடி விழுந்தது.

கோவிலுக்கு செல்ல ஏற்பாடு :

மதியம் போல கூட்டமிருக்காது. தேர்,பொங்கல் எல்லாமே முடிந்திருக்கும் நேராகச் சென்று சுவாமியை மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பலாம் திருவிழாவ பாக்க ஊர்லயிருந்து எல்லாம் வர்றாங்க நம்ம இங்க இருந்துட்டு போகலைன்னா எப்டி என்று ஒருவர் ஆரம்பிக்க அப்பா சம்மதித்தார்.

என்னை இங்கே விட்டுச் செல்லவும் முடியாது என்பதால் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

வழிகளில் :
என் இரு கைகளையும் ஒரு பக்கம் அம்மாவும் இன்னொரு பக்கம் அத்தையும் இருக்கப் பிடித்துக் கொண்டார்கள். முன்னால் சித்தியும் பின்னால் பெரியாம்மாவும். அதற்கு அடுத்தப்படியாக பெரியப்பா முன்னால் சித்தப்பாவும் அப்பாவும் சென்று கொண்டிருந்தார்கள். கடைசியாக சற்றுத் தொலைவில் தாத்தாவும் பாட்டியும் வந்து கொண்டிருந்தார்கள்.

வழியில் சந்திப்போரிடம் எல்லாம் விசாரித்துக் கொண்டும் புள்ளைக்கு நேத்துல இருந்து காச்ச… என்று வாண்ட்டடாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் பரிதாபப் பார்வையுடன் சில வைத்தியர்களையும், வைத்திய முறைகளையும் சொல்லிச் சென்றார்கள். சிலர் மந்திரிக்கச் சொன்னார்கள்.

கோவில் வாசலில் :

கோவிலை நெருங்க நெருங்க தேர் நிற்கும் இடத்தை பார்த்துக் கொண்டே வந்தேன். காலையிலிருந்து எனக்காக காத்துக் கொண்டு இருப்பான் தானே. இந்நேரம் வரை இருப்பானா? என்று சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தேன். ஆட்கள் சிலர் நிற்பது தெரிந்தது.

அம்மா…சாமிக்கு மாலை வாங்கிட்டு போகலாம் என்றேன்.

யோசித்தார்கள்.

நீங்க உள்ள போய்ட்டு இருங்க நான் போய் வாங்கிட்டு வந்திடறேன் என்றேன்

முறைத்தார்கள்.

பின் அப்பாவிடம் சொல்ல இதே கும்பலுடன் எல்லாரும் பின்பக்கம் தேர் நிற்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் பூக்கடைக்குச் சென்றோம். இரண்டு பக்கங்களிலும் நிற்கும் அம்மாவும் அத்தையும் என்னை பிடித்திருக்கும் பிடியை இறுக்கிக் கொண்டார்கள். எல்லாரும் சற்று நெருக்கமானார்கள்.

கொஞ்சம் விட்டிருந்தால் மூச்சு விடக்கூட வேலி அமைத்திருப்பார்கள்.

அவனை பார்த்து விட்டேன் :

என் கவனம் முழுக்க போனில் அவன் சொல்லியிருந்த இடத்தை நோக்கியே இருந்தது. சொன்ன இடத்தில் அவன் இல்லை…. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் எதிரில் இருந்த ஹோட்டலின் வாசலில் சில நண்பர்களுடன் நின்றிருந்தான்.

பார்த்து விட்டான். கும்பலாய் செல்வதைப் பார்த்து நிலைமையை யூகித்து அருகில் வரவில்லை. அவனுக்கு தெரிந்து விட்டது என் நிலைமை. இப்போது எல்லாரும் என்னையும் என் செய்கைகளையும் எங்கே பார்க்கிறேன் என கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கற்கண்டு :
தப்பித் தவறியும் அவனை பார்த்து…. காட்டி கொடுத்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருந்தேன். உள்ளே சென்று சாமி கும்பிட்டோம். எல்லா பிரகாரங்களுக்கும் சுற்றி வந்தோம்.

சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எப்படியும் கை கழுவ வெளியில் தான் செல்ல வேண்டும் அப்போது எதாவது பேசலாமா என்று நினைத்துக் கொண்டிருக்க. கையில் ஒரு பேப்பருடன் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்தான். இங்கே தான் வருகிறான் என்று தெரிந்தது பதட்டத்தில் இங்கே தான் வருகிறான் என்று தலையை குனிந்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தேன்.

சாமி பிரசாதம் என்று எல்லாருக்கும் கற்கண்டை கொடுத்தான் அவனோடு இருந்த ஒரு நண்பன், உட்கார்ந்திருந்த எங்களுக்கு மட்டுமல்லாமல் அங்கே இருந்த மற்றவர்களுக்கும் கொடுத்தான்.

செய்தி வந்தது :
இப்பதான் சக்கரப் பொங்கல் சாப்டுறீங்க உடனே கற்கண்டையும் சாப்ட முடியாது…. ரொம்ப நேரம் கையிலயும் வச்சிருக்க முடியாது. அதனால பேப்பர்ல வச்சு பொட்லம் கட்டிக் கோங்க என்றபடி உட்கார்ந்திருந்த எங்கள் எல்லாருக்கும் சிறிய பிட்டுப் பேப்பரை கொடுத்தான். எல்லாரும் சிரித்துக் கொண்டே வாங்கினார்கள்.

நானும் வாங்கிக் கொண்டேன். கற்கண்டை வைத்து மடித்துக் கொண்டே பேப்பரில் எழுதியிருந்ததை வாசித்தேன். பால் குடம் எடுக்கும் நேரம் மாலை ஏழு, சுவாமி புறப்பாடு மணி எட்டு என்றிருந்து.

படித்ததை அவன் பார்த்து விட்டான். நிமிர்ந்து தலையசைத்தேன்.

மாலை :
மதியத்தில் எந்த கலேபரம் நடக்காததால் கொஞ்சம் ஆசுவாசமடைந்திருந்தார்கள். ஆனாலும் அப்பாவின் பார்வை முழுக்க என் மீது தான். ஆறு மணிக்கே பெண்கள் பால் குடம் எடுக்க கிளம்பி விட்டார்கள். என்னையும் பால் குடம் எடுக்கச் சொல்ல வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டேன்.

ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மணி ஏழாகிவிட்டது பால்குடம் எடுக்கும் இடத்தில் கூட்டம், ஒவ்வொருவரும் தங்களின் பால்குடத்தை எடுத்து கோவிலை வளம் வர வேண்டும். பின்னர் அந்த பாலில் அபிஷேகம் நடக்கும். கோவிலை வளம் வரும் போது சுடலையை பார்த்து விட்டேன்.

கூட்டத்தோடு கூட்டமாக :
அப்படியே விலகி கூட்டத்திலிருந்து வெளியே வரச் சொன்னான். சுற்றும் முற்றும் பார்த்தேன். என் நடையை மெல்ல மெதுவாக்கினேன் பின்னால் இருந்தவர்கள் என்னை இடித்துக் கொண்டு முன்னேறினார்கள். அம்மா கத்தி கத்தி அழைத்தாள். நகர முடியலம்மா என்று கஷ்டப்பட்டு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைப்பது போல பாவ்லா காட்டினேன்.

மெல்ல மெல்ல கூட்டம் முடியப்போகிறது. பால் குடத்தையும் மாலையையும் கழற்றி கையில் வைத்துக் கொண்டு கூட்டத்திலேயே விலகி நடந்து தண்ணீர் தொட்டிக்கு பின்புறம் சென்றுவிட்டோம்.

மாட்டு வண்டியில் :
அங்கே மாலையையும், பால் குடத்தையும் வைத்து விட்டு, அங்கிருந்து மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். ப்ளான் செய்தது போல அவனின் நண்பர்கள் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்கள்.

காலையில் நடந்தவற்றை முகத்தை வைத்தே கண்டுபிடித்திருந்தான். முகத்தில் வரி வரியாய் படிந்திருந்த அப்பாவின் விரல்கள் அவனுக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும். எதுவும் பேசவில்லை .

கன்னத்தை தடவிக் கொண்டே வலிக்கிதா எனக்கேட்டான். இப்போ வலிக்கல என்றேன்.

மீண்டும் சிக்கல் :
கோவிலை விட்டு சற்று தொலைவான இடத்திற்கு வந்து விட்டோம். இன்னும் சிறிது நேரத்தில் ஊரைத் தாண்டிவிடலாம்.

அங்கே என்னைக் காணாமல் தேட ஆரம்பித்திருப்பார்கள்.ஒவ்வொருவரும் பைக்கை எடுத்துக் கொண்டு நாலாபுறமும் தேட ஆரம்பித்தார்கள். ஊரே கோவிலில் குழுமியிருக்க ஒரேயொரு மாட்டு வண்டி மட்டும் ஊருக்குள்ள போச்சு என்று சிலர் சொல்ல எங்கள் வண்டியாகத் தான் இருக்கும் என்று துரத்த ஆரம்பித்தார்கள்.

மாட்டிக் கொண்டோம் :
ஊரைத் தாண்டிய நேரத்தில் இன்றோடு எல்லாம் தீர்ந்தது என்று நினைத்து முடிப்பதற்குள் இரண்டு பைக்குகள் எங்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

எங்கள் வண்டியை கடந்து வந்து நிறுத்த வண்டியை ஓட்டியவர்கள் எல்லாம் இறங்கி சிதறி ஓடினார்கள். பின்னால் இருக்கும் நாங்கள் வண்டியை விட்டு இறங்கி எங்கே ஓடுவது என்று தெரியமால் இருவரும் இருக்கமாக கைகளை பிடித்துக் கொண்டு நின்றோம்.

கடைசி இரவு :
சிறிது நேரத்தில் அப்பா பெரியப்பா எல்லாரும் வந்தார்கள். அப்பாவின் கண்களில் ஒர் வெறி இருந்தது இதுவரை அப்படியொரு கோபத்தை பார்த்ததில்லை. இருவருக்கும் சராமாரியாக அடி விழுந்தது.

என்னை அடித்து பைக்கில் ஏற்றினார்கள். அவனை எங்கோ இழுத்துச் சென்றார்கள்.

சப்தமின்றி நடந்தவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் யாவும் ஊருக்கே தெரிந்தே தான் இருக்கிறது.

தோட்டத்து வீட்டில் :
அந்த நடு இரவில் தோட்டத்தை நோக்கி சீறிப் பாய்ந்த பைக்குகளை எல்லாரும் வெறித்து வேடிக்கை பார்த்தார்கள். கையையும் வாயையும் கட்டினார்கள். சரமாரியாக அடி விழுந்தது. சுருண்டு விழுந்து கிடந்த என் வயிற்றில் ஓங்கி மிதிக்க தாங்க முடியாத ரண வலியுடன் மயக்கமானேன். அதன் பிறகு கண்ணைத் திறக்கவேயில்லை நிரந்தரமாக மூடிவிட்டிருந்தேன்.

மறுநாள் :
தோட்டத்திலேயே இரவோடு இரவாக என் உடலில் மண்ணென்யை ஊற்றி தீ முட்டியிருந்தார்கள் . அவனையும் அடித்து அளவுக்கு அதிகமாக மதுவை குடிக்க வைத்து முழு போதை ஏறியதும் கிணற்றில் மூழ்கடித்து கொன்று போட்டார்கள்.

குடிச்சுட்டு கிணறு இருக்குறது கூட பாக்காம விழுந்து செத்துட்டான் என்று புரளியை கிளப்பி நம்ப வைக்கப்பட்டது.

ரொம்ப வயித்த வலி, காச்ச வேற…. திருவிழா அப்பயும் வயித்த வலின்னு அழுதுட்டே இருந்துச்சு இங்க ரொம்ப சத்தமா இருக்கு தோட்டத்து வீட்ல கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்னு சொன்னா அவ அப்பா தான் கூட்டிட்டு போனாரு வெளிய வந்து கட்டில விரிச்சு போடறதுக்குல்ல உள்ள கத்துற சத்தம் உள்ள கதவ பூட்டியிருந்தா திபுதிபுன்னு எரிஞ்சிட்டு கிடந்தா உள்ள போய் காப்ப்பாத்தவும் முடியல என்று கதையை அளந்து கொண்டிருந்தார்கள்.

வஞ்சனையில்லாமல் அழுது தீர்த்தார்கள். ஊருக்கே விஷயம் தெரிந்திருந்தும் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று பால்குடம் எடுத்த அந்த முருகனுக்கே வெளிச்சம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: