இன்னும் திரை காணாது, ஆரம்பமே குழப்பமாக அமைந்து விட்டாலும், அழகிய கன்னியர்களின் மனம்கவர் கள்வனாக மாறிப்போயுள்ளார் ‘சீயான்’ விக்ரமின் மகன் துருவ் விக்ரம்.
நடிகர் விக்ரமிற்கு திரையுலகில் தனது திரைப்படத்தின் மூலம் ஒரு திருப்புமுனையை தேடிக்கொடுத்த இயக்குனர் பாலா இயக்கத்தில், “வர்மா” என்ற பெயரில் துருவ் விக்ரம் நடித்துக்கொண்டிருந்த முதல் படம் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில், தற்போது “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் மீண்டும் அதே கதையில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கின்றார் துருவ்.
“அர்ஜுன் ரெட்டி” என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மீளுருவாக்கமாக வெளிவரவிருக்கும் “ஆதித்திய வர்மா” என்ற இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகின்றார் துருவ் விக்ரம். இந்தப் படம் நவம்பர் மாதம் 8ம் திகதியே திரைகாணவுள்ளது. இருந்தும், அறிமுகமாகும் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே இளம் ரசிகைகள் வட்டமொன்று துருவ் விக்ரமிற்கு சேர்ந்திருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது இப்படியிருக்க, மலையாளத் திரைப்படமான “ஒரு அடார் லவ்” படத்தில் நாயகியாக நடித்தவரும், தனது கண் சிமிட்டல் மூலம் தென்னிந்திய இளம் ரசிகர்களை கவர்ந்துகொண்டவருமான இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், கதாநாயகனாக அறிமுகமாகும் துருவ் விக்ரம் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.