தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துமளவுக்கு வடக்கு முதலமைச்சர் ஒன்றையும் கிழித்துக்கொண்டு செல்லவில்லை, தமிழ் மக்கள் பேரவையினை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார், இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று போய்விட்டார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையில் இனி நான் இல்லையென்று தெளிவாக விக்னேஸ்வரன் கூறிவிட்டார். ஆகவே தமிழ் மக்கள் பேரவை கைவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சிய ஆரம்பித்தமை தொடர்பில், அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கூட்டங்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்த நேரங்களில் எல்லாம் வராமல் இருந்துவிட்டு இன்று தன்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொம்மையாக பாவித்ததாக கூறுவது கேள்விக்குறியான விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துமளவுக்கு வடக்கு முதலமைச்சர் ஒன்றையும் கிழித்துக்கொண்டு செல்லவில்லை. ஏற்கனவே ஒரு சகோதரர் போயிருக்கின்றார். அதுபோன்று இன்று முன்னாள் வடக்கு முதல்வரும் போயிருக்கின்றார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு என்று சொல்லமுடியாது.
அரசியல் வரலாற்றினை எடுத்து பார்க்கும்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட அமரர் நவரெட்னம் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறியபோது அப்போது அதுவொரு அலையாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த விடயம் இருந்த இடம் தெரியாமல் போயிவிட்டது.
அதுபோலவே அனந்தி சசிதரனும் ஒரு கட்சியை உருவாக்கியுள்ளார். விக்னேஸ்வரன் நேற்று பிரகடனப்படுத்தியுள்ளார், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே எம்மைவிட்டு விலகியும் விலகாமலும் இருக்கின்றார். பெரிய அரசியல் கட்சிகளில் எல்லாம் இவ்வாறு நடப்பது சாதாரண விடயமாகவே நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டால் அது ஆரோக்கியம் என்று சொல்லலாமேயொழிய இந்த பிரிவுகள் பாதிப்பினை ஏற்படுத்தாது. ஏனென்றால் அரசியல் தீர்வின் செயற்பாடுகள் எல்லாம் நாடாளுமன்றத்தில் முடியும் நிலைக்கு வந்து விட்டது.
அடுத்தகட்டமாக அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்கப்படவுள்ளது. அதனை முன்வைத்ததன் பின்னர் அதனை தீர்மானிப்பவர்கள் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இதற்கு ஜேவிபி ஆதரவு வழங்கும், இடதுசாரிகளில் உள்ளவர்கள் கூட எங்களுக்கு ஆதரவாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். வெளியில் நடைபெறும் இவ்வாறான பிரிவுகள் அரசியல் தீர்வில் பாதிப்பினை ஏற்படுத்திக்கூடிய நிலையிருக்காது.
பிரிந்து சென்றவர்களுடன் பேசுவதற்கு நாங்கள் என்றும் தயாராகவே இருக்கின்றோம். மக்களும் அவர்களுடன் பேசவேண்டும். நாங்கள் விக்னேஸ்வரனை வலிந்து அரசியலுக்குள் அறிமுகப்படுத்தினோம், மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தினோம்.
விக்னேஸ்வரன் என்பதற்காகவோ,அவரது ஆளுமையினை கருத்தில்கொண்டோ நாங்கள் அவரை வலிந்து அரசியலுக்குள் இழுக்கவில்லை. அப்போது பொதுக் கூட்டங்களில் பேசும்போது தமிழர்கள் தொடர்பாக நேரிய சிந்தனையுடன் இருப்பதாக அப்போது வெளிப்படுத்தி வந்தார். அவரது அந்த கொள்கை கோட்பாடுகளுக்கு மேலாக ஒரு உயர்நீதிமன்ற நீதியரசர் என்கின்ற அந்த உருவம் காரணமாக நாங்கள் கவரப்பட்டோம்.
குறிப்பாக எங்களது மத்திய குழுவில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமிக்கவேண்டும் என்ற பிரேரணையை நான்தான் கொண்டுவந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருந்தோம்.
இணைந்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டோம். பாரிய வெற்றியைப் பெற்றார். உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. ஆனால்; தமிழர்களின் வரலாறு இவ்வாறு துன்பங்களை சுமந்தே செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே இருக்கவேண்டுமோ தெரியவில்லை.
விக்னேஸ்வரன் படிப்படியாக எங்களுடன் ஒத்துழைத்து செல்லாத நிலையே இருந்துவந்தது. அவர் கட்சி சாராதவர் என்று தன்னை கூறினாலும் அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவே தேர்தலில் போட்டியிட்டார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களுக்கு அழைத்தபோதிலும் அவர் ஒரு கூட்டத்திற்கும் வரவில்லை.
ஆனால் வடகிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் ஓருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெறும்போது ஒரேயொரு கூட்டத்தில் மட்டுமே அவர் பங்குபற்றியிருந்தார்.
தற்போது கூறுகின்றார் கூடிக்கதைப்பதில்லை, பேசுவதில்லையென்று. அவ்வாறு இல்லை. நாங்கள் அடிக்கடி கூடிக் கதைத்திருக்கின்றோம். கலந்துரையாட வேண்டிய முக்கிய சந்தர்ப்பங்களில் எல்லாம் கலந்துரையாடியே முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.
பல கூட்டங்களில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அரசியலமைப்பு தொடர்பான எங்களது வரைபு கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
அது இரகசியமாக பேணப்பட வேண்டிய ஆவனம் என்று சொல்லப்பட்ட நிலையிலும் அது ஆங்கில பத்திரிகையொன்றில் பிரசுரமான நிலையும் இருந்தது.
இவ்வாறு எல்லாம் இருக்கும்போது சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைவசம் ஒரு அரசியல் யாப்பும் இல்லையென சொல்லிக்கொள்கின்றனர்.
விக்னேஸ்வரனின் பிரிவு என்பது உடனடியான ஒரு சலனத்தினை ஏற்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பாதிப்பனையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் எல்லோரும் தமிழ் மக்களின் பிரச்சினையை வென்றெடுக்கும் அவசியத்தினை உணரவேண்டும்.
ஒரு வீட்டுக்குள் பல பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. ஒவ்வொருவருக்கும் இடையில் வேற்றுமைகள் ஏற்படுவதுண்டு. இந்த நாட்டில் பெறப்போகும் அரசியலமைப்பு என்பது எமது அபிலாசைகள் அனைத்தையும் ஒன்றாக தரும் ஒன்றாக இருக்கமுடியாது. தற்போதுள்ள நிலையில் பெறக்கூடிய அதியுச்ச அடைவு இருக்கின்றபோது இவ்வாறு பிரிந்து நிற்பதை சிந்திக்கவேண்டும்.
தற்போதுள்ள நிலையில் ஒரு கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேண்டும் என்பது போல பிரிந்து நிற்பதும் ஒரு ஆரோக்கியம் என்றே நான் சொல்வேன். ஏனென்றால் நாங்கள் அசந்து போய்விடாமல் இன்னும் விழிப்படைய செய்வதற்கு இவ்வாறு பிரிந்து நிற்பதுபோல இருப்பதும் மற்றவர்களை விழிப்படையச்செய்து உற்சாகமடையச் செய்யவேண்டும்.
நாங்கள் அரசியலமைப்பின் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாங்கள் கோட்டை விட்டுள்ளோம். டொனமூர் சட்டத்தினை ஏற்றுக்கொள்ளாமல் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அதனை ஏற்றுக்கொண்டோம்.
அதேபோன்று பண்டா-செல்வா ஒப்பந்தம் வந்தபோது தமிழ் காங்கிரஸ் அதனை கடுமையாக எதிர்த்தது. டட்லி-செல்வா ஒப்பந்தம் வந்தபோதும் தமிழர்களுக்குள் எதிர்ப்பு இருந்தது. இதனையெல்லாம் நாங்கள் பாடமாக எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
விக்னேஸ்வரன் அவர்கள் சமஸ்டியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அரசாங்கத்துடன் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். சமஸ்டியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் சிங்கள அரசாங்கம் ஒன்று இந்த நாட்டில் என்றும் உருவாகாது. அவர் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும் தேவைக்காவது சமஸ்டி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது.
விக்னேஸ்வரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் அதிகாரத்தினை பிரயோகிக்கின்ற மத்தியிலும் மாகாணங்களிலும் நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இது சமஸ்டி தன்மையினையே சொல்கின்றது.
அதிகார பரவலாக்கல் சமஸ்டியைதான் சொல்கின்றது. இதனை இறுதி நேரத்திலாவது இதனை அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லுகின்ற நிலமை வரவேண்டும். இதற்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையினை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார்,இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில் இனி நான் இல்லையென்று தெளிவாக கூறிவிட்டார். ஆகவே தமிழ் மக்கள் பேரவை கைவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியெழுந்துள்ளது.
கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று கற்பூரமாக கரைந்து கொண்டுவருவதை காணமுடிகின்றது. அவர்களும் இதனால் இலாபமடையப் போகின்றவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இலாபம் ஏற்பட வேண்டுமானால் எங்களுக்குள் இருக்கின்ற சித்தாந்த ரீதியான விமர்சனங்களை விடுத்து ஒன்றிணைந்து பயனிக்கமுன்வர வேண்டும்.
தன்னை பொம்மையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தியதாக விக்கேஸ்வரன் கூறுகின்றார்.அவர் எதனை வைத்து இவ்வாறு கூறுகின்றார் என்று தெரியாது.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை அவருக்கு நாங்கள் வழங்கியிருக்கின்றோம். கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டு தன்னை பொம்மையாக பாவிக்கின்றார்கள் என்று நினைப்பது என்பது கேள்விக்குறியான விடயமாகவே பார்க்கவேண்டும். நிகழ்வு ரீதியாக அவ்வாறான எந்த விடயமும் நடைபெறவில்லை.
விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்த சிரேஸ்ட சட்டத்தரணி இவரை சம்பந்தர் ஐயாவுடன் மூன்று தடவைகள் பேசுவதற்கு செய்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் பின்னர் கூட அவரது நிலமையில் மாற்றம் ஏற்படவில்லை. திறந்த மனதுடன் பேசவேண்டும். தான் வைத்துள்ள விடயங்களை மட்டும் வலியுறுத்திச்செல்வதனால் மட்டும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது. இரண்டு பக்கங்களிலும் விட்டுக்கொடுப்புகள் இருக்கவேண்டும்.
விக்னேஸ்வரனை நாங்கள் கௌரவமாக நடாத்தியுள்ளோம். உறுப்பினர்களின் கூட்டங்களில் எல்லாவற்றுக்கும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டன. அவ்வாறான நிலையில் எல்லாம் வராமல் இருந்துவிட்டு தன்னை பொம்மையாக பாவிக்கின்றார்கள் என்று கூறுவதன் விளக்கம் எங்களுக்கு தெரியாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.