எங்களது உயிர்களுக்கு மீளவும் அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
எங்களது உயிரை பணயமாக வைத்து மேடைகளில் ஏறி பிரகீத் காணாமல் போனது, தாஜூடீனின் மரணம், லசந்த கொலை போன்றவற்றை விற்று நாட்டில் நல்லாட்சி ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
எமக்கு நியாயம் கிட்டும் சத்தியம் வெல்லும் என நாம் நினைத்தோம். எனினும், நாம் பதவியில் அமர்த்திய ஜனாதிபதி மீளவும் எமது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மிகவும் மோசமான முறையில் சர்வாதிகார போக்கில் ஜனாதிபதி செயற்படுகின்றார். காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு என்ன நேரும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்மால் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு என்ன நேரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? நியாயம் கிட்டுமா? என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை நியமிப்பதற்கு குரல்கொடுத்தவர்கள் என்ற ரீதியில் உடனடியாக நாடாளுமன்றை கூட்டுமாறு நாம் அவரை கோருகின்றோம்.
எதேச்சாதிகார தீர்மானத்தை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமென சந்தியா எக்னெலிகொட கோரியுள்ளார்.