என்னை மறந்துடுன்னு கதறினார்: கால்களை இழந்த காதலனை கரம்பிடித்த ஷில்பா உருக்கம்

0
369

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த காதலனை பெற்றோர் எதிர்ப்பை மீறி ஷில்பா என்ற பெண் திருமணம் செய்துகொண்ட செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

காதலித்துவிட்டு ஏமாற்றும் இந்த காலத்தில் தனது காதலன் கால்களை இழந்தபோதும், அதே அன்பு மாறாமல் காதலித்த ஷில்பாவை அனைவரும் பாராட்டினர்.

இவர்கள் இருவரும், கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர். இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து விஜய்க்கு இடது கால் துண்டானது வலது காலும் செயலற்றுப் போனது.

இரண்டு கால்களும் இல்லாத நிலையில், தனது மகளை எவ்வாறு விஜய்க்கு திருமணம் செய்துவைப்பது. விஜய் எப்படி எனது மகளை காப்பாற்றுவான் என ஷில்பாவின் பெற்றோர் பின்வாங்கியுள்ளனர்.

மேலும், ஷில்பாவிடம் விஜய்யை மறந்துவிடுமாறும் கூறியுள்ளனர். ஆனால் பெற்றோர்களின் பேச்சை ஷில்பா கேட்கவில்லை.

விஜய்யை திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்ட நாள் குறித்து ஷில்பா குறித்து கூறியதாவது, விபத்து நடந்து 2 மாதமாகியும் விஜய்யை பார்க்கவில்லை.

எனது பெற்றோரிடம் என்னை அழைத்து செல்லுங்கள் என கூறினேன், ஆனால் மறுத்துவிட்டார்கள், விஜய்யுடன் தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே இருந்தேன்.

என்னோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த விஜய், திடீரென எனது அழைப்பினை ஏற்கவில்லை, தொடர்ச்சியாக எனது அழைப்பினை கட் செய்துகொண்டே இருந்தார்.

விடாப்பிடியாக நான் போன் செய்தபோது, ஒரு நாள், என்னால் உன்னை சந்தோஷமா வெச்சுக்க முடியாது, என்னை மறந்துடு’னு அழ ஆரம்பிச்சுட்டார்.

இதுக்கு மேலே தாமதம் செய்தால், என் விஜய்யை இழந்துடுவேன்னு பயம் வந்துடுச்சு. அதனால், எனது வீட்டிலிருந்து புறப்பட்டு, விஜய்யின் வீட்டிற்கு சென்று, உங்க மகனைத் தவிர, வேற யாரையும் என் மனசாலும் நினைக்க முடியலைன்னு சொன்னேன்.

என் காதலின் உறுதியைப் பார்த்த விஜயின் அம்மா, எங்க ரெண்டு பேருக்கும் உடனே கல்யாணம் பண்ணிவச்சாங்க.

இருவரும் படித்துள்ளோம், வேலை கிடைத்துவிட்டால் சிறப்பாக வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என்னுடைய திருமணத்தை எனது குடும்பத்தார் ஏற்றுக்கொண்டார்கள், எங்க வீட்ல இப்படியொரு பொண்ணு பொறந்திருக்கேன்னு பெருமையா இருக்குன்னு சொல்றாங்க என சந்தோஷமாக கூறுகிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: