மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை சூறாவளியாக உருவாகியுள்ள நிலையில் தற்பொழுது வலுவடைந்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஊடகமொன்று இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,
சென்னையிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஜா புயலானது 30 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அத்துடன் குறித்த புயல் சென்னை மற்றும் நாகைக்கு இடையேயான கரையை கடக்கும் சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி காஜா புயல் கரையை கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வட தமிழகத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, காஜா சூறாவளி இலங்கைக்கு வட கிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் வட அகலாங்கு 13.4N, கிழக்கு நெடுங்கோடு 89.3E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளதாக நேற்றைய தினம் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அத்துடன் இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.