உச்ச நீதிமன்றில் சான்றாக மைத்திரிக்கு எதிராக திரும்பும் ஆதாரம்?

0

நாடாளுமன்றை ஒத்திவைத்தமைக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

இதனால் கொழும்பு அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளன.

சமகாலத்தில் சர்வதேச நாடுகளின் முழுப் பார்வையும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் சர்வதேச ஊடகங்கள் கொழும்பில் முகாமிட்டு, உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மகிந்த ராஜபக்ச அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வு உலக அரசியலையே புரட்டிப்போட்டது.

பூகோல அரசியலில் இலங்கை முக்கியத்துவம் பெற்றுள்ளமையின் காரணமாக அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

பிரதமர் பதவிக்கு இருவர் உரிமை கோரிவந்தனர். மைத்திரி – மகிந்த தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது.

எனினும், நானே சட்ட ரீதியான பிரதமர் என கூறிய ரணில் அலரி மாளிகையை விட்டு வெளியேறாது அங்கேயே கட்சி ஆதரவாளர்களுடன் தற்போது வரையிலும் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசியல் விவகாரம் பரபரப்படைய நாடாளுமன்றை உடனடியாக கூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும், உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தன.

இதனால் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொண்டு வந்த நிலையில், ஜனாதிபதி திடீரென நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இது அரசியல் கொதி நிலையை மேலும் தீவிரமாக்கியது. இதனையடுத்து, நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு மகிந்த – ரணில் தரப்பினர்கள் தீவிர ஆர்வம் காட்டி வந்த நிலையில், எதிர்வரும் 14ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படவிருந்தது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருந்தார். அத்துடன், ஜனவரி ஐந்தாம் திகதி பொது தேர்தலுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

விசாரணைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றின் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறிவருகின்றனர்.

ஏனெனில், நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்த ஜனாதிபதி, அதனை இரத்து செய்யாது, நாடாளுமன்றை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் நாளைய தினம் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், நாளைய தினம் வரையில் பொருத்திருந்தே உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியானதன் பின்னரே கொழும்பு அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பார்க்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை! மைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு!
Next articleஇலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை! தமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம்!