இலங்கை தொடர்பில் பேஸ்புக் நிறுவன ஆய்வில் வௌியிட்ட அதிர்ச்சித் தகவல்!

0
437

பேஸ்புக் நிறுவனமானது, இலங்கைப் போன்ற வளர்முக நாடுகளில் குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு போதுமான அளவு செயலூக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கண்டி, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலைமைகளுக்கு, பேஸ்புக் ஊடாக பரப்பப்பட்ட குரோதத் தகவல்கள் காரணமாக அமைந்தன.

ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், அதற்கு இனச்சாயம் பூசப்பட்டு பேஸ்புக்கில் பரவ விடப்பட்டமையால், பல்வேறு வன்முறை சம்பவங்கள் பதிவானதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாகவே இலங்கையில் சில தினங்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக் நிறுவனமானது, குரோத பதிவுகளை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போதும், அவை வளர்முக நாடுகளில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அம்பாறையில் வன்முறைகள் இடம்பெற காரணமாக அமைந்த காணொளிக்கு எதிராக பேஸ்புக் நிறுவனத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அது பேஸ்புக் நிறுவனத்தின் தணிக்கையுடன் முரண்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டதாக, மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, இலங்கையில் குரோதத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை சரியாக அடையாளம் கண்டு நீக்குவதற்கான பொறிமுறை ஒன்று பேஸ்புக் நிறுவனத்திடம் இல்லை.

இதற்கு பிரதான காரணம், பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று இலங்கையில் இல்லை என்பதாக இருக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: